கொரோனாவை சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்கும் தமிழக அரசு..! கொந்தளிக்கும் சீமான்..!

By Manikandan S R SFirst Published May 5, 2020, 10:44 AM IST
Highlights

தமிழகத்தில் நோய்த்தொற்று சமூகப் பரவலை எட்டியுள்ள நிலையில் மதுபானக்கடைகளைத் திறப்பது கொரோனாவை சிவப்புக்கம்பளம் விரித்து வரவேற்பதற்கு ஒப்பானது. அத்தகைய வரலாற்றுப் பிழையை செய்து பெரும்பழிக்கு ஆளாக வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன். ஆகவே, மதுபானக்கடைகளைத் திறக்கும் முடிவினை உடனடியாகக் கைவிட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்

இந்தியா முழுவதும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்தில் அசுர வேகம் எடுத்துள்ளது. நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவில் 527 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,550 ஆக உயர்ந்து இருக்கிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் இருக்கும் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மே 7ம் தேதி முதல் மீண்டும் திறக்கப்பட இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மே 7 முதல் தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மதுக்கடைகள் செயல்படும் என அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மதுக்கடைகளை திறப்பது கொரோனா வைரஸ் நோயை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பதற்கு சமம் என நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், வரும் 7 ஆம் தேதி முதல் மதுபானக்கடைகளைத் திறக்கவிருப்பதாக தமிழக அரசு அறிவித்திருப்பது பேரதிர்ச்சி தருகிறது. இம்முடிவு 40 நாட்களுக்கு மேலாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஊரடங்கை ஒட்டுமொத்தமாகப் பாழ்படுத்தி, நோய்த்தொற்று பரவலைக் கட்டற்ற நிலைக்குக் கொண்டு சென்றுவிடும் பேராபத்தாகும். தனிமைப்படுத்தலும், தனிமனித விலகலும் பேரவசியமாக உள்ள இக்காலக்கட்டத்தில்,  அதனைக் குலைக்க அரசே வழிவகுக்கக்கூடாது.

தமிழகத்தில் நோய்த்தொற்று சமூகப் பரவலை எட்டியுள்ள நிலையில் மதுபானக்கடைகளைத் திறப்பது கொரோனாவை சிவப்புக்கம்பளம் விரித்து வரவேற்பதற்கு ஒப்பானது. அத்தகைய வரலாற்றுப் பிழையை செய்து பெரும்பழிக்கு ஆளாக வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன். ஆகவே, மதுபானக்கடைகளைத் திறக்கும் முடிவினை உடனடியாகக் கைவிட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு சீமான் தெரிவித்துள்ளார்.

click me!