"பன்னீர் முதுகில் குத்தினார்.. எடப்பாடி நெஞ்சில் குத்துகிறார்": குமுறும் சசிகலா ஆதரவாளர்கள்!

 
Published : Apr 16, 2017, 02:50 PM ISTUpdated : Sep 19, 2018, 03:09 AM IST
"பன்னீர் முதுகில் குத்தினார்..  எடப்பாடி நெஞ்சில் குத்துகிறார்": குமுறும் சசிகலா ஆதரவாளர்கள்!

சுருக்கம்

sasikala supporters says about ops and edappadi

சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி, அதிமுகவை பிளந்து வெளியே வந்தார் பன்னீர்செல்வம். ஆனால் அவருக்கு ஆட்சியை பிடிக்கும் அளவுக்கு எம்.எல்.ஏ க்களின் ஆதரவு இல்லை.

ஆனால், அதே பாணியில், பெரும்பாலான எம்.எல்.ஏ க்களின் ஆதரவுடன், அதிமுகவை விட்டு வெளியே வராமல், தினகரனை துரத்த அனைத்து வேலைகளையும் தொடங்கி விட்டார் எடப்பாடி பழனிசாமி.

பன்னீருக்கு பாஜக மேலிடம் ஆதரவு கொடுத்ததுபோல, இவருக்கும் அந்த ஆதரவு பூரணமாக கிடைத்து வருகிறது. 

பாஜக மேலிடம் ஒருபக்கம், எடப்பாடியை தமது கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சித்து வந்த நிலையில், இவரே தமது சமூகத்தை சேர்ந்த ஆளுநர் ஒருவர் மூலமாக பாஜக மேலிடத்தை நெருங்கி விட்டார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் கடைசி கட்டத்தில், தாறுமாறாக பாய்ந்த பணத்தின் காரணமாக தினகரன் ஜெயித்து விடுவார் என்றே ரகசிய கருத்து கணிப்புகள் தெரிவித்தன.

அதன் அடிப்படையில், எடப்பாடி தமக்கு வேண்டப்பட்டவர் மூலம், ஏற்பாடு செய்ததன் அடிப்படையிலேயே, அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரைடு நடத்தப்பட்டு, தேர்தல் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

கட்சியை தமது முழு கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்ட தினகரன், ஆர்.கே.நகரில் ஜெயித்து விட்டால், முதல்வராகி ஆட்சியையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடுவார் என்பது அனைவருக்கு தெரியும்.

எனவே, தினகரன் எம்.எல்.ஏ ஆகிவிடக் கூடாது என்பதற்காகவே, எடப்பாடி, பாஜக மேலிடத்துடன் ரகசிய தொடர்பு வைத்துக் கொண்டு இப்படி ஒரு நிலையை உருவாக்கினார் என்று தினகரன் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

அத்துடன், தினகரன் சமூகத்தை சேர்ந்தவர்களே ஆட்சியிலும், கட்சியிலும் அதிக அளவில் செல்வாக்குடன் திகழ்ந்தனர். ஆனால், எடப்பாடி முதல்வரான பிறகு, அந்த நிலை தற்போது முற்றிலும் மாறிவிட்டது.

வேலுமணி, தங்கமணி என கொங்கு சமூகத்தின் கை ஒங்க ஆரம்பித்து விட்டது. அதை மட்டுப்படுத்தவும், தமது சமூகத்தின் செல்வாக்கை மீண்டும் உயர்த்தவுமே, தினகரன் முதல்வராக முயற்சித்தார்.

தினகரனின் திட்டத்தை, பாஜகவுடன் தமக்கு ஏற்பட்ட நெருக்கத்தை பயன்படுத்தி முறியடித்து விட்டார் எடப்பாடி. மேலும் தொழில் வளம் மிகுந்த, பணம் கொழிக்கும் கொங்கு தொழில் அதிபர்களும் எடப்பாடிக்கு உறுதுணையாக அணிவகுத்து நிற்கின்றனர்.

மறுபக்கம், பாஜகவின் எதிர்ப்பை எக்காரணம் கொண்டும் சம்பாதித்து விடக் கூடாது என்பதற்காக, மைல் கற்களில் இந்தி எழுத்துக்கள், நெடுவாசல் ஹைட்ரொ கார்பன் திட்டம், டெல்லி விவசாயிகள் போராட்டம் என எதையும் கண்டு கொள்ளாமல் இருக்கிறார் எடப்பாடி.

அவரை பொறுத்தவரை, வாராது வந்த மாமணி போல் கிடைத்த முதல்வர் பதவியை எக்காரணம் கொண்டும் இழந்துவிட கூடாது என்பதில் மட்டுமே முழு கவனமும் செலுத்தி வருகிறார்.

அதே சமயம், தினகரன் ஆதரவாளர்களால் இடையூறு வராமல் இருக்கவும், அடுத்த தேர்தலை வெற்றிகரமாக சந்திக்கவும், பன்னீரின் ஆதரவு முழுமையாக தேவை என்பதால், அந்த அணியை இணைத்து ஒன்றுபட்ட அதிமுகவை உருவாக்கும் முயற்சியிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

தினகரன் சமூகத்தை சேர்ந்த வைத்திலிங்கத்தை தவிர, வேறு யாரையும் எடப்பாடி தமக்கு நெருக்கமானவர்கள் பட்டியலில் தற்போது வைத்துக் கொள்ளவில்லை. வைத்திலிங்கத்திற்கும், சசிகலாவிற்கும் ஏற்கனவே பகை இருப்பதன் காரணமாகவே அவரை மட்டும் தம்முடன் வைத்துள்ளார். 

மற்றபடி, தம்பிதுரை, வேலுமணி, தங்கமணி என அனைவருமே, அவருடைய கொங்கு சமூக உறவுகள்தான். வன்னியர் எதிர்ப்பை சம்பாதித்து விடக்கூடாது என்பதற்காக சி.வி.சண்முகத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளார்.

இவை அனைத்தும் வெளிப்படையாக தெரிந்தாலும், பாஜகவின், அதிரடி தாக்குதல்களுக்கு பயந்து எதுவும் செய்யமுடியாமல், பன்னீர் முதுகில் குத்தினார், எடப்பாடி நெஞ்சில் டுத்துகிறார் என்று குமுறி வருகின்றனர் தினகரன் ஆதரவாளர்கள்.

PREV
click me!

Recommended Stories

உங்கள் மிரட்டலுக்கு திமுக தலைமை அல்ல... தொண்டன் கூட பயப்பட மாட்டான்..! துணைக்கு கூட்டம் சேர்க்கும் உதயநிதி
விருகம்பாக்கம் தொகுதி யாருக்கு..? பிரபாகர் ராஜாவா..? தனசேகரனா..? ட்விஸ்ட் வைக்கும் திமுக தலைமை..!