போலி கையெழுத்து வழக்கு !! சசிகலா புஷ்பா மீது போடப்பட்ட எப்ஐஆர் ரத்து…உச்சநீதிமன்றம் அதிரடி !!

By Selvanayagam PFirst Published May 7, 2019, 6:14 PM IST
Highlights

பாலியல் புகார் வழக்கு தொடர்பான ஆவணங்களில்  போலிக் கையெழுத்து போட்டதாகக் கூறி சசிகலா புஷ்பா எம்.பி.மீது மதுரையில் போடப்பட்ட எப்.ஐ.ஆர்ஐ உச்சநீதிமன்றம் ரத்து  செய்து உத்தரவிட்டது. மேலும் அவருக்கு அனைத்து வழக்குகளிலும் ஜாமீன் வழங்கியுள்ளது.

தூத்துக்குடியைச் சேர்ந்த இளம்பெண்கள் பானுமதி, ஜான்சி ஆகியோர் சசிகலா புஷ்பா குடும்பத்தினர் மீது பாலியல் தொல்லை புகார் கொடுத்திருந்தனர். இதனைத் தொடர்ந்து சசிகலா புஷ்பா உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் மீது தூத்துக்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.  இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் சசிகலா புஷ்பா மனு செய்திருந்தார்

இதைத் தொடர்ந்து டெல்லி உயர்நீதிமன்ற அறிவுரைப்படி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் சசிகலா புஷ்பா சார்பில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அம்மனு மீதான விசாரணையின் போது, வெளிநாட்டில் உள்ள சசிகலா புஷ்பா, முன்ஜாமீன் வக்காலத்தில் மதுரையில் வழக்கறிஞர் முன் எப்படி கையெழுத்திட முடியும்?  என அவருக்கு பதிலாக யாரோ போலி கையெழுத்திட்டுள்ளனர் என அரசுத் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. இது தொடர்பாகவும் சசிகலா புஷ்பா மீது எப்ஐஆர் போடப்பட்டது.

இந்நிலையில் சசிகலா புஷ்பா மீதான வழக்கில் புகார் செய்த பெண்கள் அந்தப் பாலியல் புகாரை திரும்பப் பெற்றனர். இருப்பினும், சசிகலா புஷ்பா உள்ளிட்டோரின் மீது பதியப்பட்ட வழக்கு நிலுவையில் இருந்து வந்தது.

நிலுவையில் உள்ள வழக்கை முடித்து வைக்கக் கோரியும், முன் ஜாமீன் கோரியும்  சசிகலா புஷ்பா உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். மேலும் வக்காலத்தில் உள்ள  கையெழுத்து தன்னுடையதுதான். எனவே தன் மீது மதுரையில் பதியப்பட்ட எப்.ஐ.ஆரை ரத்து செய்ய வேண்டும் என்றும் சசிகலா புஷ்பா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கோரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பானுமதி, அப்துல் நசீர் அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது
அதில் சசிகலா புஷ்பாவை பாலியல் வழக்கிலிருந்து விடுவிக்க மறுத்த உச்ச நீதிமன்றம், வழக்கைச் சந்திக்க உத்தரவிட்டது. பாலியல் வழக்கு முடியும் வரை சசிகலா புஷ்பாவைக் கைது செய்யவும் தடைவிதித்தது.

வக்காலத்தில் போலிக் கையெழுத்து போட்டதாகக் கூறி மதுரையில் போடப்பட்ட எப்.ஐ.ஆர் ரத்து செய்யப்பட்டது. 

click me!