பாஜகவுக்கு எதிராக தேசிய கட்சிகளை ஒருங்கிணைக்கும் மெகா பிளான் !! ஸ்டாலினை சந்தித்தார் சந்திரபாபு நாயுடு...

By Selvanayagam PFirst Published Nov 9, 2018, 8:04 PM IST
Highlights

மத்தியில் இருந்து பாஜக அரசை வீழ்த்த ஆந்திர முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு கூட்டணி ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதற்காக ராகுல் காந்தி, சரத் பவார், முன்னாள் பிரதமர் தேவகவுடா,  குமாரசாமி உள்ளிட்டோரை சந்தித்துப் பேசிய அவர் இன்று சென்னையில்  திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினார்.

பாஜகவின் கூட்டணியில் இருந்து விலகிய பின்னர் ஆந்திர மாநில முதல் அமைச்சர் சந்திரபாபு நாயுடு, பாஜகவையும், மோடியையும் சரமாரியாக தாக்கி வருகிறார். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிரான கூட்டணியை ஒன்று திரட்டும் முனைப்பில் தற்போது செயலாற்றி வருகிறார்.

அதன் ஒருபகுதியாக அண்மையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார். அந்த பேச்சு வார்த்தையின் முடிவில், இருகட்சிகளின் கூட்டணி குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதேபோல், பாஜகவுக்கு எதிராக அனைத்து மாநில கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் எனவும் அவர் அப்போது கூறியிருந்தார்.

இதையடுத்து நேற்று மதசார்பற்ற ஜனதாதள தலைவரும் முன்னாள் பிரதமருமான  தேவேகவுடாவையும்,  கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியையும் சந்திரபாபு நாயுடு சந்தித்துள்ளார்.

இந்நிலையயில், தமிழகத்தில் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள திமுக கட்சியின் தலைவர் மு.க ஸ்டாலினை சந்திரபாபு நாயுடு சென்னையில் ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.

முன்னதாக ஸ்டாலின் வீட்டுக்கு வந்த சந்திர பாபு நாயுடுவை ஸ்டாலின் மலர் கொடுத்து வரவேற்றார். தொடர்ந்து அவர்கள் பாஜகவுக்கு எதிராக அமைக்கப்போகும் மெகா கூட்டணி குறித்து பேசினர்.

இந்த பேச்சுவார்த்தையின் போது துரைமுருகன், டி.ஆர்.பாலு, கனிமொழி எம்பி உள்ளிட்ட திமுகவினரும், தெலுங்கு தேசம் கட்சியினரும் இருந்தனர்,

 

click me!