
கூவத்தூர் சென்ற சசிகலா எம்.எல்.ஏக்களுடன் பேசிய பின்னர் அவர்களுடன் இரவு உணவு சாப்பிட்டார்.
அதிமுகவில் நடந்துவரும் மாற்றங்கள் காரணமாக இரண்டாக பிரிந்து நிற்கிறது அதிமுக . முதல்வர் ஓபிஎஸ் தலைமையில் ஒரு அணியாகவும் , சசிகலா தலைமையில் ஒரு அணியாகவும் பிரிந்து நிற்கின்றனர்.
தான் ராஜினாமா செய்ய நிர்பந்தப்படுத்தப்பட்டதாகவும், ராஜினாமாவை வாபஸ் வாங்குவதாகவும் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். அவருக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகிறது. இந்நிலையில் 5 ஆம் தேதி எம்.எல்.ஏக்கள் கூட்டத்திற்கு பிறகு அதிமுக எம்.எல்.ஏக்களை ஒரே இடத்தில் தங்க வைத்துள்ளது சசிகலா தரப்பு.
எங்கு வைத்திருக்கிறார்கள் என்றே தெரியாத அளவுக்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த எ.எல்.ஏக்கள் பின்னர் கூவத்தூரில் தங்க வைக்கப்பட்டிருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது. கூவத்தூரில் உள்ள ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏக்கள் வெளியே வர முடியாத அளவுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஆனால் ஆரம்பத்திலேயே சில எம்.எல்.ஏக்கள் கூவத்தூர் செல்வதற்கு முன்னரே தப்பி வந்து ஓபிஎஸ்சுடன் சேர்ந்தனர். எம்.எல்.ஏக்களை மிரட்டி அடைத்து வைத்துள்ளதாக அவர்கள் புகார் அளித்தனர். இந்நிலையில் கூவத்தூரில் தங்க வைக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏக்கள் தனக்கு ஆதரவளிக்க தயாராக இருப்பதாகவும் அவர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் ஓபிஎஸ் பேட்டி அளித்தார்.
அமைச்சர் பாண்டியராஜன் திடீரென வெளியே வந்து ஓபிஎஸ்சுடன் இணைந்தார். அனைத்து எம்.எல்.ஏக்களும் ஓபிஎஸ்சை ஆதரிக்கும் மனநிலையில் உள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து அரண்டுப்போன சசிகலா நேரடியாக போயஸ் இல்லத்திலிருந்து கூவத்தூர் சென்று எம்.எல்.ஏக்களை சந்தித்து பேசினார்.
நேற்று இரண்டாவது நாளாக கூவத்தூர் சென்ற சசிகலா கண்ணில் நீர் ததும்ப ததும்ப பேசினார். தான் முதல்வரானால் ஜெயலலிதா படத்தை சட்டசபையில் திறப்பேன் என்று பேசியவர் அந்த சபதத்தை நிறைவேற்ற உறுப்பினர்கள் உறுதியெடுக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார்.
பின்னர் எம்.எல்.ஏக்களுடன் உருக்கமாக பேசிய அவர் முதன் முறையாக எம்.எல்.ஏக்களுடன் அமர்ந்து இரவு உணவு சாப்பிட்டார். பின்னர் எம்.எல்.ஏக்களுடன் பேசிவிட்டு புறப்பட்டு சென்றார். சசிகலா திடீரென இப்படி இறங்கி வந்தது எம்.எல்.ஏக்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.