விளம்பர பதாகைகள் வைக்க வழங்கிய அனுமதியை திரும்ப பெற வேண்டும்... அரசுக்கு சசிகலா வலியுறுத்தல்!!

By Narendran S  |  First Published May 3, 2023, 11:56 PM IST

விளம்பர பதாகைகள் வைக்க அனுமதி அளித்து திமுக அரசு வெளியிட்டு இருக்கும் அரசாணைக்கு சசிகலா கண்டனம் தெரிவித்துள்ளார்.


விளம்பர பதாகைகள் வைக்க அனுமதி அளித்து திமுக அரசு வெளியிட்டு இருக்கும் அரசாணைக்கு சசிகலா கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக தலைமையிலான அரசு விளம்பர பதாகைகள் வைக்க அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டு இருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது. இது மக்களுக்கு மிகப்பெரிய பாதகத்தை ஏற்படுத்த கூடியது. இந்த அரசாணையை உடனே திரும்ப பெற வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன். சாலைகளில் விளம்பர பதாகைகள் வைப்பதால் பொதுமக்களுக்கு இடையூறுகள் ஏற்படுவதுடன், உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. மேலும் வாகனங்களில் செல்பவர்களின் கவனம் சிதறுவதோடு அதிகளவில் விபத்துக்களும் ஏற்பட காரணமாக அமைகிறது. திமுக ஆட்சியில், தமிழகத்தில் ஏற்கனவே சாலைகள் பராமரிப்பின்றி மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது, விளம்பர பதாகைகள் வைப்பதால் சாலைகள் மேலும் பாதிப்படையக்கூடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். திமுகவினர் மாநகராட்சியின் வருமானத்தை பெருக்குவதற்காக இதை அனுமதிக்கிறோம் என்று சொல்கிறார்கள். ஏற்கனவே மக்களிடம் வரலாறு காணாத அளவுக்கு சொத்து வரி உயர்த்தி இருக்கிறீர்கள். மேலும், ஆவின் பால் பொருட்களின் விலை, மின் கட்டணம் என்று அனைத்தையும் உயர்த்தி சாமானிய மக்களின் தலையில் தாங்க முடியாத சுமையை ஏற்றி வைத்து இருக்கிறீர்கள்.

இதையும் படிங்க: அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் விதிமீறல்.. இது நியாயமே கிடையாது - அன்புமணி ராமதாஸ் ஆவேசம்

Tap to resize

Latest Videos

இவ்வளவு மக்களிடம் இருந்து அபகரித்தும் மக்களுக்கு, எந்தவித நன்மை பயக்கும் திட்டங்களும் வரவில்லை. தமிழக மக்கள் என்றைக்கு இந்த ஆட்சி போகும் என்று நாட்களை எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள். நீதிமன்ற உத்தரவுகளை காரணம் காட்டி ஏழை எளிய சாமானிய மக்களின் வீடுகளை, கடைகளை முந்திக்கொண்டு வந்து அப்புறப்படுத்துகிறீர்கள். மீன் பிடி தொழிலில் உள்ள சாமானிய மக்களின் கடைகளை அப்புறப்படுத்துவதில் முனைப்பு காட்டுகிறீர்கள். அதே சமயம் விளம்பர பதாகைகள் வைக்க கூடாது என்ற நீதிமன்ற உத்தரவுகள் இன்றைக்கு என்ன ஆனது? என்று தெரியவில்லை. உங்களுக்கு வருமானம் வேண்டும் என்றால் உடனே நீதிமன்ற உத்தரவுகளையெல்லாம் காற்றில் பறக்க விடுவதா? என்ற கேள்வி அனைவருக்கும் எழுகிறது. மேலும், திமுகவினர் ஆட்சியில் இருந்தால் ஒரு பேச்சு, ஆட்சியில் இல்லை என்றால் ஒரு பேச்சு என்று மக்களை ஏமாற்றுவது அவர்களுக்கு கை வந்த கலை ஆகும். அதாவது திமுகவினர் எதிர்க்கட்சியாக இருந்தபோது, கடந்த 13-9-2019 அன்று திமுகவின் தலைவர் தனது தொண்டர்களுக்கு ஒரு எச்சரிக்கையை கொடுத்தார். அது என்னவென்றால், கழக நிகழ்ச்சிகளுக்காக பேனர்கள், கட்- அவுட், பிளக்ஸ் போர்டு வைக்கக்கூடாது என்பதை மீண்டும் வலியுறுத்துவதாகவும், இதையும் மீறி பேனர்கள் வைக்கப்பட்டால், அந்நிகழ்ச்சியில் தான் கலந்து கொள்ள மாட்டேன் என்றும், இந்த அறிவுரையை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தனது கழக நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் எச்சரிக்கை விடுத்தார்.

இதையும் படிங்க: போட்றா வெடிய.. 1,222 இடம்! இளைஞர் அணிக்கு குட் நியூஸ் சொன்ன உதயநிதி ஸ்டாலின் - இதை கவனிச்சீங்களா?

மேலும், டிஜிட்டல் பேனர் தொடர்பான வழக்கில் நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றுவதாக திமுக சார்பில் அதன் நாடாளுமன்ற உறுப்பினர் கடந்த 16-9-2019 அன்று பிரமாண பத்திரம் ஒன்றை தாக்கல் செய்தார். அதில் விளம்பர பதாகைகள் வைக்கமாட்டோம், நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றி நடப்போம் என்று பிரமாண பாத்திரத்தில் திமுகவினர் உறுதி அளித்துள்ளனர். ஆனால், அவற்றையெல்லாம் இன்றைக்கு காற்றில் பறக்கவிட்டு, திமுக அரசு விளம்பர பதாகைகள் வைக்க அனுமதி என்ற அரசாணையை வெளியிட்டு இருப்பது கேலிக்கூத்தாக இருக்கிறது. தமிழக மக்கள் அனைத்தையும் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்கள் அடுத்த தேர்தலை எதிர்நோக்கி காத்துகொண்டு இருக்கிறார்கள். என்றைக்கு தமிழகத்திற்கு தேர்தல் வருகிறதோ அன்றைக்கு திமுகவினருக்கு சரியான பாடம் புகட்டுவார்கள். எனவே, இதுபோன்ற மக்கள் விரோத செயல்பாடுகளை கைவிட்டு, மக்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற ஏதாவது முயற்சி செய்யுங்கள். மேலும், மக்களுக்கு பாதகத்தை ஏற்படுத்தும் விதத்தில் விளம்பர பதாகைகள் வைக்க அனுமதி அளித்து வெளியிட்டுள்ள அரசாணையை உடனே திரும்ப பெற வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். 

click me!