
கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி உடல்நிலை சரியில்லை என்று கூறி அப்போதைய முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
சில நாட்களுக்கு பிறகு அவரது உடல்நிலையில் முன்னேற்றம் உள்ளது விரைவில் மக்களை சந்திப்பார் என மருத்துவர்களும் அமைச்சர்களும் மாறி மாறி பேட்டி அளித்தனர். மேலும் ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார், பேசினார் என்றெல்லாம் தெரிவித்து வந்தனர்.
ஆனால் 75 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காரணம் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு விட்டது என மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே பல நாட்டு மருத்துவர்களும் ஜெ விற்கு சிகிச்சை அளிப்பது வந்து வந்து சென்றனர். ஆனால் எவ்வித பலனையும் தரவில்லை.
இதையடுத்து ஜெ மரணத்தில் பல மர்மங்கள் உள்ளதாகவும் அவை விசாரிக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்தது. சசிகலாவுடன் இருந்த பன்னீர்செல்வமே இதுகுறித்து விசாரணை கமிஷன் வேண்டும் என போராடி வந்தார்.
அப்போது, சசிகலா தரப்பில் இருந்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ஜெயலலிதாவிடம் பேசினோம், அவர் நன்றாகதான் பேசி வந்தார். திடீரென இது போன்ற சூழ்நிலை நிலவிவிட்டது என தன் பிள்ளைகள் மீது சத்தியம் செய்து வாக்குறுதி அளித்தார்.
ஆனால் தற்போது எடப்பாடி, சசிகலா தரப்பு இரண்டாக பிரிந்து கிடக்கிறது. இதைதொடர்ந்து எடப்பாடி ஒபிஎஸ்சுடன் கைகோர்த்து சசிகலாவுக்கு எதிராக திரும்பியுள்ளார்.
தமிழக அமைச்சரவையும் எடப்பாடிக்கு சப்போர்ட் செய்து வருகிறது. இந்நிலையில், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், மருத்துவமனையில் ஜெயலலிதாவை பார்த்ததாகவும் அவர் இட்லி சாப்பிட்டதாவும் கூறியது பொய் என தெரிவித்தார்.
மேலும், சசிகலாவைத் தவிர மற்ற யாரும் ஜெயலலிதாவை பார்க்க அனுமதிக்கப்படவில்லை எனவும் அப்போது கூறிய பொய்க்காக மன்னிப்பு கேட்பதாகவும் தெரிவித்தார்.
இதைகேட்ட அதிமுகவினர் சீனிவாசன் செய்த சத்தியம் என்ன ஆனது என கேள்வி எழுப்பியுள்ளனர்.