சாமியார் ஆசாராம் குற்றவாளி….அதிரடி தீர்ப்பளித்த ஜோத்பூர் நீதிமன்றம்…இன்று மாலை தண்டனை விவரம் அறிவிப்பு….

First Published Apr 25, 2018, 11:14 AM IST
Highlights
samiyar aasaram babu culprit Jothpur court confirm


14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் வட இந்தியாவில் பிரபல சாமியாராக விளங்கும் ஆசாராம் குற்றவாளி என ஜோத்பூர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. இன்று மாலை அவருக்கான தண்டனை விவரம் அறிவிக்கப்படும்.

ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஆசிரமம் நடத்தி வந்தவர்  75 வயதான ஆசாராம் பாபு.  இவரும், இவரது  மகன் நாராயண் சாய் ஆகியோர் தங்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக குஜராத் மாநிலம் சூரத் நகரை சேர்ந்த இரு சகோதரிகள் போலீசில் புகார் அளித்தனர். 



கடந்த 2001 மற்றும் 2006-க்கு இடைப்பட்ட காலங்களில் ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் உள்ள ஆசாராம் பாபுவின் ஆசிரமத்தில் இச்சம்பவம் நடைபெற்றதாக பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரில் குறிப்பிட்டிருந்தனர்.

இதேபோல், உத்தரப்பிரதேசம் மாநிலம் ஷாஜஹான்பூர் பகுதியை சேர்ந்த  14 வயது சிறுமியும், ஆசிரமத்தில் தங்கி படித்துவந்தபோது ஆசாராம் பாபு தன்னை கற்பழித்து விட்டதாக போலீசில் புகார் அளித்திரிந்தார். இதுதவிர மேலும் பல கற்பழிப்பு குற்றங்கள் இவர்மீது சுமத்தப்பட்டன.

பலவித சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றவரான ஆசாராம் பாபுவை கற்பழிப்பு மற்றும் சிறுமிகள் பாலியல் பலாத்கார தடை சட்டத்தின்கீழ் கடந்த  2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி போலீசார் கைது செய்தனர்.

தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோத்பூர் சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார். அவரது சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பல ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.



இதனிடையே  ஷாஜஹான்பூர் சிறுமி வழக்கில் கடந்த நான்காண்டுகளாக ஜோத்பூர் நகரில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் அரசுதரப்பு மற்றும் எதிர்தரப்பு வாதங்கள் கடந்த ஐந்து மாதங்களாக நடைபெற்றுவந்த நிலையில் ஏப்ரல் 25-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என்று நீதிபதி மதுசூதன் சர்மா தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சிறுமி பலாத்கார வழக்கில் ஆசாராம் பாபு குற்றவாளி என நீதிபதி மதுசூதன் சர்மா இன்று தீர்ப்பளித்தார். அவரது தண்டனை விவரங்களை இன்று மாலை அறிவிப்பதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.

ஆசாராம் பாபுவுக்கு வட மாநிலங்களில் ஆதரவாளர்கள் இருப்பதால் அவர் அடைக்கப்பட்டுள்ள ஜோத்பூர் சிறைக்கே சென்று நீதிபதி இந்தத் தீர்ப்பை வழங்கினார். இதையடுத்து அப்பகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

click me!