ஸ்டான்லி மருத்துவ மாணவர் மரணம் குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும்.! மருத்துவர்கள் சங்கம் கிளப்பிய பகீர்.

By Ezhilarasan BabuFirst Published Jul 20, 2020, 1:54 PM IST
Highlights

முதுநிலை மருத்துவ மாணவர்கள், பயிற்சி மருத்துவர்கள், தொடர்ந்து 24 மணி முதல் 36 மணி நேரம் வரை தொடர்ச்சியாக பணி செய்ய கட்டாயப் படுத்தப்படுகின்றனர்.

ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி முதுநிலை மருத்துவ மாணவர் மரணம் குறித்து முழுமையான விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. உடுமலையை சேர்ந்த முதலாமாண்டு எலும்பு மற்றும் மூட்டு அறுவை சிகிச்சை முதுநிலை மருத்துவ மாணவர் கண்ணன் இன்று அதிகாலை 5 மணி அளவில் ஸ்டான்லி மருத்துவமனை கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர். இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ளார் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்க பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 

சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி  ,எலும்பு மற்றும் மூட்டு அறுவை சிகிச்சை ,முதலாம் ஆண்டு மாணவர் டாக்டர் கண்ணன்  இன்று அதிகாலை மர்மமான முறையில் மரண மடைந்துள்ளார். இது மிகுந்த வருத்தத்தையும், மன வேதனையையும் ,கவலையையும் அளிக்கிறது. அவரது மரணத்திற்கு உண்மையான காரணம் என்ன வென்று தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும்.மருத்துவர்கள் சார்பில் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். முதுநிலை மருத்துவ மாணவர்கள் ,பயிற்சி மருத்துவர்கள் உளவியல் ரீதியான பாதிப்புகளுக்கு அதிக அளவில் உள்ளாகிறார்கள். அதற்கான காரணங்களை கண்டறிந்து போக்கிட அரசு  நடவடிக்கை எடுக்க வேண்டும். முது நிலை மருத்துவ மாணவர்கள், பயிற்சி மருத்துவர்கள், தொடர்ந்து 24 மணி முதல் 36 மணி நேரம் வரை தொடர்ச்சியாக பணி செய்ய கட்டாயப் படுத்தப்படுகின்றனர். இதனால் உள மற்றும் உடல் உளைச்சல்களுக்கு மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் உள்ளாகிறார்கள். 

 

எனவே, எட்டு மணி நேரம் மட்டுமே வேலை என்பதை உறுதி செய்ய வேண்டும். அவர்களை கடுமையான உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாக்குவதை கைவிட வேண்டும். மன ரீதியாக பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு உரிய மனநல ஆலோசனைகளும் சிகிச்சைகளும் வழங்க வேண்டும்.மருத்துவ மாணவர்களின் குறைகளை கேட்டறிந்து சரி செய்ய, கல்லூரி அளவிலும், மாநில அளவிலும் பெற்றோர்கள், அரசு சாரா அமைப்புகள் அடங்கிய 'குறை தீர்க்கும் குழு' அமைக்க வேண்டும்.இது குறித்து ஏற்கனவே தொடுக்கப்பட்ட பொதுநல வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. டாக்டர் கண்ணன் குடும்பத்தினருக்கு ரூ 50 லட்சம்   நிவாரணம் வழங்கிட வேண்டும் எனவும் தமிழக அரசை சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கேட்டுக் கொள்கிறது. என வலியுறுத்தியுள்ளார். 

 

click me!