பென்சில் சீவுறதுக்கா அருவா கேட்டீங்க தளபதி: ஸ்டாலினை நோகும் தி.மு.க. தளகர்த்தர்கள்...

Asianet News Tamil  
Published : Jun 23, 2017, 07:46 PM ISTUpdated : Sep 19, 2018, 12:47 AM IST
பென்சில் சீவுறதுக்கா அருவா கேட்டீங்க தளபதி: ஸ்டாலினை நோகும் தி.மு.க. தளகர்த்தர்கள்...

சுருக்கம்

Subordinate expect vibrant action from DMK Active Chief stalin

‘இதற்கு மேல் என்ன வேண்டும் தளபதி? இனியாவது இயங்க துவங்குங்கள்!’ ஸ்டாலினை நோக்கி இப்படித்தான்  பிரார்த்திக்கின்றன தி.மு.க. தளகர்த்தர்களின் இதயங்கள்.

அது நிகழ்ந்து சில ஆண்டுகள் இருக்கும். அறிவாலயத்தில் கலைஞர் அரங்கம் நிறைந்திருந்தது, மாநிலம் முழுக்க இருந்து வந்திருந்த கழக நிர்வாகிகளின் மத்தியில் பேசிய ஸ்டாலின் ‘அ.தி.மு.க. இத்தனை வலுவாக இருக்கிறதென்றால் அதன் தலைமையிடம் சர்வாதிகாரம் இருக்கிறது. நம் இயக்கத்திலும் அப்படியொரு சூழல் தேவைப்படுகிறது.’ என்று நாசூக்காக தன் ஆசையை வெளிப்படுத்தினார். 

அப்போது ஸ்டாலினை பார்த்து முறைத்த கருணாநிதியால் இன்று தயாளு அம்மாளை கூட ரெகுலராய் அடையாளம் காண முடியவில்லை. அப்போது ஸ்டாலினை பரிதாபமாய் பார்த்த பேராசிரியர் இன்று அதே ஸ்டாலினை பிரமிப்பாய் பார்க்கிறார். 
காலம் மாறிவிட்டது, கலைஞரும் முடங்கிவிட்டார், செயல்தலைவர் ஆயாச்சு, அரசியலை புரட்டிப்போட்டு இயக்கத்தை ஆட்சி அரியணையேற்றும் செயலிலும் இறங்கிவிட்டால் அவரை தலைவராகவே ஏற்றுக் கொள்வார்கள் இயக்கத்தினர்.

ஆனால் அதைச் செய்வதில்தான் ஸ்டாலினுக்கு ஏக தயக்கம். இந்த விஷயத்தில்தான் நிர்வாகிகளுக்கு அவர்  மீது நெருடல். 
குழம்பிக் கிடக்கும் அ.தி.மு.க.வினுள் குச்சியை விட்டு மீன் பிடிக்கத்தான் அவருக்கு மனமில்லை. அட சரிந்து நிற்கும் சொந்த கழகத்தை சீர் படுத்துவதிலாவது விவேகமான முடிவை எடுக்கக்கூடாதா? என்றுதான் நோகின்றனர் முக்கிய நிர்வாகிகள். 

இந்த விவகாரம் பற்றி பேசும் கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் “தளபதி என்ன நினைத்தாரோ அது நடந்து கொண்டிருக்கிறது. அவர் கேட்ட சர்வாதிகாரமும் இப்போது அவர் கையில். தடுப்பதற்கும், தடை சொல்வதற்கும்  யாருமே இல்லை. 

இந்த சூழலை பயன்படுத்தி கழகத்தில் களையெடுப்புகளை நடத்தி, தரமேற்றி சீராக்கலாம். சமீப சில வாரங்களாக உட்கட்சி பிரச்னைகள் பற்றிய விசாரணைகள் மாவட்ட வாரியாக  நடந்து கொண்டிருக்கிறது. அறிவாலயமே ஆலமரமாகி பஞ்சாயத்துகள் போய்க் கொண்டிருக்கின்றன. 

சாதாரண கிளை செயலாளரில் துவங்கி மாவட்ட செயலாளர்கள் வரை அத்தனை பேர் மீதும் சரமாரியான குற்றச்சாட்டுகள் பரஸ்பரம் பறக்கின்றன. இந்த சந்தர்ப்பத்தின் மூலம் செயல்படாத மாவட்ட செயலாளர்களை, வெறுமனே பெஞ்சு தேய்க்கும் மாநில நிர்வாகிகளை, ஆளுங்கட்சியுடன் அண்டர் கிரவுண்டில் அண்ட்கோ போட்டிருக்கும் கழக நிர்வாகிகளை தூக்கி எறிந்து துவம்சம் பண்ணிடலாம். உட்கட்சிக்குள் தனி லாபி செய்து ஒற்றுமையை குலைக்கும் நிர்வாகிகளை அழைத்து ‘ஒழுங்கா இல்லேன்னா தூக்கி வீசிடுவேன்.’ அப்படின்னு தளபதி தாராளமா எச்சரிக்கலாம். 

