
பொதுவாக எம்.எல்.ஏ.க்கள்தான் மக்களுக்கு அல்வா தருவார்கள், ஆனால் மூன் டி.வி. எம்.எல்.ஏ. சரவணனுக்கு அல்வாவும் தந்து ஆயுளுக்கும் மறக்க முடியாத அதிர்ச்சியையும் தந்திருக்கிறது!...
டைம்ஸ் நவ் மற்றும் மூன் டி.வி. இணைந்து நடத்திய ’ஆபரேஷன் கூவத்தூர்’ வீடியோ தேசத்தை கலக்கிக் கொண்டிருப்பது தெரிந்த கேவலமே. இன்று சட்டசபையில் எதிர்கட்சிகளை சபாநாயகர் கூண்டோடு வெளியேற்றவும் இந்த விவகாரமே காரணமாக இருந்திருக்கிறது.
இந்நிலையில் ஸ்டிங் ஆப்பரேஷனில் சிக்கிய எம்.எல்.ஏ. சரவணனும், கனகராஜும் அந்த வீடியோவில் வரும் வாய்ஸ் தங்களது இல்லை என்று மறுக்கிறார்கள்.
தெனாலி படத்தில் கொடைக்கானலுக்கு பஸ்ஸில் வரும் கமல், எலி போல் சப்தம் கொடுப்பதாக கண்டக்டர் காண்டாவார். உடனே கமல் உம்ம்ம்ம்ம கொடுப்பது போல் உதட்டை குவித்து ‘நான் இப்படி வாயை குவிக்கையிலே ஆரோ எலிபோல் டப்பிங் கொடுக்கிறார்கள்.’ என்று வெள்ளந்தியாக பேசுவார். கிட்டத்தட்ட சரவணனும், கனகும் அப்படித்தான் விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அதிலும் சரவணன் ஒரு சில படிகள் மேலே போய் மூன் டி.வி.யா! அப்படின்னா என்ன மச்சி? இந்த ராத்திரியில ஸ்கையில தெரியுற டி.வி.யா என்கிற அளவுக்கு தனக்கும் இந்த விவகாரத்துக்கும் சம்பந்தமேயில்லை என்று சம்பந்தா சம்பந்தமில்லாமல் விளக்கம் கொடுக்கிறார்.
ஆனால் இந்த கூற்றை அடித்து உடைக்கும் வண்ணம் ஒரு போட்டோ மற்றும் ஆடியோ காம்போ ஒன்றை வெளியிட்டிருக்கிறார் மூன் டி.வி.யின் எடிட்டர் ஷாநவாஸ் கான். அந்த போட்டோவில்...அலுவலகத்தினுள் சரவணனுக்கு பொன்னாடை போர்த்தி ஷாநவாஸ் கான் வரவேற்பது போல் இருக்கிறது.
ஆடியோவில் அதைப் பற்றி விளக்கியிருக்கும் அவர்...”ஏப்ரல் 1_ம் தேதி இந்த ஸ்டிங்கை ஆரம்பிச்சோம். அன்னைக்கு ஆரம்பிக்க காரணம், ஃபூலர்ஸ் டே அதாவது முட்டாள்கள் தினத்துல இருந்துதான் சில முட்டாள்களை அடையாளப்படுத்தணும் அப்படின்னு முடிவு பண்ணினோம்.
அதுல நமது மதுரை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு சரவணன் நம் ஆபீஸுக்கு வரவழைக்கப்பட்டார். எங்க அலுவலகத்துக்கு வரும்போது மரியாதை நிமித்தமா அவருக்கு சால்வை போர்த்தி எடுத்துக்கிட புகைப்படம்தான் நீங்க பார்க்கிறது. ஆனா என்னை தெரியாதுன்னு அவர் சொல்லியிருக்கார்.
இன்னும் கூட எங்ககிட்ட நிறைய ஃபுட்டேஜஸ் இருக்குது. ஹல்வால்லாம் வாங்கி கொடுத்திருக்கோம். அந்த ஹல்வா வாங்கிக் கொடுத்த ஃபுட்டேஜஸை கூட பின்னாடி தேவைப்பட்டா நாங்க ரிலீஸ் பண்ணுவோம்.” என்று படத்துக்கு விளக்கமும் கொடுத்திருக்கிறார்.
இந்த விவகாரத்தை வைத்து அலசுபவர்களில் வெகு சிலர் ‘நம்பி வந்தவரை இப்படி மோசம் பண்ணிட்டாங்களே மீடியாக்காரங்க!. இது துரோகம்’ என்று சாடுகிறார்கள். ஆனால் அப்படியில்லை.
தேர்தலுக்காக ஓட்டு வேண்டி வீடுவீடாக தேடி வந்து அதைச்செய்வேன், இதைச்செய்வேன் என்று சீன் போட்டு உறுதிமொழி தரும் எம்.எல்.ஏ.க்கள் ஜெயித்த பின் மக்களை கண்டுக்காமலே போய், ஏமாற்றுகிறார்களே. காலங்காலமாக இந்த சீட்டிங் நடந்து கொண்டிருக்கிறதே! அதைவிடவா இது பெரிய துரோகம்?...என்று மீடியாவை நியாயப்படுத்துகிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
அதெல்லாம் சரி, மூன் டி.வி. எடிட்டர் ஜி, எப்போ அந்த அல்வா வீடியோவை வெளியிடப்போறீங்க?!
வீ ஆர் வெயிட்டிங்!...