பதவியே ஊழல் அரசியல்வாதிகளின் கவசம்: அதிர அதிர பேசிய சந்துரு!

Asianet News Tamil  
Published : Sep 11, 2017, 06:07 PM ISTUpdated : Sep 19, 2018, 01:10 AM IST
பதவியே ஊழல் அரசியல்வாதிகளின் கவசம்: அதிர அதிர பேசிய சந்துரு!

சுருக்கம்

Special Article about Justice K. Chandru

’ஊழலை ஒழிக்கும் சட்டங்களை  கொண்டு வர ஆட்சியாளர்கள் அஞ்சுகிறார்கள்.’ என்று நெருப்பு வார்த்தைகளில் விமர்சித்துள்ளார் ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு.
இந்த தேசத்தில் எந்த துறையில் அத்துமீறல் நடந்தாலும் அதை தட்டிக் கேட்டு, தண்டனை வழங்கும் ஒரே தளம் நீதிமன்றம்தான். அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு கண் கண்ட தெய்வமே நீதியரசர்கள்தான்.

ஆனால் பொதுவாக நீதிபதிகள் தன் நிலை விட்டு இறங்கி வந்து வெகுஜன மக்களை பரிச்சயப்படுத்திக் கொள்ள மாட்டார்கள். ஆனால் சில நீதிபதிகள் மட்டும் இதற்கு விதிவிலக்கு. ஜனரஞ்சகமான நடவடிக்கைகளின் மூலம் மக்களின் அபிமானத்தை வெல்வதோடு மட்டுமில்லாமல், சரியான தீர்ப்புகளையும் கூறி நீதித்துறையின் மாண்பு மேல் மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை மேலும் பலப்படுத்துவார்கள். அவர்களில் ஒருவராக இருந்தவர் கே.சந்துரு. 

பணியிலிருக்கும் போது தனது எளிமையான நடவடிக்கையின் மூலம் மக்களை ஈர்த்தவர், பணி நிறைவுக்குப் பின் அவ்வப்போது பொது நிகழ்வுகளில் கலந்து கொண்டு சில சக்திவாய்ந்த திரைகளை விலக்கி, அதிர்ச்சிகரமான உண்மைகளை வெளியுலகத்துக்கு காட்டுகிறார். 

அந்த வகையில் சமீபத்தில் கோயமுத்தூரிலுள்ள பாரதியார் பல்கலையில் நடந்த ஊழலுக்கு எதிரான கருத்தரங்கில் கலந்து கொண்டவர் அதிர்வேட்டாய் பேசினார் இப்படி...
“இந்த தேசம் ஊழலில் முதல் இடத்தில் உள்ளது என்று கூறுகிறார்கள்.

இது நேற்று, இன்றைய பிரச்னையில்லை. மனிதன் தோன்றியபோதே ஊழலும் தோண்றியுள்ளது. ஆனால் அதன் விகிதாச்சாரம் மாறியுள்ளது என்பதை கவனியுங்கள். நாட்டை ஊழலில் இருந்து காக்க வேண்டுமா அல்லது ஊழல்வாதிகளிடமிருந்து காப்பாற்ற வேண்டுமா என்பது முக்கியம். 

ஊழல்வாதிகளை பதவியில் உட்கார வைத்துவிட்டால் எளிதாக அவர்களை அதிலிருந்து அகற்றிவிட முடியாது. அந்த பதவியை கவசமாக பயன்படுத்த துவங்கிவிடுவார்கள். தலைவர்கள் மீது மக்கள் வைக்கும் கண் மூடித்தனமான மதிப்பீடு பல நேரங்களில் தவறுதலாக முடிகின்றது. இந்த சிக்கலையெல்லாம் களையவேண்டுமென்றால் நாம் போக வேண்டிய தூரம் இன்னும் வெகு தூரம். 

ஒளிவு, மறைவற்ற நிர்வாகமே ஊழலை ஒழிக்கும். இந்திய தண்டனைச் சட்டத்தில் லஞ்சத்தை தடுக்க சட்டம் உள்ளது, ஆனாலும் ஊழலை ஒழிக்க முடியவில்லை. ஊழல் தடுப்புச் சட்டம், அதிலும் திருத்தம் என பல கட்டங்களைக் கடந்தும் ஊழலை ஒழிக்க முடியவில்லை. 

சட்டங்களை மீறி ஊழல் நடக்கிறது என்றால் எளிமையான புகார் அமைப்பு தேவை. பல ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வரும் லோக்பால், லோக் ஆயுக்தா ஆகிய சட்டங்களை கொண்டு வர வேண்டும். ஆனால் ஊழலை ஒழிக்கும் இது போன்ற சட்டங்களை கொண்டு வர ஆட்சியாளர்கள் அஞ்சுகிறார்கள் என்பதுதான் வேதனை.” என்று நிறுத்தினார். 

உண்மைதானே! இதே உண்மைகள் தற்போது பதவியிலிருக்கும் உயர் நீதிபதிகளுக்கும் நிச்சயம் புரியும். அவர்கள் மனது வைத்தால் இந்த தேசம் உருப்பட்டுவிடும்!

PREV
click me!

Recommended Stories

இந்தியாவின் சோழவம்சத்தின் பெருமை..! வரலாற்றை அசிங்கப்படுத்திய ஒவைசி..!
விஜய்க்கு 'கை' கொடுத்த ராகுல்.. கூட்டணிக்கு அச்சாரமா? பிரவீன் சக்கரவர்த்தி சொன்ன விளக்கம்!