ஒரு வாரத்தில் சசிகலா விடுதலை? ராஜாசெந்தூர் பாண்டியன் சொல்வதை நம்பலாமா?

By Selva KathirFirst Published Oct 23, 2020, 10:14 AM IST
Highlights

இன்னும் அபராதத் தொகையான பத்து கோடி ரூபாயை செலுத்தாத நிலையில் சசிகலா ஒரு வாரத்தில் விடுதலை என்று வழக்கறிஞர் ராஜாசெந்தூர் பாண்டியன் கூறியிருப்பது பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது.

இன்னும் அபராதத் தொகையான பத்து கோடி ரூபாயை செலுத்தாத நிலையில் சசிகலா ஒரு வாரத்தில் விடுதலை என்று வழக்கறிஞர் ராஜாசெந்தூர் பாண்டியன் கூறியிருப்பது பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது.

வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் பத்து கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதால் சசிகலா தற்போது பெங்களூர் சிறையில் உள்ளார். கடந்த 2016ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் சசிகலா சிறையில் இருக்கிறார். எனவே அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை அவர் பெங்களூர் சிறையில் இருக்க வேண்டும். ஒரு வேளை சசிகலா பத்து கோடி ரூபாய் அபராதத்தை செலுத்தவில்லை என்றால் பெங்களூர் சிறையில் சசிகலா மேலும் ஒரு ஆண்டுகள் இருக்க வேண்டும்.

இதனால் பத்து கோடி ரூபாய் அபராதத்தை செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் சசிகலா அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 27ந் தேதி வரை சிறையில் இருக்க வேண்டும் என்று பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறை நிர்வாகம் கூறியுள்ளது. ஆனால் கடந்த மாதம் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன், செப்டம்பர் மாதம் இறுதியில் சிறையில் இருந்து வெளியே வருவார் என்று உறுதிபடத் தெரிவித்தார். ஆனால் அவர் கூறியபடி சசிகலா செப்டம்பர் மாத இறுதியில் சிறையில் இருந்து வரவில்லை.

தற்போது அக்டோபர் மாதமே முடிவடைய உள்ள நிலையில் மீண்டும் ஒரு வாரத்தில் சசிகலா விடுதலை செய்யப்படுவார் என்று ராஜாசெந்தூர் பாண்டியன் கூறி வருகிறார். இதனால் தமிழக அரசியல் களம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. இதற்கிடையே அண்மையில் வழக்கறிஞர் ராஜாசெந்தூர் பாண்டியனுக்கு சசிகலா கடந்த வாரம் கடிதம் எழுதியிருந்தார். அதில் பத்து கோடி ரூபாய் அபராதத்தை விரைவாக செலுத்தும்படி கேட்டுக் கொண்டிருந்தார். இதன் மூலம் அபராதம் தற்போது வரை செலுத்தப்படவில்லை என்பது தெரியவருகிறது. ஆனால் ராஜாசெந்தூர் பாண்டியன் தற்போது ஒரு கதை கூறி வருகிறார்.

அதாவது பெங்களூர் சிறை நிர்வாக விதிகளின் படி தண்டனை கைதிகள் நன்னடத்தையுடன் செயல்பட்டால் ஒரு மாதத்திற்கு மூன்று நாட்கள் தண்டனை கழிவு வழங்கப்படும் என்று ராஜா செந்தூர் பாண்டியன் தெரிவித்துள்ளார். அதன்படி சசிகலா தற்போது வரை 43 மாதங்கள் சிறையில் இருந்துள்ளார். எனவே 43 X 3 என்று கணக்கு போட்டு 129 நாட்கள் சசிகலாவிற்கு தண்டனை கழிவு கிடைக்கும் அந்த வகையில் ஒரு வாரத்தில் சசிகலா விரைவில் விடுதலை ஆவார் என்று ராஜா செந்தூர் பாண்டியன் கூற ஆரம்பித்துள்ளார்.

ஆனால் அவர் வசதியாக ஒன்றை மறைத்துவிட்டார். பெங்களூர் சிறையில் தண்டனை கைதிகளுக்கு நன்னடத்தை அடிப்படையில் தண்டனை கழிவு வழங்குவது என்பது சலுகை மட்டுமே, உரிமை இல்லை என்கிறார்கள். சசிகலாவிற்கு நன்னடத்தை அடிப்படையில் தண்டனை கழிவை ஏற்பதும், ஏற்காததும் சிறை நிர்வாகத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டது. இந்த தண்டனை கழிவை சட்டப்படியோ, உரிமையாகவோ எந்த ஒரு கைதியும் கோர முடியாது. இதனை கருத்தில் கொண்டு தான், சசிகலா வரும் ஜனவரி 27ந் தேதி வரை சிறையில் இருக்க வேண்டும் என்று பரப்பன அக்ரஹாரா சிறை நிர்வாகம் கூறிவிட்டது.

எனவே சசிகலா பத்து கோடி ரூபாய் அபராதத்தை செலுத்தினாலும் கூட நன்னடத்தை அடிப்படையில் அவரை வெளியே விடுவது கர்நாடக அரசின் கையில் உள்ளது. கர்நாடகாவில் தற்போது பாஜக அரசு உள்ளது. எனவே இந்த விவகாரத்தில் பாஜக மேலிடம் எடுக்கும் முடிவு தான் சசிகலா விடுதலையை தீர்மானிக்கும் என்கிறார்கள். அந்த வகையில் இன்னும் ஒரு வாரத்தில் சசிகலா விடுதலை என்று ராஜா செந்தூர் பாண்டியன் கூறி வருவது எல்லாம் வெறும் விளம்பரத்திற்கு தானாம்.

click me!