"நான் தெருவில் இறங்கி விளையாடினால் தெரியும்"... கொங்கு நாடு சர்ச்சைக்கு சீமான் கொடுத்த பதிலடி...!

By Kanimozhi PannerselvamFirst Published Jul 14, 2021, 1:26 PM IST
Highlights

பாஜக தான் இப்படியொரு பிரிவினையை ஆரம்பித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தமிழகத்தை பிரிக்கும் எண்ணம் துளிகூட கிடையாது என பாஜக தரப்பிலிருந்து மறுப்பு வெளியானது. 

கடந்த சில நாட்களாகவே தமிழகத்தை இரண்டாக பிரித்து கொங்கு என்ற தனி மாநிலத்தை உருவாக்க வேண்டும் என்ற விவாதம், சமூக வலைத்தளங்களில் எழுந்துள்ளது. தமிழ்நாட்டிலுள்ள கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், திண்டுக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 10 மாவட்டங்களைப் பிரித்து ‘கொங்கு நாடு’ என தனி மாநிலத்தை உருவாக்க வேண்டும் என்ற குரல்கள் எட்டிப்பார்க்க ஆரம்பித்துள்ளன.

இதற்கு ஆரம்பபுள்ளி வைத்தது தற்போது மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள எல்.முருகன் தான் என்றும் கூறப்பட்டது. காரணம் ஜூன் 8ம் தேதி அவர் மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்ற போது வெளியான விவரக்குறிப்பில் கொங்கு நாடு என்ற வார்த்தை இடம் பெற்றிருந்தது. எனவே பாஜக தான் இப்படியொரு பிரிவினையை ஆரம்பித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தமிழகத்தை பிரிக்கும் எண்ணம் துளிகூட கிடையாது என பாஜக தரப்பிலிருந்து மறுப்பு வெளியானது. 

இந்நிலையில் தமிழ்நாட்டை இரண்டாக துண்டாட முயற்சிக்கும் கொங்குநாடு பிரிவினைக்கு எதிராக ராமதாஸ், திருமாவளவன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். இதனிடையே பிரபல தொலைக்காட்சி ஒன்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானிடமும் ‘கொங்கு நாடு’ விவகாரம் குறித்து கேள்வி எழுப்பட்டுள்ளது.

இதுகுறித்து பதிலளித்த சீமான், கச்சத்தீவு,  காவிரி நதி நீர், முல்லைப் பெரியாறு, மேகதாது அணை பிரச்சனை, ஜிஎஸ்டி நிதி உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. ஆனால் நாம் எங்கும் ஒற்றை கோரிக்கைக்கு கூட மத்திய அரசு அனுமதி அளிப்பதில்லை. எத்தனையோ நிர்வாக பிரச்சனைகளை சீர் செய்ய வேண்டியிருக்கிறது, அதை முதலில் சரி செய்யுங்கள். தமிழகத்தை இரண்டாக பிரியுங்கள் என நாங்க யாராவது கேட்டோமா? மொழி, இனம், நிலம் வாரிய தானே மாநிலங்கள் இதுவரை பிரிக்கப்பட்டுள்ளன. ஆனால் சாதி ரீதியாக கொங்கு நாடு என பிரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார். 

சரி, அவங்க கூற்றுப்படியே தமிழ் நாட்டை இரண்டாகப் பிரிக்கட்டும் . அப்படி பிரித்தால் இந்தியாவை 39 நாடாக பிரிக்கலாம். அதற்கு வாய்ப்பிருக்கிறது. நான் வழிகாட்டுகிறேன். பிரிப்பார்களா? தமிழகத்தை இரண்டாகப் பிரிப்பதற்கு பதிலாக சேலம், மதுரை, திருச்சி, கன்னியாகுமரி என நான்கு தலைநகரங்களை உருவாக்குங்கள். அனைத்தையும் ஒரே இடத்தில் வைத்தால் நகரங்கள் பிதுங்கி வழியும். அதனால்தான், தலைநகரங்களை பிரித்து வைக்கவேண்டும்  என்றார்.

நான் எதோ கண்டுக்காம போய்டுவேன்னு நினைச்சிட்டு பாஜகவினர் கொங்கு நாடுன்னு பேசிட்டு இருக்காங்க. நான் தெருவில் இறங்கி விளையாடினால் தெரியும் எனத் தெரிவித்தார். மேலும் முதலில் இந்தியாவை இரண்டாகப் பிரியுங்கள், அதற்கான என்னுடன் விவாதம் நடத்த வாருங்கள் என்றும் பாஜகவினருக்கு சீமான் அழைப்பு விடுத்துள்ளார்.  

click me!