
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் படத்தை சட்டப்பேரவையில் திறப்பது சட்டத்துக்கு விரோதமானது என்றும், ஜெ.வின் படத்தை திறந்து சட்டப்பேரவையின் மாண்பைக் குலைக்கக்கூடாது என்றும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
திமுக செயல் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், முறைகேடு செய்து சொத்து குவித்த வழக்கில் முதல் குற்றவாளி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா.
ஊழல் வழக்கில் உச்சநீதிமன்றத்தால் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டவர் ஜெயலலிதா. சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டபோது, ஜெயலலிதா உயிருடன் இல்லை. அந்த காரணத்தால்தான் ஜெயலலிதாவுக்கு தண்டனை அறிவிக்கப்படவில்லை.
இந்த நிலையில் தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதாவின் படத்தை திறப்பது சட்டத்துக்கு விரோதமானது. குற்றவாளியின் படத்தைச் சட்டப்பேரவையில் திறக்கும் அதிகாரம் சபாநாயகருக்கு இல்லை.
ஜெயலலிதாவின் படத்தை திறந்து சட்டப்பேரவையின் மாண்பை குலைக்கக்கூடாது. சட்டப்பேரவையில் ஜெயலலிதாவின் படம்திறக்கப்பட்டால் வரலாற்றில் அது கருப்பு நாளாக அமையும்.
மக்களாட்சி மாண்புகள் குழிதோண்டி புதைக்க சபாநாயகர் தயாராகிவிட்டார். சட்டப்பேரவை மாண்பை இழிவுபடுத்தும் வகையிலான ஜெயலலிதா படத்திறப்பு நிகழ்வை சபாநாயகர் கைவிட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.