குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் அரசியலை விட்டே செல்லத் தயார்... மு.க.ஸ்டாலின் தயாரா..? எஸ்.பி. வேலுமணி சவால்.!

By Asianet TamilFirst Published Jan 2, 2021, 9:40 PM IST
Highlights

என் மீதான குற்றச்சாட்டுகளை நீருபித்தால் நான் அரசியலை விட்டே போய்விடுகிறேன். வரும் தேர்தலில்கூட சீட்டு கேட்க மாட்டேன் என்று தமிழக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திமுக  தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு சவால் விடுத்துள்ளார்.
 

கோவை தொண்டாமுத்தூரில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் நடந்தது பற்றி தமிழக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்தார். “திமுக கூட்டத்தில் பெண் தொண்டர் ஒருவர் தாக்கப்பட்டதாக என்னிடம் சொன்னார்கள். என்னிடம் பேசச் சொல்லி திடீரென செல்போனை கொடுத்தார்கள். இதுபற்றி எனக்கு எந்த விவரமும் தெரியாது. அவரிடம் நடந்தது குறித்து கேட்டுத் தெரிந்துக்கொண்டேன், அவ்வளவுதான். எதிர்க் கட்சித்தலைவர் மு.க. ஸ்டாலின் ஆதாரமில்லாத, அவதூறாகப் பேசுகிறார். எப்படியாவது முதல்வர் நாற்காலியைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக என்னவேண்டுமானாலும் பேசுகிறார். அவதூறான குற்றச்சாட்டுகளையும் ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளையும் என் மீதும் முதல்வர் மீதும் அமைச்சர்கள் மீதும் தொடுத்துவருகிறார்.


என் மீதும் தங்கமணி மீதும் அவருக்கு என்ன கோபம் என்பது எல்லோருக்கும் தெரியும். இந்த ஆட்சி நிலைக்க முக்கியமாக நாங்கள் இருவரும் உடன் இருந்திருக்கிறோம். ஓபிஎஸ் - இபிஎஸ் அணிகள் இணைப்புக்கும் முக்கிய காரணமாக இருந்துள்ளோம். அவர் குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்க நாங்கள் தடையாக இருந்தோம். அதனால்தான் அவருக்கு குறிப்பாக எங்கள் மீது கோபம்.
என் மீதான குற்றச்சாட்டுகளை நீருபித்தால் நான் அரசியலை விட்டே போய்விடுகிறேன். வரும் தேர்தலில்கூட சீட்டு கேட்க மாட்டேன். என் மீது அவர் கொடுத்த புகார், அவதூறானது என்றால் அவர் எதிர்க்கட்சித் தலைவர், சட்டமன்ற தலைவர் பதவியை ராஜினாமா செய்யவேண்டும். கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகட்டும். இந்தச் சவாலுக்கு நான் தயார். இப்பொழுதே கையெழுத்திட்டு தருகிறேன். அவரையும் கையெழுத்து போட்டு பொதுவான ஒருவரிடம் கொடுக்கச் சொல்லுங்கள்” என்று எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

click me!