
எடப்பாடி பழனிசாமி அரசை திமுக கவிழ்த்து விடும் என்று தமிழக அமைச்சர்கள் பிரச்சாரம் செய்து வருகிறார்கள், ஆனால், குட்கா ஊழல் ஒன்றே அதிமுக அரசை கவிழ்த்துவிடும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கக்கோரி சென்னையில் ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து, அவர்கள் கைது செய்யப்பட்டு ராயபுரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டு இருந்தனர். அவர்களை தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று சந்தித்து பேசினார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின்,
மாணவர்களின் எதிர்காலத்தை எந்தளவுக்கு குட்டிச்சுவராக்க வேண்டுமோ, எவ்வளவு பாழடிக்க முடியுமோ, அதற்கு துணை நிற்கும் ஆட்சியாக இந்த குதிரை பேர ஆட்சி நடக்கிறது என தெரிவித்தார்.
பிரதமர் மோடி தமிழகம் வந்தபோது, நீட் தேர்வு பிரச்சினை தொடர்பாக அவரிடத்தில் இதுகுறித்துப் பேசி, உரிய அழுத்தம் கொடுத்தாரா என்று முதலமைச்சர் இதுவரை எதையும் வெளியில் சொல்லவில்லை. இதற்கு முன் டெல்லிக்கு சென்றபோது, இதுபற்றி என்ன பேசினார் என்பதையும் வெளியிடவில்லை என ஸ்டாலின் குற்றம்சாட்டினார்..
எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்களை பொறுத்தவரையில், அவர்களது தலையில் தொங்கிக் கொண்டிருக்கும் கத்திகளாக இருக்கக்கூடிய வருமான வரித்துறையினர் தொடர்ந்துள்ள வழக்குகள், அமலாக்கத்துறை வழக்குகள், குட்கா வழக்கு ஆகியவற்றில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவே, அவர்கள் பாஜகவிடம், மண்டியிட்டு, சரணாகதி அடைந்திருக்கிறார்களே தவிர, தமிழக மாணவர்கள் பற்றி அவர்களுக்கு எந்த கவலையும் இல்லை என்று தெரிவித்தார்.
அதிமுக தற்போது, சர்க்கஸ் கூடாரம் போல் உள்ளது என்றும், சர்க்கசில் இருப்பது போலவே இங்கும் சில பப்பூன்கள், சில ரிங் மாஸ்டர்கள் இருக்கிறார்கள் என கிண்டல் செய்தார்.
எடப்பாடி பழனிசாமி அரசை திமுக கவிழ்த்து விடும் என்று தமிழக அமைச்சர்கள் பிரச்சாரம் செய்து வருகிறார்கள், ஆனால், குட்கா ஊழல் ஒன்றே அதிமுக அரசை கவிழ்த்துவிடும் என்றும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.