கொத்து குண்டு போடும் அதிமுக... வேட்டையில் வேலுமணி!! சமாளிப்பாரா கனிமொழி!!

By sathish kFirst Published Mar 5, 2019, 4:35 PM IST
Highlights

ராதாகிருஷ்ணனின் பிளானை மீறி கனிமொழியை தோற்கடித்தே தீர வேண்டுமென்று அதிமுகவின் கொங்கு மண்டலத்தின் முக்கிய அமைச்சரான எஸ்.பி.வேலுமணி நேரடியாகவே தூத்துக்குடியில் முகாமிட்டுள்ளாராம்.

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் திமுக மாநிலங்களவை உறுப்பினரும், மகளிரணி செயலாளருமான கனிமொழி போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. இதனால் தூத்துக்குடி தொகுதிக்கு உடபட்ட திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், ஓட்டப்பிடாரம் பகுதிகளின் திமுக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணன். அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில், அவர் வெற்றி பெற வேண்டும் என்பதால், மாவட்ட, திமுக,வினரும், கனிமொழி ஆதரவாளர்களும் முழு வீச்சில் இறங்கி உள்ளனர்.

இதற்காக திமுக நிர்வாகிகள் மற்றும் வாக்காளர்களுக்கு பிரமாண்ட கறி விருந்துக்கும் ஏற்பாடு செய்த அந்த தொகுதி, MLA, அனிதா ராதாகிருஷ்ணன். 300 கிடாக்கள் அதாவது 2000 கிலோ மட்டன் , 2000 கிலோ சிக்கன் பிரியாணி என விருந்து களைக்கட்டியது. ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அனிதா ராதாகிருஷ்ணன், " ஐந்து லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் கனிமொழி ஜெயிக்க வேண்டும். அதற்காக சிறப்பாக தேர்தல் பணியாற்றுங்கள். சிறப்பாக செயலாற்றி அதிக வாக்குகளை கனிமொழி அவர்களுக்கு பெற்றுத் தரும் நிர்வாகிகளுக்கு 100 பவுன் தங்க காசு பரிசளிக்கப்படும்" என  அனிதா ராதாகிருஷ்ணன் அதிரடியாக அறிவித்துள்ளார்.

அனிதா ராதாகிருஷ்ணனின் இந்த அறிவிப்பை கேட்டு திமுகவினர் மகிழ்ச்சியானதை விட, அதிமுகவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியதென்றே சொல்லலாம். இப்படி அதிரடி அறிவிப்பு ஒரு புறமிருக்க அனிதா ராதாகிருஷ்ணனின் பிளானை மீறி கனிமொழியை தோற்கடித்தே தீர வேண்டுமென்று அதிமுகவின் கொங்கு மண்டலத்தின் முக்கிய அமைச்சரான எஸ்.பி.வேலுமணி நேரடியாகவே தூத்துக்குடியில் முகாமிட்டுள்ளாராம்.

கோயம்புத்தூர் எஸ்.பி.வேலுமணிக்கு தூத்துக்குடியில் என்ன வேலை? தூத்துக்குடி மக்களவை தொகுதியைப் பொறுத்தவரையில், ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி, திருச்செந்தூர், ஒட்டப்பிடாரம், கோவில்பட்டி, விளாத்திகுளம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் வருகின்றன. இவற்றில் திருச்செந்தூர், தூத்துக்குடி ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகள் மட்டுமே திமுக வசம் உள்ள நிலையில், அமைச்சர் ஆளும்கட்சி, அமமுக கட்சி ஏன் அதிமுக கட்சி நிர்வாகிகளை கூட விட்டு வைக்காமல் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் உள்ள முக்கிய புள்ளிகளுக்கு ஆளுக்கு தகுந்த மாதிரி 25000 முதல் 40000 வரை பணப்பட்டுவாடா செய்து வருகிறாராம். இதுபோக வங்கி மூலம் ரூபாய் 5 லட்சம் தனிக்கடன் என மெகா ஆஃபர் கொடுத்துள்ளாராம். 

தூத்துக்குடியில், திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், ஓட்டப்பிடாரம்  பகுதிகளில், அதிமுக வாக்கு வங்கி, பிஜேபிக்கு இருக்கும் சப்போர்ட், தேமுதிகவுக்கு இருக்கும் கணிசமான வாக்கு என  அனிதா ராதாகிருஷ்ணனின் செல்வாக்கை மீறி இருக்கும் சந்து பொந்துகளில் உள்ள விஷயங்களில் கவனம் செலுத்துகிறாராம்.

எப்படியும் கனிமொழியை ஜெயிக்கவைத்தே தீருவேன் என சபதமெடுத்திருக்கும் அனிதா ராதாகிருஷ்ணன்,  கறி  விருந்து வைப்பது. ஜெயிக்க வைத்தால் தங்கம் பரிசு தருவது என அதிரடியான ஆஃபர் அளித்துள்ளார். இது போக அனிதா ராதாகிருஷ்ணனின் சொந்த செல்வாக்கு, மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் மகள் என்ற பலம், கனிமொழியின் மென்மையான குணம், ஜாதி வாக்கு (நாடார் சமுதாய வாக்கு) என பலமாக இருப்பதாலும் கூட, கனிமொழியை தோற்கடிக்க, அதிமுக அமைச்சரே தனி கவனம் எடுத்து தாறுமாறு பண்ணுவது திமுக தரப்பை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. ஆனாலும், எப்படியும் கனிமொழி ஜெயிப்பார் என சொல்லப்படுகிறது.  

click me!