
தண்ணீர் இல்லாமல் தமிழகம் தவிக்கிறது. ஆனால், அதிமுகவினர் இந்தியா - சீனாவை போல சண்டை போட்டு பேச்சு வார்த்தை நடத்துவது வேதனையாக இருக்கிறது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
இதுகுறித்து சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் மக்கள் குடிக்கக்கூட தண்ணீர் கிடைக்காமல் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார்கள். ஆனால் அ.தி.மு.க.வின் இரு அணியினரும் இந்தியா- சீனா போன்று சண்டை போட்டு கொண்டிருக்கிறார்கள்.
தமிழகத்தில் தீர்க்க வேண்டிய பிரச்சனைகள் ஏராளமாக உள்ள நிலையில் அ.தி.மு.க. அணிகளின் பேச்சுவார்த்தை அர்த்தமற்றது. மக்கள் இயக்க தலைவர் தமிழருவிமணியன் என்னை தீவிரவாதி என்று கூறியதை பொருட்படுத்தவில்லை.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் 2600 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் வரலாறு, பாரம்பரியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை முழுமையாக கண்டறிய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜான்சி ராணிக்கு கொடுத்த முக்கியத்துவத்தைகூட வேலுநாச்சியாருக்கும், தேசிங்குராஜாவுக்கும் கொடுக்கவில்லை.
கேரள அமைச்சர் தமிழ் பெண்களை இழிவாக பேசியதை கண்டித்து நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சி கலந்து கொண்டு எங்களது கண்டனத்தை தெரிவித்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.