மக்களவை தேர்தலில் திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் இன்று மாலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ள நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மதுரை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
மக்களவை தேர்தலில் திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் இன்று மாலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ள நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மதுரை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து திண்டுக்கல்லில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியஅக்கட்சியின் தலைமை குழு உறுப்பினர் பிரகாஷ் காரத், ’’திமுக தலைமையிலான கூட்டணியில் மதுரை, கோவை மக்களவைத் தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும். நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல் மத்தியில் யார் ஆட்சி அமைக்க போகிறார்கள் என்பதற்கான தேர்தல் அல்ல. நாட்டின் மதசார்பின்மை, ஜனநாயகம், அரசமைப்புச் சட்டம் ஆகியவற்றை பாதுகாப்பதற்கான தேர்தலாகும். கடந்த 5 ஆண்டுகளாக மத்திய பாஜக ஆட்சி, ஆர்எஸ்எஸ் அமைப்பு மூலம் கட்டுப்படுத்தப்பட்டு வந்துள்ளது’’ என்று அவர் தெரிவித்தார்.
மதுரை தொகுதியை பொறுத்தவரை இதுவரை நடந்த 16 மக்களவை தேர்தலில் 8 முறை காங்கிரஸ் கட்சியும், 4 முறை கம்யூனிஸ்ட் கட்களும் தமிழ் மாநில காங்கிரஸ், ஜனதா கட்சியை சேர்ந்த சுப்ரமணியசுவாமி ஆகியோர் தலா ஒரு முறையும் வென்றுள்ளது. 2009ல் திமுக சார்பில் மு.க.அழகிரியும், 2014ல் அதிமுகவை சேர்ந்த ஆர்.கோபாலகிருஷ்ணன் கடந்த முறை வெற்றிபெற்றுள்ளனர். இந்நிலையில் மதுரை மீண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. நான்கு முறை மதுரை மக்களவை தேர்தலில் களமிறங்கிய திமுக ஒரே ஒரு முறை மட்டும் ( அழகிரி) வென்றுள்ளது. 2014ல் அதிமுகவை எதிர்த்து போட்டியிட்ட திமுகவை சேர்ந்த வேலுச்சாமி தோல்வியை தழுவினார்.
இம்முறை திமுக நேரடியாக மதுரையில் களமிறங்க வேண்டும் என திமுக நிர்வாகிகள் பலரும் தலைமையிடம் கேட்டுக்கொண்டனர். ஆனாலும் அழகிரி உள்ளடி வேலைகளில் ஈடுபடலாம் என்பதால் மதுரை தொகுதியை மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கி உள்ளார் மு.க.ஸ்டாலின். கடைசிவரை மதுரை தொகுதியில் திமுக களமிறங்கும் என நம்பிக்கையோடு காத்திருந்த திமுக தொண்டர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.