ப. சிதம்பரம் கிரிமினலா..? ஜனநாயகப் படுகொலை பண்ணிட்டீங்க... பாஜக மீது தமிழக காங்கிரஸ் தலைவர் பாய்ச்சல்!

By Asianet TamilFirst Published Aug 22, 2019, 6:25 AM IST
Highlights

வழக்கிலேயே பெயர் இல்லாத ஒருவரை சிபிஐயும் அமலாக்கத்துறையும் கைது செய்துள்ளது. அவர் ஒரு முன்னாள் நிதியமைச்சர், உள்துறை அமைச்சர், தற்போதைய அவையில் எம்.பி. இந்தியாவின் நலனுக்காகப் பாடுபட்டவர் ப. சிதம்பரம். இந்தியாவின் ஜிடிபியை 9 சதவீதம் வரை உயர்த்திக் காட்டியவர்.

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை ஒரு கிரிமினலைப் போல கைது செய்திருப்பது மிகப் பெரிய ஜனநாயகப் படுகொலை என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். 
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன் ஜாமீன் பெற்றிருந்தார் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம். அவ்வப்போது இந்த முன் ஜாமீன் நீட்டிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் 7 மாதங்கள் கழித்து முன் ஜாமீன் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் நிராகரித்தது. இதனையத்து சிபிஐயும் அமலாக்கத் துறையும் ப. சிதம்பரத்தை கைது செய்ய முயற்சித்தன. ஆனால், நேற்று முன் தினம் இரவு முதல் ப. சிதம்பரம் எங்கே இருக்கிறார் எனத் தெரியாமல் சிபிஐ, அமலாக்கத் துறை அதிகாரிகள் அல்லாடினர். ப. சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தை நாடியும் உடனடியாக நிவாரணம் கிடைக்கவில்லை. 


அதேவேளையில் ப.சிதம்பரம் இருக்கும் இடம் தெரியாததால், அவருக்கு எதிராக அவுட் லுக் நோட்டீஸை சிபிஐயும் அமலாக்கத் துறையும் அளித்தது. இந்நிலையில்  நேற்று இரவு டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த ப. சிதம்பரம், பின்னர் தனது வீட்டுக்கு சென்றார். வீட்டுக்கு விரைந்த சிபிஐ, அமலாக்கத்துறை அதிகாரிகள், ப. சிதம்பரத்தை கைது செய்தனர். 
ப. சிதம்பரம் கைது செய்யப்பட்டது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கருத்து தெரிவித்தார். “வழக்கிலேயே பெயர் இல்லாத ஒருவரை சிபிஐயும் அமலாக்கத்துறையும் கைது செய்துள்ளது. அவர் ஒரு முன்னாள் நிதியமைச்சர், உள்துறை அமைச்சர், தற்போதைய அவையில் எம்.பி. இந்தியாவின் நலனுக்காகப் பாடுபட்டவர் ப. சிதம்பரம். இந்தியாவின் ஜிடிபியை 9 சதவீதம் வரை உயர்த்திக் காட்டியவர். அவரை ஒரு கிரிமினலை கைது செய்வதுபோல் கைது செய்திருப்பது ஜனநாயக படுகொலை. இந்த விஷயத்தில் பாஜக அரசு ஒரு தவறான முன் உதாரணத்தை உருவாக்கி உள்ளது” என்று தெரிவித்தார். 

click me!