ஓபிஎஸ் ஒதுங்கித்தான் ஆகவேண்டும்  - சசிகலாதான் முதல்வர்   தீரன் அதிரடி பேட்டி 

First Published Dec 26, 2016, 3:19 AM IST
Highlights


சென்னையில் வரும் 29-ம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழுவில், அதிமுகவின் பொதுச் செயலராகவும் , முதல்வராகவும்  சசிகலா தேர்ந்தெடுக்கப்படுவார் என்று அதிமுக செய்தித் தொடர்பாளர் தீரன் உறுதியாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, பிபிசி தமிழுக்கு பேட்டியளித்த தீரன், "29-ம் தேதி காலையில் நடைபெறும் செயற்குழுக் கூட்டத்தில், சசிகலா அவர்கள் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்க வேண்டும் என்ற வேண்டுகோள், தீர்மானமாக வைக்கப்படும். 

அதன்பிறகு பொதுக்குழு கூடும். செயற்குழுவில் நிறைவேற்றப்படும் தீர்மானத்துக்கு அதில் ஒப்புதல் அளிக்கப்படும். அன்றே, சசிகலா அவர்கள் கட்சியின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்படுவார். அது தெளிவாகத் தெரிகிறது" என்றார் தீரன்.

முதலமைச்சர் பொறுப்பையும் சசிகலா ஏற்க வேண்டும் என்ற கோரிக்கை சிலரால் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், கட்சியில் அதற்கு ஆதரவிருக்கிறதா என்ற கேள்விக்கு பதிலளித்த தீரன், பொதுக்குழு முடிவெடுத்தால் யாராக இருந்தாலும் அதற்குக் கட்டுப்பட வேண்டும் என்றார் அவர்.

"முதலமைச்சராக இருக்கும் ஓ.பி.எஸ். அவர்கள், ஜெயலலிதா அவர்கள் சில நேரங்களில் வழக்கு தொடர்பான சிக்கல்களைச் சந்தித்தபோது, முதலமைச்சர் பொறுப்பை வகித்து, ஜெயலலிதா அவர்கள் நான்கு மாதம், 6 மாதங்களில் திரும்ப வந்தபோது, அந்தப் பொறுப்பை மீண்டும் அவரிடமே திரும்ப அளித்து, கட்சியின் விதிகளுக்கு உட்பட்டு இருக்கிறார்.

 எனவே, பொதுக்குழு, செயற்குழு பெரும்பான்மையாக என்ன முடிவு எடுக்கிறதோ, அதற்கு ஓ.பி.எஸ். உள்பட, நாங்கள் உள்பட சசிகலா உள்பட அனைவரும் கட்டுப்பட்டுத்தான் ஆக வேண்டும். சசிகலா அவர்கள் எனக்கு வேண்டாம் என ஒதுங்க முடியாது.

 பொதுக்குழுவின் விருப்பத்தை அவர் நிறைவேற்றித்தான் தர வேண்டும். அதேபோல், பொதுக்குழு பெரும்பான்மையாக விரும்புகிறது என்றால், முதலமைச்சராவதற்குக் கூட, ஓ.பி.எஸ். அவர்கள் வழிவிட்டுத்தான் தீர வேண்டும்" என்று  தீரன் பிபிசிக்கு  அதிரடியாக பேட்டி அளித்துள்ளார். 
 

click me!