
சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா 13 நாட்கள் மட்டுமே சிறைக்குள் இருந்ததாகவும், மற்ற நாட்களில் வெளியே போய் தங்கி இருந்ததாகவும் பரவி வரும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை அதிகாரிகள் 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றுக் கொண்டு சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சிறைத்துறை டிஐஜியாக இருந்த ரூபா இதனைக் கண்டுபிடித்து வெளிச்சத்துக் கொண்டு வந்தார். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் சசிகலா தொடர்பாக தற்போது வெளிவந்திருக்கும் தகவல் கடும் அதிர்ச்சி ரகமாக உள்ளது.
சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் கடந்த பிப்ரவரி மாதம் 15-ந் தேதி அடைக்கப்பட்டார். நேற்றுடன் அவர் சிறையில் அடைக்கப்பட்டு 155 நாட்கள் ஆகிறது.
155 நாட்களில் வெறும் 13 நாட்கள் மட்டுமே சசிகலா சிறையில் இருந்தார் என்றும் மற்ற நாட்களில் சிறை அருகே அவரது உறவினர்கள் தங்கி இருந்த அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியாகி உள்ளது.
தன்னை உறவினர்கள் பார்க்க வரும் நாட்களில் மட்டும் அவர் சிறைக்கு வருவார் என்றும் கூறப்படுகிறது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய போதிலும் இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.
பொதுவாக சிறையில் கைதிகளை அவர்களுடைய உறவினர்கள் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே பார்க்க முடியும். ஆனால் சசிகலாவை அவரது உறவினர்கள் இந்த நேரத்தை தாண்டியும் பார்த்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஆவணங்கள் டி.ஐ.ஜி. ரூபாவிடம் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த ஆவணங்களை உயர்மட்ட குழுவின் விசாரணை அதிகாரி வினய்குமாரிடம் ரூபா வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.
வினய்குமார் முதல் கட்ட விசாரணை அறிக்கையில் இடம் பெறும் தகவல்கள் அடிப்படையில் சசிகலாவை து மகூருவுக்கோ அல்லது மைசூரு சிறைக்கோ மாற்ற அரசு முடிவு எடுக்கும் என்று தெரிகிறது.