கர்நாடக அமைச்சர்கள் சோனியா, ராகுலுக்கு ரூ.1000 கோடி வழங்கினார்களா? ‘எம்.எல்.சி.’யின் ரகசிய டைரியில் பரபரப்பு தகவல்கள்

 
Published : Feb 25, 2017, 09:53 PM ISTUpdated : Sep 19, 2018, 01:39 AM IST
கர்நாடக அமைச்சர்கள் சோனியா, ராகுலுக்கு ரூ.1000 கோடி வழங்கினார்களா?  ‘எம்.எல்.சி.’யின் ரகசிய டைரியில் பரபரப்பு தகவல்கள்

சுருக்கம்

கர்நாடக அமைச்சர்கள் சோனியா, ராகுலுக்கு ரூ.1000 கோடி வழங்கினார்களா?

எம்.எல்.சி.’யின் ரகசிய டைரியில் பரபரப்பு தகவல்கள்


கர்நாடகாவில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் அமைச்சர்கள் தங்களது பதவியை காப்பாற்றி கொள்வதற்காக சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோருக்கு ரூ.1000 கோடி பணம் கொடுத்ததாக எழுதப்பட்ட ரகசிய டைரி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரகசிய ைடரி

கர்நாடக மாநில பாஜக தலைவர் எடியூரப்பா அண்மையில் கூறியபோது, “வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த மார்ச் மாதம் காங்கிரஸ் சட்ட மேலவை உறுப்பினர் (எம்எல்சி) கோவிந்தராஜ் வீட்டில் சோதனை நடத்தியபோது ரகசிய டைரி ஒன்று கிடைத்தது.

அதில் சித்தராமையா தனது முதல்வர் பதவியை காப்பாற்றி கொள்வதற்காக காங்கிரஸ் மேலிடத்துக்கு ரூ.1,000 கோடி கொடுத்துள்ளார்.

இதே போல அமைச்சர்கள் சிலரிடம் இருந்து கோடிக்கணக்கில் காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் பணம் பெற்றுள்ளனர். இது தொடர்பான ஆதாரங்களை விரைவில் வெளியிடுவேன்'' என குற்றம் சாட்டினார்.

ரகசிய குறியீடுகள்

இந்நிலையில் வருமான வரித் துறை கைப்பற்றியதாக கூறப்படும், கோவிந்தராஜின் டைரி தகவல்கள் ஊடகங்களில் வெளியானது.

அதில் கர்நாடக அமைச்சர்கள், காங்கிரஸ் மேலிடத் தலைவர்களின் பெயர்கள் ரகசிய குறியீடுகளாக குறிக்கப்பட்டுள்ளன. சில தலைவர்களின் பெயர்கள் 2 எழுத்துகளால் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த டைரியில் உள்ள விவரங்கள் வருமாறு:-

2 கட்டங்களாக

எஸ்.பி. என்பவரிடமிருந்து ரூ.9 கோடியும், ஆர்.ஆர். என்பவரிடமிருந்து ரூ.9 கோடியும், ஊடகங்களுக்கு கொடுத்தது ரூ.7 கோடி என குறிப்பிடப்பட்டுள்ளது.

எம்.வி. மூலம் பெற்றது ரூ.32 கோடி, கே.ஜே. ம‌ற்றும் எம்.பி. ஆகியோரிடம் இருந்து முதல் கட்டமாக பெற்ற‌து ரூ.219 கோடி, இரண்டாவது கட்டமாக பெற்றது ரூ.24 கோடி, ஆர்.வி.யிடமிருந்து ரூ.16.75 கோடியும், ஹெச்.சி.யிடம் இருந்து பெற்றது ரூ.47 கோடி என அந்த‌ டைரியில் கூறப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சோனியா, ராகுல்

இது தொடர்பாக எடியூரப்பா கூறியபோது, “அண்மைக் காலமாக நான் தெரிவித்த தகவல்களையே ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டுள்ளன. காங்கிரஸ் எம்எல்சி கோவிந்தராஜ் வீட்டில் கைப்பற்றப்பட்ட டைரியில் ரகசிய குறியீடுகளின் மூலம் முதல்வர், அமைச்சர்கள் மற்றும் காங்கிரஸ் மேலிடத் தலைவர்களின் பெயர்கள் குறிக்கப்பட்டுள்ளன.

