"ஓபிஎஸ் முதல்வராக இருப்பாரா தொடர்வாரா?" - ஜல்லிக்கட்டு ஆர்ப்பாட்டத்தில் ஸ்டாலின் சந்தேகம்

Asianet News Tamil  
Published : Jan 03, 2017, 01:05 PM ISTUpdated : Sep 19, 2018, 02:56 AM IST
"ஓபிஎஸ் முதல்வராக இருப்பாரா தொடர்வாரா?" - ஜல்லிக்கட்டு ஆர்ப்பாட்டத்தில்  ஸ்டாலின் சந்தேகம்

சுருக்கம்

ஜல்லிக்கட்டை நடத்திட வேண்டும், அதற்கு மத்திய மாநில அரசுகள் துணை நிற்க வேண்டும் , அவர்களுக்கு நினைவு கூறும் வகையில் இந்த போராட்டத்தை நடத்துகிறோம். இந்த போராட்டத்தில் அதிகமாக இளைஞர் கூட்டம் திரண்டுள்ளதை பார்க்கிறேன். ஆர்வத்தோடு மட்டும்மல்ல அடங்காத ஆர்வத்தோடு கூடியுள்ளீர்கள்.

 எதற்காக , இந்த மண்ணின் பெருமையை நிலை நாட்டிட வேண்டும். கலாச்சாரத்தை பாதுகாத்திட நம்முடைய கவுரவத்தை நிலை நாட்டிடத்தான் இந்த போராட்டம்.

வரும் பொங்கலில் இந்த அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடக்க வேண்டும் அப்போது உங்களுடன் சேர்ந்து நானும் காண வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் அதற்கு முன்னர் அந்த ஜல்லிக்கட்டு நடைபெற , போராட்டம் நடத்தும் சூழ்நிலையில் உள்ளோம். 

இங்கே சொன்னார்களே தமிழகத்தை ஆளுகின்ற மத்திய  அமைச்சர்கள் ஜல்லிக்கட்டை பற்றி கூறும்போதெல்லாம் அது நடத்தப்படும் என தொடர்ந்து கூறிவரும் நிலையை பார்க்கிறோம். வாக்குறுதிகள் மக்களிடத்தில் சொல்கிறபோது அதை நிறைவேற்ற வேண்டும் என்கிற உணர்வோடு அதை சொல்ல வேண்டும்.

நமக்கு நாமே பயணத்தை நான் நடத்தினேன் , அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்தேன். 234 தொகுதிகளிலும் சந்தித்தேன். மதுரைக்கு நான் வந்த நேரத்தில் இதே அலங்காநல்லூர் பகுதிக்கு வந்தேன். அன்று நான் குறிப்பிட்டு சொன்னேன். மத்திய அரசு ஜல்லிக்கட்டு நடத்த உறுதியளிக்க வேண்டும். மாநில அரசு அழுத்தம் தரவேண்டும். 

தமிழகத்தின் பாஜக அமைச்சர்கள் இதற்கு காரணம் காங்கிரஸ் திமுக என்று நம்மீது பழி சொல்லும் நிலை உள்ளது. திமுக   ஆட்சியில் தான்  உரிய பாதுகாப்போடு முறையாக  நடத்தினோம்.  

அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள்  இரு அவைகளிலும் சேர்த்து 50 பேர் இருக்கிறார்கள் யாராவது ஒருவராவது ஒன்று சேர்ந்து குரலெழுப்ப கூடிய தெம்பு திராணி பெற்றுள்ளார்களா? தமிழர்கள் பாரம்பரிய விளையாட்டை பாதுகாக்கும் எண்ணம் அதிமுகவுக்கு இல்லை.

முதல்வராக இருந்த ஜெயலலிதா 110 விதியின் கீழ் நூற்றுக்கணக்கான அறிவிப்புகளை சொன்னார். அதில் ஒன்று தமிழ்த்தாய்க்கு சிலை வைப்பது என்பதாகும், அது சம்பந்தமாக ஒரு செங்கலையாவது வைத்துள்ளீர்களா? தமிழ் மக்கள் மீது உங்கள் அக்கறை அவ்வளவுதான். 

தமிழக முதல்வராக இருக்கிறாரே ஓபிஎஸ். அவர் முதல்வராக இருப்பாரோ தொடர்வாரோ தெரியாது. அது அவர்கள் உட்கட்சி பிரச்சனை. அவர் முதல்வராக இருந்தபோது  சொன்ன உறுதிமொழி ஜல்லிக்கட்டை நடத்த முயற்சி எடுப்போம் என்றார். ஆனால் இதுவரை நடக்கவில்லை.

இதை நான் குற்றமாக சொல்லவில்லை.  அவர்களுக்கு இல்லாத அக்கறையின்மையை பற்றித்தான் சொல்கிறேன். இது திமுக அதிமுக இடையே நடக்கும் ஜல்லிக்கட்டு அல்ல. தமிழர்களின் பாரம்பரிய ஜல்லிக்கட்டை கொண்டு வருவதற்கான போராட்டம் தான் இது.

தென் கடைகோடி மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் பொன்னார் தொடர்ந்து சொல்கிறார். ஜல்லிக்கட்டு பற்றி பேசும் போதெல்லாம்  வரும் , வரும் என்கிறார். இது வடிவேல் பட காமெடி போல் வரும் ஆனா வராது என்பது போல் உள்ளது. இதை காமெடியாக சொல்லவில்லை வேதனையோடு சொல்கிறேன்.

இன்னும் 11 நாட்கள் இடையில் உள்ளது ஆனால் இத்தகைய வாக்குறுதிகள் நிறைவேற்றக்கூடிய சூழ்நிலை இதுவரை இல்லை இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

PREV
click me!

Recommended Stories

TN CM Vijay: ஜோசப் விஜய் எனும் நான்..! நாளை காலை 10 மணிக்கு முதல்வராக பதவியேற்கிறார் விஜய்..
TN Election Results: தவெகவுக்கு விசிக ஆதரவு.. மெஜாரிட்டி கிடைச்சாச்சு.. முதல்வராகும் விஜய்.. திருமா போட்ட கண்டிஷன் இதுதான்!