அதிமுக என்பது தலைவர்களை மட்டுமல்ல; தொண்டர்களை நம்பியே உள்ளது என்று தமிழக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.
அதிமுகவின் அடுத்த முதல்வரை எம்.எல்.ஏ.க்கள் கூடி முடிவு செய்வார்கள் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறிய கருத்து, அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தி அடங்கியிருக்கிறது. இந்நிலையில் அதிமுக தலைவர்களை நம்பி இல்லை என்று புதிய கருத்தைத் தெரிவித்துள்ளார். மதுரையில் அதிமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார் அமைச்சர் செல்லூர் ராஜூ. “மதுரையை நிச்சயமாக இரண்டாவது தலைநகராக மாற்ற வேண்டும். தலைநகராக சென்னை இருந்தாலும் இது அரசியல் முடிவை தீர்மானிக்கும்.
மதுரையை தலைநகராக்க வேண்டும் என்று எம்ஜிஆர் விரும்பினார். அதனால்தான் உலகத் தமிழ் மாநாட்டை மதுரையில் நடத்தி காட்டினார் எம்.ஜி.ஆர். இதேபோல உலகத் தமிழ்ச் சங்கத்தையும் மதுரையில் எம்.ஜி.ஆர். தொடங்கினார். முதல்வரும் துணை முதல்வரும் இணைந்து மதுரையை இரண்டாவது தலைநகரமாக அறிவிக்க வேண்டும். அவர்கள் இருவரும் நிச்சயமாக அறிவிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
தற்போது சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. தேர்தலுக்கு ஒவ்வொரு கட்சியும் தயாராகும். அந்த வகையில் கட்சியினரை உற்சாகப்படுத்த பாஜக தலைவர் சில கருத்துக்களைச் சொல்லிவருகிறார். நாங்கள் தோழமை கட்சிக்கு உரிய மரியாதையை பாஜகவுக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறோம். தற்போது வரை பாஜகவுடன் கூட்டணி தொடர்கிறது. தேர்தல் நேரத்தில் கூட்டணி தொடர்பாக தலைவர்கள் முடிவு செய்வார்கள். அதிமுக என்பது தலைவர்களை மட்டுமல்ல; தொண்டர்களை நம்பியே உள்ளது” என்று செல்லூர் ராஜூ தெரிவித்தார்.