ராமதாஸுக்கு எதிராக ஸ்டாலின் பற்ற வைத்திருக்கும் ‘அறக்கட்டளை அணுகுண்டு: பற்றி எரியுது பா.ம.க.

By Asianet TamilFirst Published Jan 13, 2020, 7:04 PM IST
Highlights

வெளிப்படையாக ராமதாஸுக்கு சவால் விடும் ‘வன்னியர் சத்ரியர் சாம்ராஜ்யம் ம் அமைப்பின்’ (இப்படியெல்லாமா ஒரு அமைப்பு இருக்குது?) தலைவரான சி.ஆர்.ராஜன் “விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகில் கோனேரிக்குப்பம் கிராமத்தில் வன்னியர் அறக்கட்டளை நிலம் மற்றும் கல்லூரிகள் சுமார் இருநூறு ஏக்கர் பரப்பளவில் உள்ளது. 

ராமதாஸுக்கு எதிராக ஸ்டாலின் பற்ற வைத்திருக்கும் ‘அறக்கட்டளை அணுகுண்டு’:  பற்றி எரியுது பா.ம.க. 

ஸ்டாலினின் கண்ணுக்குள் விரலைவிட்டு ஆட்டுவதாக டாக்டர் ராமதாஸ் பெருமை பேசிக் கொண்டிருக்கும் விவகாரம்தான் ’தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி அமைந்திருக்கும் இடமானது தலித் மக்களுக்கு வழங்கப்பட்ட பஞ்சமி நிலம்! அதை தி.மு.க. அபகரித்து, கட்டிடம் கட்டியுள்ளது.’ என்பதுதான். தி.மு.க.வோ இதை எதிர்க்கும் நிலையில்தான் ‘மூலப்பத்திரத்தை காட்டுங்கள் பார்ப்போம்!’ என்று சவால் விட்டுள்ளார் ராமதாஸ். அதோடு தினம் தினம் அ.தி.மு.க. மற்றும் பா.ம.க.வினர் தங்களது இணையதள பக்கங்களில் ‘மூலப்பத்திரம் எங்கே?’ என்று பதிவிட்டு, ஸ்டாலின் தரப்பை எரிச்சலூட்டிக் கொண்டுள்ளனர். 

இந்த சூழலில்தான் ஸ்டாலின் குஷியாகும் வண்ணம் ஒரு விவகாரம் கிளப்பப்பட்டுள்ளது ராமதாஸுக்கு எதிராக. அதாவது வன்னியர் சமுதாய மக்களின் பங்களிப்புடன் இயங்கி வந்த ‘வன்னியர் கல்வி அறக்கட்டளை’ என்பது ‘மருத்துவர் இராமதாஸ் கல்வி அறக்கட்டளை’ என்று பெயர் மாற்றப்பட்டுள்ள விவகாரமானது வெடித்திருக்கிறது ஒரு பூதமாக. ‘வன்னியர் சொந்த மக்களிடம் வசூலித்து உருவாக்கப்பட்ட இந்த அறக்கட்டளையை எப்படி ராமதாஸ் தன் பெயருக்கு மாற்றிக் கொள்ளலாம்?’ எனும் கேள்வி  கிளம்பியிருக்கிறது. 

இந்த விவகாரம் குறித்து வெளிப்படையாக ராமதாஸுக்கு சவால் விடும் ‘வன்னியர் சத்ரியர் சாம்ராஜ்யம் ம் அமைப்பின்’ (இப்படியெல்லாமா ஒரு அமைப்பு இருக்குது?) தலைவரான சி.ஆர்.ராஜன் “விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகில் கோனேரிக்குப்பம் கிராமத்தில் வன்னியர் அறக்கட்டளை நிலம் மற்றும் கல்லூரிகள் சுமார் இருநூறு ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இவை தொடங்கப்பட்டு  இத்தனை  ஆண்டுகள் ஆன பின்னர் தற்போது தனது பெயருக்கு மாற்றியுள்ளார் ராமதாஸ். 2008ம் ஆண்டில் அறக்கட்டளையை துவக்கும் போது ‘ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் ஒரு ரூபாயாவது கொடுக்க வேண்டும்’ என்றார் ராமதாஸ். மக்களோ வாரி இறைத்தனர். காரணம், வன்னிய சொந்தங்களின் வாரிசுகள் தரமான கல்வியை, மிக குறைந்த செலவிலோ அல்லது இலவசமாக படிக்க வேண்டும் எனும் எண்ணத்தில்தான். 

