
இன்னும் ஒரு சில நாட்களில் அதிமுக பொது செயலாளர் சசிகலா முதல்வராகி விடுவார் என்ற ஹேஷ்யங்கள் ரெக்கை கட்டி பறந்து கொண்டிருக்கும் நிலையில் அதிமுக தலைமைக்கு புதிய தலைவலி ஒன்று ஏற்பட்டுள்ளது.
"கட்சி சட்ட திட்டங்களை மீறி நீங்கள் பொது செயலாளராக தேர்ந்தெடுக்க பட்டுள்ளீர்கள்" என்று வந்த புகாருக்கு விளக்கம் அளிக்க வேண்டுமென பிப்4-ஆம் தேதி நோட்டீஸ் ஒன்றை அதிமுக தலைமைக்கு தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ளது.
அதிமுக கட்சியை ஆரம்பிக்கும்போதே எம்ஜிஆர் கடுமையான உட்கட்சி சட்டதிட்டங்களை உருவாக்கி விட்டு சென்றுவிட்டார்.
அதுதான் தற்போது சசிகலாவுக்கு இடியாப்ப சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
5 ஆண்டுகள் தொடர்ந்து உறுப்பினராக இல்லாத ஒருவர் நிச்சயம் பொது செயலாளர் பதவியில் அமர முடியாது என்ற விதியும் அதில் ஒன்று.
ஆனால் அந்த விதியின் உட்பிரிவுகளில் சில மாற்றங்களை கொண்டு வந்து அதற்கேற்றார் போல் தற்காலிக பொது செயலாளராக சசிகலா நியமிக்கபட்டார்.
அவரையே நிரந்தர பொது செயலாளராக நியமிக்கும் கடிதத்தை நிராகரித்தது தேர்தல் ஆணையம்.
இதை சுட்டிக்காட்டி தற்போது சசிகலா புஷ்பா எம்.பி தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளித்திருந்தார்.
அந்த மனுவில் 2011ஆம் ஆண்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சசிகலாவுக்கு வரும் மார்ச் மாதம் தான் 5 ஆண்டு நிறைவடைகிறது.
கட்சி உறுப்பினர்கள் ஓட்டு போட்டுதான் பொது செயலாளரை தேர்ந்தெடுக்க வேண்டும். நியமனம் என்பது அதிமுக வரலாற்றில் இல்லாத ஒன்றாகும்.
எனவே அதிமுக உட்கட்சி விதிகளின் படி இது சட்டவிரோதம் என தெரிவித்திருந்தார்.
இது தொடர்பான விசாரணைகளிலும் தேர்தல் ஆணையத்தில் சசிகலா புஷ்பா ஆஜராகி வந்தார்.
இந்நிலையில் பிப் 4 ஆம் தேதி பொது செயலாளர் தேர்வு குறித்த ஆவணங்களை உடனே சமர்ப்பியுங்கள் என அதிமுக பொது செயலாளர் சசிகலாவுக்கு இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது.
இது தொடர்பாக ஏற்கெனவே தம்பிதுரை உள்ளிட்ட சீனியர்கள் எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.
இதே தம்பிதுரையை வைத்து அதிமுக தலைமை இந்த பிரச்சனையை டீல் செய்யுமா? அல்லது புதிய நபர்கள் இறங்கி சசிகலாவுக்கு ஏற்பட்டுள்ள சிக்கலை தீர்ப்பார்களா? பொறுத்திருந்து பார்க்கலாம்...