மாதாமாதம் ஒவ்வொருவருக்கும் ரூ.1000... குடும்பத்துக்கு ரூ.2500... மத்திய அரசுக்கு வலியுறுத்தல்..!

By Thiraviaraj RMFirst Published May 25, 2020, 5:43 PM IST
Highlights

ஒரு நபருக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 என்பது மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இது அதிகம் என்றாலும், ஒருவருக்கு 500 வீதம் 5 நபர்கள் கொண்ட குடும்பத்திற்கு ரூ.2,500 கிடைக்கும். 

கொரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை சமாளிக்க, ஒரு நபருக்கு மாதம் ரூ.1,000 வீதம் மத்திய அரசு, உடனடியாக வழங்க முன்வர வேண்டும் என நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி - எஸ்தர் டப்லோ ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் ஆன்லைன் மூலம் உரையாடிய அபிஜித் பானர்ஜி, ‘’கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் பட்சத்தில், பெருமளவில் உற்பத்தி செய்வதற்கு இந்தியா உதவக்கூடும். ஆனால், தடுப்பூசி இல்லாத நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், ஊரடங்கு நீட்டிப்பு இருக்கும். தடுப்பூசி உற்பத்தியாளராக இந்தியாவின் வலிமை அதிகரிக்கும். ஆனால் வினியோகம், நிதி மற்றும் அறிவுசார் சொத்துரிமை விவகாரத்தில் மற்ற நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும். நாடுகள் ஒன்றிணைந்து செயல்படுவது நல்ல பயிற்சியாக இருக்கும்.

ஒரு நபருக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 என்பது மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இது அதிகம் என்றாலும், ஒருவருக்கு 500 வீதம் 5 நபர்கள் கொண்ட குடும்பத்திற்கு ரூ.2,500 கிடைக்கும். இது மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இது அனைத்து அவசர தேவைகளுக்கு செலவிடப்படும். இந்தியா ஒரு மிகப்பெரிய தேவை அதிர்ச்சியை எதிர்கொள்ள போகிறது. எனவே மக்களின் கையில் பணம் புழக்கத்தில் இருப்பதால், உண்மையில் பொருளாதாரத்தை காப்பாற்றுவதற்கான வழியாக இருக்கலாம். ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். அடுத்த ஊரடங்கு மக்களுக்கு சிறந்த ஒன்றாக இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். அதுவே அவர்களை மீட்பதற்கு திறவுகோலாக இருக்கும்’’ எனக் கூறினார்.

பொருளாதார நிபுணரான எஸ்தர் டப்ளா கூறுகையில், ‘’ஏற்கனவே ஜன் தன் கணக்கு, ஆதார் மற்றும் மொபைல் எண் இணைப்பு இருப்பதால் உடனடியாக யு.பி.ஐ மூலம் ரூ.1000 பணத்தை செலுத்துவதை துவங்க வேண்டும். அரசின் நிவாரணம் அல்லது உதவி தகுதியற்றவர்களுக்கு செல்ல கூடாது என்ற மத்திய அரசின் எண்ணம் மாற வேண்டும். கொரோனா சூழ்நிலை மக்களை வறுமை பிடியில் தள்ளக்கூடும் என்பதால் யு.பி.ஐ உதவுமென்றும், அரசு யு.பி.ஐ.,யை மக்களுக்கு நிவாரணம் அளிப்பதற்கு மட்டும் பயன்படுத்தாமல், நெருக்கடி முடிந்தாலும் தேவைப்படுவோருக்கு சமூக பாதுகாப்பு திட்டமாக தொடரலாம்’’ என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். 
 

click me!