ரஜினிகாந்த்திடம் மன்னிப்புக் கேட்டாரா ஸ்டாலின் ? முரசொலி பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த திமுக தலைவர்!!

By Selvanayagam PFirst Published Oct 29, 2018, 6:35 AM IST
Highlights

திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் நடிகர் ரஜினிகாந்த் குறித்து வெளிவந்த செய்தி தொடர்பாக அவருடன் திமுக தலைவர் ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தாக  கூறப்படுகிறது.

 

நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களுக்கு அறிவுரை கூறி அண்மையில்  அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அந்த அறிக்கையில், பணம், பதவியை எதிர்பார்த்து இருப்பவர்கள் இப்போதே மன்றத்தில் இருந்து விலகிவிடுங்கள் என்றும், மன்றத்தின் நடவடிக்கைகள் தனது கவனத்திற்கு வந்த பிறகே அறிவிப்புகள் வெளியிடப்படுகிறது என்றும் கூறியிருந்தார்.

ரஜினிகாந்தின் இந்த அறிக்கையை  திமுக  நாளிதழ் முரசொலி கடுமையாக கிண்டல் செய்திருந்தது.  ரஜினிகாந்திற்கு ரசிகர்கள் பதில் சொல்வது போல ஒரு கட்டுரையை சிலந்தி என்ற பெயரில் வெளியிட்டது. அந்த கட்டுரையில், ‘உங்களை (ரஜினி) நம்பி நாங்கள் ஆடிக்கொண்டு இருந்தோம்.

 ஆனால் நீங்களோ யாருடைய கயிற்று அசைவிலோ ஆடும் பொம்மையாகி விட்டீர்கள்’ என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த கட்டுரை தமிழகம் முழுவதும் ரஜினிகாந்த் ரசிகர்கள் மத்தியில் அதிர்வலையை ஏற்படுத்தியது. அரசியல் வட்டாரத்திலும் இது பரபரப்பாக பேசப்பட்டது.

இதைத்தொடர்ந்து, ரஜினிகாந்த் தனது ரசிகர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அதில், என்னையும், உங்களையும் (ரசிகர்கள்) யாராலும், எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது. நாம் செல்லும் பாதை நியாயமானதாக இருக்கட்டும் என்றும் அவர் தெரிவித்து இருந்தார்.

ரஜினிகாந்த் பற்றிய கட்டுரைக்கு பல்வேறு தரப்பில் இருந்து விமர்சனங்கள் எழுந்த நிலையில், திமுக நாளேடான முரசொலி  நேற்று விளக்கம் அளித்திருந்தது.
அதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து முரசொலியில் வெளிவந்த கட்டுரை சில நல்ல மனதை புண்படுத்துவதாக உள்ளதென்று கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. இனி அத்தகைய செய்திகளை வெளியிடுவதில் கவனத்துடன் செயல்படுமாறு ஆசிரியர் குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்  நடிகர் ரஜினிகாந்துடன் தொலைபேசி மூலம்  தொடர்பு கொண்ட மு.க.ஸ்டாலின் நேற்று  முரசொலி நாளிதழில் வெளியிடப்பட்ட செய்தி தொடர்பாக பேசியதாக கூறப்படுகிறது. அவர் ரஜினியிடம் வருத்தம் தெரிவித்திருக்கலாம் என தெரிகிறது.

click me!