இந்த நிலத்தில் கல்வி நிலையங்கள் கட்டுவதற்கு செங்கல், கம்பி, செம்மண் என எல்லாமே வன்னிய மக்கள் போட பிச்சைதான். அறக்கட்டளையின் நிர்வாகத்திலும், பணத்திலும் ராமதாஸால் நியமிக்கப்பட்டவர்கள் கொள்ளை அடிக்கிறார்கள். அட பெயராவது சமூகப் பெயரில் இருக்கிறதே என்று மக்கள்  சிறு ஆறுதல் கொண்டிருந்த நிலையில், இப்போது அதையும் மாற்றிவிட்டார் தன் பெயருக்கு. 

பத்திரப்பதிவு முடிந்ததா என தெரியவில்லை, ஆனால் அறக்கட்டளையின் போர்டு மீட்டிங்கில் பெயர் மாற்றத்துக்கான தீர்மானம் போட்டு நிறைவேற்றி, கல்லூரிகளின் வாயிலில் இருந்த வன்னியர் கல்வி அறக்கட்டளை என்ற பெயர்ப்பலகையை மருத்துவர் ராமதாஸ் கல்வி அறக்கட்டளை என மாற்றிவிட்டனர். 

யார் சொத்தை யார் அபகரிப்பது? ஏழை எளிய வன்னிய மக்களின் சிறு சிறு தொகை உட்பட, வசதியான வன்னியர்களின் பெரும் தொகை பங்களிப்புகளை கொண்டு தொடங்கப்பட்ட இந்த அறக்கட்டளைக்கு இப்போது தோராயமாக பத்தாயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் சொத்துக்கள் இருக்கிறது. இதனை ராமதாஸ் குடும்பம் மட்டுமே சுருட்ட நினைத்தால் விடமாட்டோம்! 
இவ்வளவு பெரிய சொத்துக்கள் அரசிடம் பறி போய்விட கூடாது என்ற பயத்தில்தான் அ.தி.மு.க.வுடன் கூட்டணியே சேர்ந்தார் ராமதாஸ்.” என்று விட்டு வெளுத்திருக்கிறார். வன்னியர் கல்வி அறக்கட்டளை இப்படி திடீரென ராமதா கல்வி அறக்கட்டளையாக பெயர் மாற என்ன காரணம்? என்று  பா.ம.க.வின் முக்கிய நிர்வாகிகளிடம் கேட்டபோது ‘இது பற்றி எங்களுக்கு தெரியாது’ என்று  முடித்துவிட்டனராம். 

அதேவேளையில்  ராமதாஸுக்கு நெருக்கமானவர்களோ “வன்னிய சொந்தங்கள் இன்று கல்வி மற்றும் பல  விஷயங்களில் முன்னேறி நிற்க காரணமே மருத்துவர் ராமதாஸ்தான். வன்னியர்களின் முகமாக, இதயமாகவே மாறிவிட்ட அவர் பெயரில் இந்த அறக்கட்டளை இருப்பதைத்தான் வன்னியர் சொந்தங்கள் அத்தனை பேரும் விரும்புகின்றனர். 

இந்த நிலையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிலர் இதை எதிர்ப்பது போல் காட்டுகின்றனர். இவர்களை ஸ்டாலின் தான் தூண்டிவிடுக்கிறார். மூல பத்திரத்தை  வெளியில் காட்ட முடியாதவர், அறக்கட்டளை விவகாரத்தை திரித்து, திசைதிருப்புகிறார்.” என்கின்றனர். 
ஆஹாங்!

-    விஷ்ணுப்ரியா

click me!