இதில் ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக கைமாறியுள்ளது. அந்த டைரியில் எஸ்.ஜி. என குறிப்பிடப்பட்டுள்ள பெயர் காங்கிரஸ் தேசிய தலைவர் சோனியா காந்தியையும், ஆர்.ஜி. என்ற பெயர் துணைத் தலைவர் ராகுல் காந்தியையும் குறிக்கிறது.

அமைச்சர்கள்

இதேபோல கே.ஜே. என்பது அமைச்சர் கே.ஜே. ஜார்ஜையும், எம்.பி. என்பது எம்.பி.பாட்டீலையும், ஆர்.வி. என்பது அமைச்சர் ஆர்.வி.தேஷ்பாண்டேவையும், ஹெ.சி. என்பது அமைச்சர் ஹெச்.சி.மகாதேவப்பாவையும் குறிக்கிறது.

எனவே மத்திய அரசு உரிய முறையில் விசாரணை நடத்தி உண்மையை கண்டறிய வேண்டும்'' என்றார்.

சித்தராமையா பதவி விலக கோரி போராட்டம்

இந்த விவகாரம் குறித்து மதச்சார்பற்ற ஜனதா தள மாநிலத் தலைவர் குமாரசாமி கூறியபோது, “ரகசிய டைரி விவகாரம் தொடர்பாக‌ முதல்வர் சித்தராமையா மற்றும் அமைச்சர்களிடம் லோக் ஆயுக்தா போலீஸார் விசாரணை நடத்த வேண்டும்.

இதில் குற்றம் உறுதி செய்யப்பட்டால் அனைவரையும் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். ஊழலை மறைக்க தலைமைக்கு லஞ்சம் கொடுத்த சித்தராமையாவும், அவரது அமைச்சரவை சகாக்களும் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்'' என கோரியுள்ளார்.

இதனிடையே முதல்வர் சித்தராமையா பதவி விலகக் கோரி பெங்களூரு, மைசூரு, ஷிமோகா உள்ளிட்ட இடங்களில் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொய்யான டைரி என்கிறது காங்கிரஸ்

காங்கிரஸ் எம்எல்சி கோவிந்தராஜ் கூறியபோது, “காங்கிரஸ் கட்சிக்கும், எனக்கும் அவப்பெயர் ஏற்படுத்தவேண்டும் என்ற நோக்கத்தில் இந்த டைரி வெளியிடப்பட்டுள்ளது.

அதில் உள்ள கையெழுத்து என்னுடையது அல்ல. எத்தகைய விசாரணைக்கும் நான் தயாராக இருக்கிறேன். என் மீது அவதூறு பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்''என்றார்.

முதல்வர் சித்தராமையா கூறியபோது, “கர்நாடகாவில் ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் எடியூரப்பாவும், எதிர்க்கட்சியினரும் எனது ஆட்சியின் மீது அவதூறான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வருகின்றனர்.

என் மீது ஊழல் புகார் இருந்தால் அதற்குரிய ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.

நீதிமன்ற‌ விசாரணையை சந்திக்க தயாராக இருக்கிறேன். ஊழல் புகாரில் சிக்கி சிறைக்கு சென்ற‌ எடியூரப்பா என்னைப் பற்றி பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. யாரோ எழுதிய டைரியில் ஏதோ எழுதி இருந்தால் அது காங்கிரஸுக்கு சொந்தமானதா?

அத்தனை கோடி ரூபாய் எங்கு இருக்கிறது? எதனையும் ஆராயாமல் ஊடகங்கள் செய்தி வெளியிடுவது வேதனையாக இருக்கிறது. உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட தேர்தல்களை மனதில் வைத்தே இந்த பொய்யான டைரி செய்தி வெளியிடப்பட்டுள்ளது'' என்றார்.

 

PREV
click me!

Recommended Stories

நான் காமராஜரை பற்றி பேசியதை வதந்தி பரப்புகிறார்கள்..! மன்னிப்புக்கேட்ட முக்தார்..!
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு