
சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் ஜெயலலிதா பெயரை நீக்கும்படி கர்நாடகா அரசு உச்சநீதி மன்றத்தில் நாளை மனுதாக்கல் செய்ய உள்ளதாக கர்நாடகா அரசு வக்கீல் ஆச்சார்யா தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி உள்ளிட்டோர் மீதான சொத்துகுவிப்பு வழக்கில் கர்நாடக சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டதில் 4 போரையும் விடுதலை செய்து நீதிபதி குமாரசாமி உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதுகுறித்த விசாரணை முடிந்து ஒரு வாரத்தில் தீர்ப்பு வர உள்ளதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு இருந்த ஜெயலலிதா மரணம் அடைந்து விட்டதாகவும், எனவே அவரது பெயரை வழக்கில் இருந்து நீக்கும்படி கர்நாடக அரசு உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளதாகவும் கர்நாடகா அரசு வக்கீல் ஆச்சார்யா கூறியுள்ளார்.
முதன்மை குற்றவாளியாக சேர்க்கப்பட்டவர் இறந்து விட்டாலும் மற்றவர்கள் மீதான விசாரணை தொடர்ந்து தொடர்ந்து நீடிக்கும் எனவும், அவர்கள் 3 பேரும் தவறு செய்ததற்கான உறுதியான ஆதாரங்கள் உள்ளதாகவும் ஆச்சார்யா தெரிவித்துள்ளார்.