
தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான டெங்கு ஆட்சி ஒழிந்தால் தான், டெங்கு ஒழியும் என திமுக செயல்தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் டெங்கு தீவிரமாகப் பரவிவரும் நிலையில், அவரது தொகுதியான சென்னை கொளத்தூர் தொகுதியில் திமுகவினருடன் இணைந்து குப்பைகளை அகற்றும் பணியில் ஸ்டாலின் ஈடுபட்டு வருகிறார். நிலவேம்பு கசாயம் வழங்குதல், டெங்கு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், துண்டுப் பிரசுரங்கள் வழங்குதல் போன்ற பணிகளையும் திமுகவினர் கொளத்தூர் பகுதியில் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோன்று தமிழகம் முழுவதும் டெங்கு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு திமுகவினருக்கு தான் அறிவுறுத்தியதாக ஸ்டாலின் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாததே டெங்குவின் தீவிரத்திற்குக் காரணம் என ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
உள்ளாட்சி அமைப்புகளில் மக்கள் பிரதிநிதிகள் இருந்திருந்தால், சுகாதாரப் பணிகளை தீவிரமாக மேற்கொண்டிருப்பார்கள். அதனால் டெங்கு கட்டுக்குள் கொண்டுவந்திருக்க முடியும். ஆனால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத குதிரைபேர எடப்பாடி பழனிசாமி அரசு, உள்ளாட்சித் தேர்தலை எப்படி தள்ளிப் போட முடியும்? என்பதில்தான் கவனமாக உள்ளார்கள்.
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான டெங்கு ஆட்சி ஒழிந்தால்தான் தமிழகத்தில் டெங்கு ஒழியும் என ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.