
அரசியல் ஒரு விநோதமான சதுரங்க ஆட்டம் என்பதை அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் நிறுபித்துக் கொண்டே இருக்கின்றன.
ஒரு காலத்தில் ஸ்டாலினின் வலது கரமாக நின்று அடிதடி, அரவணைப்பு, அட்ராசிட்டி, ஆஸம்! என்று எல்லா லெவல் அரசியலையும் செய்தவர் மாஜி அமைச்சர் பரிதி இளம் வழுதி. இளைஞரணி துவங்கிய காலத்திலிருந்தே ஸ்டாலினுடன் இருந்ததால் இவர் மீது மாநிலம் முழுக்க தி.மு.க.வினருக்கு பெரும் மரியாதையும், அச்சமும் இருந்தது.
அதேபோல் சென்னை சிட்டியில் ஜெயலலிதாவின் போர்ப்படை தளபதியாகவே இருந்தவர் சேகர்பாபு. எந்த லெவலுக்கும் இறங்கி அதிரடி அரசியலை நடத்திடக்கூடிய மனிதர். சேகர்பாபு எம்.எல்.ஏ. வருகிறார் என்றாலே ஒரு காலத்தில் சென்னை சிட்டியே நடுங்கிய காலங்கள் உண்டு. இவருக்கு கைநிறைய அதிகாரத்தையும் ஜெ., கொடுத்து வைத்திருந்தார்.
இந்நிலையில் காலத்தின் கோலம், உட்கட்சி பூகம்பங்களால் பரஸ்பரம் இந்த இரு நபர்களும் முகாம் மாறிக் கொண்டனர். ஜெயலலிதாவிடமிருந்த சேகர் பாபு ஸ்டாலினிடமும், ஸ்டாலினிடமிஉர்ந்த பரிதி இளம் வழுதி ஜெயலலிதாவிடமும் ஐக்கியமாகின. இதில் பரிதிக்கு மாநில பதவி ஒன்றை கொடுத்து ஒரு ஓரத்தில் உட்கார வைத்தார் ஜெயலலிதா. ஏற்கனவே சென்னையில் கோலோச்சிக் கொண்டிருந்த அ.தி.மு.க. புள்ளிகள் பரிதியை மேலெழுந்து வரவே விடவில்லை.
ஆனால் சேகர் பாபுவின் நிலை அப்படியில்லை. தனக்கிருக்கும் பழைய செல்வாக்கை அப்படியே தி.மு.க.விலும் பயன்படுத்தி சரசரவென இக்கட்சியிலும் பெரும் இடத்தை பிடித்தார். இப்படியொரு அதிரடி பேர்வழியை ஸ்டாலினும் விரும்பியதால் சேகருக்கு வழி தானாக அமைந்தது.
இந்நிலையில் ஜெயலலிதாவின் இறப்புக்குப் பின் எந்த ஒரு பிரதிநிதித்துவமும் வழங்கப்படாமல், சீண்டப்படாத நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார் பரிதி. உடம்பிலிருக்கும் சுகர் பிரச்னை வேறு அவரை படுத்தியெடுக்கிறது.
இந்நிலையில் சமீபத்தில் சென்னை வேப்பேரியில் நடந்த ஸ்டாலின் பிறந்தநாள் விழா கூட்டத்தில் மைக் பிடித்த சேகர்பாபு “எழவு வீடுன்னா பொணம், கல்யாண வீடுன்னா மாப்பிள்ளைன்னு சுத்திட்டு திரிஞ்சார் பரிதி இளம் வழுதின்னு ஒரு மனுஷன். எல்லாமே நான் தான், நான் தான்னு அலைஞ்ச மனுஷனோட கதி இப்போ என்ன ஆச்சுன்னு உங்களுக்கெல்லாம் தெரியும்ல? எங்கேய்யா போச்சு அந்த மாப்பிள்ளை பொணம்?” என்று சாட்டையடி அடித்தார்.
சேகர் பாபுவின் இந்த நக்கல் பேச்சு, பரிதியின் காதுகளை எட்டியிருக்கிறது. இயலாமையின் உச்சத்தில் விரக்தியாய் சிரித்துவிட்டு அமைதியாகிவிட்டாராம்.
அதேவேளையில் ‘ஸ்டாலின் பிறந்தநாள் கூட்டத்துல பழைய பரிதியை பற்றி சேகர்பாபு பேச வேண்டிய அவசியமென்ன?’ என்று கேள்வி எழுந்ததற்கு ‘தி.மு.க.வில் சேகர்பாபுவுக்கு எதிராக புதிதாக சிலர் அதிரடி அரசியலை செய்ய துவங்கியிருக்கின்றனர். அவர்களில் முக்கியமானவர் எலும்பூர் எம்.எல்.ஏ. ரவிச்சந்திரன். இது சேகருக்கு பிடிக்கவில்லை. அவரை மறைமுகமாக மிரட்டி வைக்கவே இப்படி பரிதி கதையை இழுத்துப் பேசியிருக்கிறார் சேகரு.” என்கின்றனர்.
என்னா வில்லத்தனம்!?...