பறக்கும் படை அதிரடி சோதனை ! கிடைத்தது என்ன தெரியுமா ?

By Selvanayagam PFirst Published Mar 30, 2019, 8:43 AM IST
Highlights

திண்டுக்கல் அருகே பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் பள்ளி மாணவியை கடத்திச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து அந்த மாணவி மீட்கப்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

திண்டுக்கல் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கெச்சானிப்பட்டி பிரிவு அருகே நேற்று பறக்கும்படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர். அப்போது ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டனர். அந்த காரில் பள்ளி சீருடையில் ஒரு மாணவியும், 3 வாலிபர்களும் இருந்தனர்.

இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள் அவர்கள் கொண்டு வந்த பையை பிரித்து சோதனையிட்டனர். அதில் மணப்பெண்ணுக்கு தேவைப்படும் பட்டுச் சேலை, திருமாங்கல்யம், நகை, மாப்பிள்ளைக்கு தேவையான பட்டு வேஷ்டி, சட்டை ஆகியவை இருந்தது.

இது குறித்து அவர்களிடம் விசாரித்த போது கரூர் மாவட்டம் கடவூரைச் சேர்ந்த ராஜ்குமார் என்றும், தனது அத்தை மகளான 10-ம் வகுப்பு மாணவியை திருமணம் செய்வதற்காக காரில் கடத்தி வந்ததும் தெரிய வந்தது. அவர்களுக்கு உடந்தையாக வந்த தாமரைச் செல்வன், செந்தில்குமார் ஆகியோரையும் பறக்கும்படையினர் பிடித்து வடமதுரை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

காரில் கடத்தி வரப்பட்ட மாணவி 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இன்று அவருக்கு கடைசி தேர்வான சமூக அறிவியல் தேர்வு நடக்கிறது. தேர்வு எழுத வந்த நேரத்தில் அவரை ராஜ்குமார் மற்றும் அவரது நண்பர்கள் காரில் கடத்தி வந்தது தெரிய வந்தது.

மாணவியின் பெற்றோருக்கு தெரியாமல் கடத்தி வரப்பட்டார்களா? என்ற கோணத்திலும் மைனர் பெண்ணை கடத்தி வந்த குற்றத்துக்காக அவர்கள் மீது வழக்குபதிவு செய்யப்படும் எனவும் போலீசார் தெரிவித்தனர். சம்பவம் நடந்த பகுதி கடவூர் என்பதால் இது குறித்து அப்பகுதி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

10-ம் வகுப்பு அரசு கடைசி தேர்வை எழுத முடியாமல் தவற விட்டு வாலிபர்களுடன் வந்த மாணவி போலீஸ் நிலையத்தில் கதறி அழுதார்.

click me!