யாரும் போர்க்கொடி தூக்கவும் மாட்டாங்க, புரட்சி செய்யவும் மாட்டாங்க. காரணம், அடுத்து தேர்தல் வந்தால் ஆட்சி அமைக்க அதிகம் வாய்ப்பிருப்பது தி.மு.க.தான்.  ரெண்டு தேர்தல்ல தோல்வியடைஞ்சு சம்பாதிக்கிறதுக்கு வாய்ப்பே இல்லாம இருக்கிற அல நிர்வாகிகள் எப்படா அதிகாரத்துக்கு வருவோம், அள்ளி முடிப்போம்ன்னு காத்திருக்காங்க. அதனால தளபதி மிரட்டினால் மிரண்டு பம்முவாங்களே தவிர உட்கட்சியில் பாய்ச்சல் காட்ட மாட்டாங்க. 

இந்த சூட்சமெல்லாம் தளபதிக்கும் தெரியும். ஆனால் வரிசையாக ஒவ்வொரு மாவட்டமாய் நடக்கும் விசாரணையின் முடிவில் ஆட்டம் போடும் பெரிய நிர்வாகிகளின் தலையில் கைவைக்காமல் கிளை பொருளாளர், ஒன்றிய அவைத்தலைவர், இலக்கிய அணி ஒன்றிய அமைப்பாளர் அப்படின்னு அல்லுசில்லு நிர்வாகிகளை மாத்திக்கிட்டு இருக்கிறாங்க. இந்த நிர்வாகிகளால் எந்த ஆட்டமும் போட்டு கட்சியின் பெயரை கெடுத்திட முடியாது. மீறிப்போனால் கிளை அளவில் மக்களிடம் அவப்பெயரை சம்பாதிச்சிருக்கலாம் அவ்வளவே. 

இந்த மாதிரி ஆளுங்க மேலே நடவடிக்கை எடுத்தாலென்ன, எடுக்கலேன்னா என்ன? ஒரு சட்டமன்ற தொகுதியையே பாதிக்கிற அளவுக்கு ஆட்டம் போடுற நிர்வாகிங்க மேலே கை வெச்சா கட்சிக்காரனுக்கு ஒரு பயம் வரும், மக்களுக்கும் தளபதி மேலே ‘நல்ல தலைவர்’ அப்படிங்கிற நம்பிக்கை வரும். ஆனா அதை செய்யவும் தயங்குறார். 

மிக மோசமான புகார்களுக்கு ஆளான நிர்வாகிகளை நடவடிக்கையிலிருந்து காப்பாற்றிவிடும் வேலையை பார்க்கிறது விசாரணைக்குழு நிர்வாகிகள்தான். இதற்கு பிரதிபலனா அந்த மாவட்ட நிர்வாகிகளிடமிருந்து பல வகையான ஆதாயங்களை அனுபவிக்கிறாங்க இவங்க. இந்த நபர்கள் மேலே ஆதாரத்தோடு புகார் கொடுத்தாலும் எந்த நடவடிக்கையும் இல்லை. 

ஆட்டம் போட்டு பேரை கெடுத்து வெச்சிருக்கிற நிர்வாகிகளை தேர்தலில் சீட் கொடுத்து நிறுத்தினால் எப்படிங்க  வெல்லும் எங்க கட்சி? மக்கள் மத்தியிலும், கட்சிக்காரர்களாலும் புகாருக்கு ஆளான நிர்வாகியை மக்கள் கண் எதிரே தூக்கி எறிஞ்சுட்டு, தன் கட்சியின்  அப்புராணி மனிதனை மாவட்ட செயலாளராக்கி, தேர்தலிலும் நிறுத்தி ஜெயிக்க வெச்சு அமைச்சராக்குவாங்க பாருங்க ஜெயலலிதா அதுதானுங்க அரசியல். 

பென்சில் சீவுறதுக்கு அரிவாள் தேடுன மாதிரி, கிளை செயலாளரை நீக்குறதுக்கா நீங்க சர்வாதிகாரம் கேட்டீங்க தளபதி?” என்று நறுக்கென முடிக்கிறார்கள் புலம்பலை. நிர்வாகிகளின் புலம்பலை ஸ்டாலின் காதில் ஓதிவிட்டோம். இனி அவர்பாடு அவர் கட்சியினர் பாடு...
 

PREV
click me!

Recommended Stories

TVK vs Congress: காங்கிரஸ் எச்சரித்தும் கேட்காத தவெக! விஜய் பிரதமர் விவகாரத்தில் கூட்டணி விரிசலா?
DA Hike: அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு! சட்டசபையில் வெளியான சூப்பர் அறிவிப்பு