மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி அளித்தது உச்ச நீதிமன்றம்... இனி நெடுஞ்சாலைத் தள்ளாட்டத்துக்கு தடையில்லை!

First Published Nov 13, 2017, 1:50 PM IST
Highlights
supreme court gives permission to reopen tasmac shops near highways


தமிழகத்தில் ஊரகப்பகுதிகளில் உள்ள  நெடுஞ்சாலைகளில் அண்மைக் காலமாக மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறக்க அரசுக்கு உச்ச நீதிமன்றம்  அனுமதி அளித்துள்ளது. 

மதுக்கடைகள் தொடர்பான பிரச்னை எழுந்தபோது, கடந்த ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி நாட்டில் உள்ள அனைத்து நெடுஞ்சாலைகளில் இருந்தும் 500 மீட்டர் தொலைவுக்குள் அமைந்த மதுக்கடைகளை மூட வேண்டும் என்று உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். இதை அடுத்து நெடுஞ்சாலைகளின் வரையறையையே மாற்றும் அளவுக்கு சில மாநில அரசுகள் முயற்சிகளை மேற்கொண்டன.

இதனிடையே, இந்த உத்தரவுக்கு  எதிர்ப்பு தெரிவித்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.  இந்த மனுக்களை ஆராய்ந்த உச்ச நீதிமன்றம், தமது முந்தைய தீர்ப்பில் சில திருத்தங்களை மேற்கொண்டது. அதன்படி, 20 ஆயிரத்துக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட பகுதிகளுக்கு அருகே அமைந்துள்ள நெடுஞ்சாலைகளைப் பொறுத்தவரை, அவற்றிலிருந்து 220 மீட்டர் தொலைவில் இருக்கும் மதுக்கடைகளை மூடினாலே போதுமானது என கடந்த மார்ச் மாதத்தில் உத்தரவிட்டது.

இந்நிலையில், நெடுஞ்சாலைகளை ஊரகச் சாலைகளாக மாற்ற தமிழக அரசு முயற்சி செய்வதாக வந்த குற்றச்சாட்டை அடுத்து இது குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கலானது. இதற்கு பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

தமிழக அரசு தொடர்பான இந்த வழக்கு இன்று நீதிபதி  தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது நீதிமன்றம் தமிழகத்தின் ஊரகப்பகுதி நெஞ்சாலைகளில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளைத் திறக்க அரசுக்கு அனுமதி அளித்தது. இது தொடர்பாக தமிழக அரசு அளித்துள்ள விளக்கங்கள் திருப்தியளிக்கும் வகையில் இருப்பதாகத் தெரிவித்த நீதிமன்றம், சம்பந்தப்பட்ட மாவட்ட  ஆட்சித் தலைவர்கள் தேர்வு செய்யும் இடங்களில் மூடப்பட்ட மதுக்கடைகளை திறக்கலாம் என்று தெரிவித்தது. 

டாஸ்மாக் மதுக்கடைகளைக் திறப்பது தொடர்பாக பொது மக்கள் பல்வேறு இடங்களில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 
 இந்தப் பிரச்னையை எதிர்கொள்ள தமிழக அரசு பெரும் போராட்டத்தை சந்திக்கும் நிலையில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு தமிழக அரசுக்கு பெருமூச்சு விடக் கிடைத்த ஒரு வாய்ப்பாக அமைந்திருக்கிறது.  

click me!