கத்தி மேல் எடப்பாடி அரசு... வளைக்கத் திட்டமிடும் மு.க.ஸ்டாலின்... கவிழ்க்க நோட்டமிடும் டி.டி.வி..!

By Thiraviaraj RMFirst Published Apr 19, 2019, 6:25 PM IST
Highlights

இந்த தேர்தல் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சியை நிர்ணயிக்கும் தேர்தலாக அமைய உள்ளது.

இந்த தேர்தல் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சியை நிர்ணயிக்கும் தேர்தலாக அமைய உள்ளது. அதிமுக உடைந்தபோது, பல்வேறு கட்டங்களில் தனது பதவியையும், கட்சியையும் தக்க வைத்துக் கொண்டவர் முதல்வர் பழனிச்சாமி. ஒரு கட்டத்தில் துணை முதல்வர் பன்னீர் செல்வமும் இவரை அனுசரித்து செல்ல வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டார். 

அரசுக்கு எதிராக இடையில் எழுந்த பல்வேறு போராட்டங்களையும் சாதுரியமாக கையாண்டார் முதல்வர். சில இடங்களில் போராட்டக்காரர்களின் கோரிக்கையை ஏற்கவில்லை. பிற விவகாரங்களில் வெற்றி பெற்றாலும், டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவு கொடுத்து வந்த 18 எம்.எல்.ஏக்களை எடப்பாடியால் வசப்படுத்த முடியாமல் போது தான் சோகம். இதனால், சட்டமன்றத்தில் காலியான இடங்களின் எண்ணிக்கை 18 ஆகியது. தற்போது பிற தொகுதிகளையும் சேர்த்து 22 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் முடிவுகள் மே 23ல் வெளியாக இருக்கிறது. 

முதல்வர் பதவி அதிமுகவில் ஏற்பட்ட பிரிவினையால், சசிகலாவால் எடப்பாடி பழனிச்சாமிக்கு வழங்கப்பட்டது. மக்களால் இவர் நேரடியாக முதல்வர் பதவிக்கு தேர்வு செய்யப்படவில்லை. கடந்த 2016 தேர்தலில் மக்கள் ஜெயலிதாவுக்கு வாக்களித்தனர். 

எப்போதும் கொங்கு மாவட்டங்கள் அதிமுகவுக்கு சாதகமாகவே இருந்துள்ளன. இது இன்று நேற்று அல்ல. எம்.ஜி.ஆர்., காலத்தில் இருந்து கொங்கு மாவட்டங்கள் அதிமுகவின் கோட்டையாக இருந்து வருகிறது. ஆனால், இந்த இருபெரும் தலைவர்களுக்குப் பின்னர் எடப்பாடி பழனிச்சாமிக்கு இருக்கும் ஒரே பலம் அவர் சார்ந்த சமுதாயம்தான். பொதுவாக கொங்கு மண்டலத்தில் அவர் சார்ந்த சமுதாயத்தினர் அதிகம். ஆனால், தற்போது பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், மாநிலங்களில் இருந்தும் தொழில் நிமிர்த்தமாக மக்கள் கொங்கு மண்டலங்களில் குடியேறியுள்ளனர். இவர்களது வாக்குகளை கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது. 

மத்திய அரசு கொண்டு வந்த ஜிஎஸ்டி, பண மதிப்பிழப்பு போன்ற காரணங்களாலும், சென்னை சேலம் 8 வழிச்சாலைக்கு நிலம் ஆக்கிரமிப்பு செய்த காரணத்தாலும் மக்கள் கடுமையான கோபத்தில் உள்ளனர். பாஜகவுடன் கூட்டணியில் இருப்பதால் இதுவும் அதிமுகவுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். 

கூடுதலாக முதல்வருக்கு பலம் கொங்கு மண்டலத்தில்தான். சூலூர் தவிர இடைத்தேர்தல் நடக்கும் மற்ற 21 சட்டமன்றங்களிலும் முதல்வருக்கு பலம் இருக்கிறதா என்றால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இந்த சட்டமன்ற தொகுதிகள் தினகரனுக்கும், திமுகவுக்கும் சாதகமாக உள்ளன என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவித்தன. அரசுக்கு எதிரான வாக்குகள் திமுகவுக்கு செல்ல வாய்ப்புள்ளது. அதிமுக உண்மை தொண்டனின் வாக்குகள் அதிமுகவுக்கும். அமமுகவுக்கும் செல்லும். சூலூர் தவிர இடைத்தேர்தலை சந்திக்கும் எந்த சட்டமன்ற தொகுதிகளும் கொங்கு மண்டலத்தில் இல்லை. ஆதலால் சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் ஆச்சரியத்தை அளித்தாலும் அளிக்கலாம். 

தன்னை மாநில ஆட்சியிலும், கட்சியிலும் நிலை நிறுத்திக் கொள்ள முதல்வருக்கு இந்த 22 சட்டமன்ற முடிவுகள் முக்கியமானது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த நிலையில் 20 தொகுதிகளில் வென்று மு.க.ஸ்டாலின் ஆட்சியை வளைக்க காய் நகர்த்தி வருகிறார். ஆனால், டி.டி.வி.தினகரனோ எடப்பாடியின் சீட்டை கவிழ்க்க திட்டமிட்டு இருக்கிறார். 

click me!