
தமிழகத்தின் புதிய ஆளுநராக பொறுப்பேற்றுள்ள பன்வாரிலால் புரோஹித்தை ஆளுநர் மாளிகையில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநரை சந்தித்து வாழ்த்துக்களைத் தெரிவித்த விஜயகாந்த், தமிழகத்தில் நிலவும் பிரச்னைகள் குறித்த கடிதத்தை ஆளுநரிடம் கொடுத்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜயகாந்திடம் கூட்டணி குறித்து கேட்கப்பட்டது. இனிமே யாருடனும் கூட்டணியே கிடையாது. அதனால் கூட்டணியைப் பற்றி கேட்காதீர்கள் என கும்பிடு போட்டார்.
சிவாஜி, கமலை எல்லாம் மிஞ்சிய நடிகர்கள் பழனிசாமியும் பன்னீர்செல்வமும் என விமர்சித்தார். சிவாஜி, கமல் எல்லாம் திரையில்தான் நடிப்பார்கள்; ஆனால் பழனிசாமியும் பன்னீர்செல்வமும் நிஜத்திலே நடிப்பவர்கள் என கடுமையாக விமர்சித்தார்.
ரஜினி மற்றும் கமல் ஆகியோரின் அரசியல் பிரவேசம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, அவர்களுக்கு முந்தி அரசியலுக்கு வந்த என்னைப் பற்றி அவர்களிடம் கேளுங்கள் என தெரிவித்தார்.
தமிழகத்தின் எதிர்க்கட்சிகள் அனைத்தும் டெங்கு தொடர்பாக பேசியும் விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்திவரும் நிலையில், தேமுதிக சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையே என கேட்டதற்கு, அவர்கள் எல்லாம் டெங்குவை கட்டுப்படுத்திவிட்டார்களா? என காட்டமாக பதிலளித்த விஜயகாந்த், பத்திரிகையாளரை நோக்கி நாக்கை துறுத்தினார்.