65 மாவட்ட செயலாளர்கள் முன்மொழிய தலைவர் பதவிக்கு மனு தாக்கல் செய்தார் ஸ்டாலின்!

By sathish kFirst Published Aug 26, 2018, 11:57 AM IST
Highlights

திமுக தலைவர் பதவிக்கான வேட்புமனுவை அக்கட்சியின் 65 மாவட்ட செயலாளர்கள் முன்மொழிய தாக்கல் செய்தார் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்.

திமுக தலைவர் பதவிக்கான வேட்புமனுவை அக்கட்சியின் 65 மாவட்ட செயலாளர்கள் முன்மொழிய தாக்கல் செய்தார் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்  

திமுக தலைவர் கருணாநிதி கடந்த 7-ஆம் தேதி  மறைந்ததையடுத்து திமுக தலைவர் பதவி யாருக்கு என்ற கேள்வி எழுந்தது. இதனிடையே அழகிரியும்  ஸ்டாலினுக்கு பல்வேறு வகையில் குடைச்சல் கொடுக்க ஆயத்தம் ஆனார். இதனால் அவசர அவசரமாக பொதுக் குழு கூடியது. இதில் ஸ்டாலினை திமுக தலைவராக தேர்வு செய்யலாம் என முடிவு செய்யப்பட்டு வரும் 28-ஆம் தேதி பொதுக் குழு கூடவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று வேட்புமனு தாக்கல் செய்யும் நடைமுறை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.  முக ஸ்டாலின் தலைவர் பதவிக்கும்   துரைமுருகன் பொருளாளர் பதவிக்கும் போட்டியிடுகின்றனர்.

 தலைவர், பொருளாளர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர் இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை திமுக தலைமை கழகத்தில் வேட்பு மனுவை தாக்கல் செய்யலாம். வேட்புமனுவினை திரும்பப் பெற 27-ம் தேதி பிற்பகல் 1.30 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 

27-ம் தேதி மாலை 5 மணியளவில் வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். 28-ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் இதற்கான வேட்பு மனுவை எடுத்துக்கொண்டு திமுக பொதுச்செயலாளர் அன்பழகனிடம் நேரில் சென்று ஆசிபெற்றார். இதனையடுத்து சென்னை மெரினாவில் அமைந்துள்ள திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்திற்கு சென்ற ஸ்டாலின், அங்கு வேட்புமனுவை வைத்து ஆசி பெற்றார். 

திமுக பொருளாளர் பதவிக்கு போட்டியிடும் துரைமுருகனும் வேட்புமனு கருணாநிதி நினைவிடத்தில் வைத்து ஆசி பெற்றார்.

 இதைத்தொடர்ந்து கோபாலபுரம் இல்லத்தில் உள்ள கருணாநிதி படத்துக்கு மலர்தூவி மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். இதையடுத்து கோபாலபுரத்துக்கு சென்ற இருவரையும் தயாநிதி மாறன், தமிழரசு உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர். பிறகு அண்ணா அறிவாலயத்துக்கு வந்த மு.க.ஸ்டாலின் 65 மாவட்ட செயலாளர்கள் முன்மொழிய திமுக தலைவர் பதவிக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்தார். 

அதேபோல் பொருளாளர் பதவிக்கு துரைமுருகன் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளார்.  இருவரும்  அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் ஸ்டாலின் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். மனுத்தாக்கல் செய்யும் போது திமுக நிர்வாகிகள் ஐ.பெரியசாமி, டி.ஆர்.பாலு, வி.பி.துரைசாமி, ராஜா முன்னிலையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. 

click me!