அதிமுகவில் அப்பனுக்கு பிறகு மகன்... மகனுக்கு பிறகு பேரன் கிடையாது... சாட்சியான எடப்பாடியின் கடிதம்..!

By Thiraviaraj RMFirst Published Oct 8, 2020, 1:09 PM IST
Highlights

அதிமுகவில் அப்பனுக்கு பிறகு மகன். மகனுக்கு பிறகு பேரன், பேரனுக்கு பின் கொள்ளு பேரன் என்கிற வம்சாவளி அரசியல் கிடையாது என்கிற வரிகள், வாரிசு அரசியல் நடத்தும் திமுகவிற்கு சரியான சவுக்கடி.
 

அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக தம்மை தேர்ந்தெடுத்ததற்கு நன்றி தெரிவித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எழுதியுள்ள கடிதம், அந்தக் கட்சித் தொண்டர்களிடையே ஆரவார வரவேற்பைப் பெற்றுள்ளது. 

ஒவ்வொரு அடிமட்டத் தொண்டரும் எடப்பாடி தேர்வு செய்யப்பட்டதை தங்களுக்குக் கிடைத்த கௌரவமாக கொண்டாடி மகிழ்கின்றனர். சாலைகள், டீக்கடைகள், சந்தைகள், பேருந்துகள் என மக்கள் கூடும் இடங்களில் எல்லாம் இது பற்றிய பேச்சுக்கள்தான். அந்தளவிற்கு எடப்பாடியின் கடிதம் மக்களையும், தொண்டர்களையும் வெகுவாக ஈர்த்திருக்கிறது.

’உழவன் வீட்டில் உதித்த ஒருவனும் உழைத்தால் முதல்வராக முடியும் என்பதற்கு ஜனநாயக சாட்சியாக இந்த எளிமை சாமானியனை ஒன்றரை கோடி தொண்டர்களின் இயக்கம் அடையாளப்படுத்தியிருக்கிறது’ என்கிற கடித வரிகள் இன்றைய நிஜத்தை அப்படியே வெளிப்படுத்தியிருக்கிறது.

’புரட்சித் தலைவர் தன் உதிரத்தின் ஈரத்தில் விதையூன்றிய இயக்கத்தில் ஒரு கடைக்கோடி தொண்டனாக அன்று என் அரசியல் வாழ்வை தொடங்கிய இந்த விவசாயியை ஊர் நின்று பார்க்கும் அளவிற்கு உச்சத்திற்கு அழைத்து வந்தது, நான் தினந்தோறும் பூஜித்து வணங்கும் புரட்சித் தலைவி அம்மாவின் கருணைக் கரங்கள்தான்’ என எடப்பாடி கூறியிருப்பது அவரது நன்றியுணர்ச்சியைக் காட்டுகிறது. ஏற்றிவிட்ட ஏணிகளை ஒருபோதும் மறவாத அவரது நல்லியல்புக்கு இது சிறந்த எடுத்துக்காட்டு என்றே சொல்லலாம்.

இதேபோல முதல்வர் வேட்பாளராக தம்மை அறிவித்த கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என ஒருவர் விடாமல் அனைவருக்கும் நன்றி தெரிவித்திருப்பது அவரது பரந்த மனதை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

அரசியல் ரீதியாக இந்த கடிதம் அதிமுக தொண்டர்களிடையே மிகுந்த எழுச்சியையும், நம்பிக்கையையும் உருவாக்கியிருக்கிறது. 2021-லும் மூன்றாம் முறையாக ஆட்சியை தொடர்கிற அரசியல் புரட்சியை கழக உடன்பிறப்புக்களின் ஒத்துழைப்போடு நிறைவேற்றிக் காட்டுவேன் என்பது சத்தியம் என்கிற எடப்பாடியின் உறுதிமொழி தொண்டர்களுக்கு யானை பலத்தைத் தந்திருக்கிறது. இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாக தமிழகம் உருவெடுத்திருப்பதை சுட்டிக்காட்டியுள்ள அவர், தனது ஆட்சிக்காலத்தில் நிகழ்த்தப்பட்டுவரும் சாதனைகளையும் பட்டியலிட்டுள்ளார்.

காவேரி உரிமை மீட்பு, டெல்டா பிரதேசத்தை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிப்பு, அத்திக்கடவு அவிநாசி திட்டம் தொடக்கம், 3 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு தொழில் முதலீடுகள் ஈர்ப்பு, குடிமராமத்து திட்டம், கொரோனா காலத்தில் சிறப்பான நிவாரண நடவடிக்கை,புதிய மாவட்டங்கள் உருவாக்கம், மருத்துவப் படிப்பில் அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு 7% ஒதுக்கீடு என இந்த சாதனை பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. எதிர்வரும் தேர்தல் பிரச்சாரத்திற்கு இந்த சாதனை பட்டியல் ரொம்பவே தோள் கொடுக்கும்.

 அதிமுகவில் அப்பனுக்கு பிறகு மகன். மகனுக்கு பிறகு பேரன், பேரனுக்கு பின் கொள்ளு பேரன் என்கிற வம்சாவளி அரசியல் கிடையாது என்கிற வரிகள், வாரிசு அரசியல் நடத்தும் திமுகவிற்கு சரியான சவுக்கடி.

‘’ கடந்த சில நாட்களாக ஊடகங்களில் வெளியான செய்திகளைப் பார்த்து கலங்கிப் போயிருந்தோம். ஆனால் எந்த நேரத்தில் முதல்வர் வேட்பாளர் எடப்பாடிதான் என அறிவிப்பு வெளியானதோ அந்த நிமிடமே எங்களுக்குள் புது ரத்தம் பாய்ந்த மாதிரியான உணர்வு ஏற்பட்டிருக்கிறது. ஒரு தலைவர் என்றாலும் எடப்பாடியை எங்களில் ஒருவராகவே பார்க்கிறோம். அவருடைய ஒவ்வொரு செய்கையிலும் எளிமை வெளிப்படுவதைக் கண்டு கட்சிக்கு அப்பாற்பட்ட பொதுமக்கள் மத்தியிலும் எடப்பாடிக்கு ஆதரவு பெருகி வருகிறது. 

அம்மாவின் மறைவுக்குப் பிறகு என்னாகும் என்கிற கவலை எங்களை வாட்டி எடுத்தது உண்மை. இப்போது அந்த கவலை முழுமையாக நீங்கிவிட்டது. எடப்பாடியின் உணர்ச்சிமிக்க இந்த கடிதம் இதை சாதித்திருக்கிறது’’ என்கிறார்கள் இது தொடர்பாக கருத்து தெரிவித்த அதிமுக தொண்டர்கள் பலரும்.

click me!