இதெல்லாம் கற்பனையில கூட நடக்காத காரியம்... நீங்க பண்றது எந்த வகையில நியாயம்? ராமதாஸ் உருக்கம்

By sathish kFirst Published Sep 21, 2019, 2:15 PM IST
Highlights

தமிழக அரசின் தொழில்நுட்ப பல்கலைக்கழகமான அண்ணா பல்கலைக்கழகம் இந்தியாவின் உயர்புகழ் கல்வி நிறுவனங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இதற்கான கட்டமைப்புகளை மேம்படுத்த தேவைப்படும் நிதி அண்ணா பல்கலை.யிடம் இல்லாத நிலையில் இந்த அரிய வாய்ப்பை அண்ணா பல்கலை இழக்க நேரிடுமோ என்ற கவலை ஏற்பட்டுள்ளது என ராமதாஸ் கூறியுள்ளார்.

தமிழக அரசின் தொழில்நுட்ப பல்கலைக்கழகமான அண்ணா பல்கலைக்கழகம் இந்தியாவின் உயர்புகழ் கல்வி நிறுவனங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இதற்கான கட்டமைப்புகளை மேம்படுத்த தேவைப்படும் நிதி அண்ணா பல்கலை.யிடம் இல்லாத நிலையில் இந்த அரிய வாய்ப்பை அண்ணா பல்கலை இழக்க நேரிடுமோ என்ற கவலை ஏற்பட்டுள்ளது என ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவரின் அறிக்கையில்; உலகின் தலைசிறந்த 100 கல்வி நிறுவனங்கள் பட்டியலில் இந்திய கல்வி நிறுவனங்கள் ஒன்று கூட இடம்பெறாத நிலையில், அவற்றில் இந்திய பல்கலைக்கழகங்களை இடம்பெறச் செய்யும் நோக்கத்துடன் 10 அரசு கல்வி நிறுவனங்கள், 10 தனியார் கல்வி நிறுவனங்கள் என மொத்தம் 20 பல்கலைக்கழகங்களை உயர்புகழ் கல்வி நிறுவனங்களாக மத்திய அரசு அறிவிக்க உள்ளது. 10 அரசு கல்வி நிறுவனங்களில் தமிழகத்தின் அண்ணா பல்கலைக்கழகம், மேற்கு வங்கத்தின் ஜாதவ்பூர் பல்கலைக்கழகம் ஆகியவை மட்டும் தான் மாநிலப் பல்கலைக்கழகங்கள் ஆகும். உயர்புகழ் கல்வி நிறுவனத் தகுதியை பெறுவதற்காக கட்டமைப்புகளை வலுப்படுத்துதல் உள்ளிட்ட ஏராளமான பணிகளை பல்கலைக்கழகங்கள் செய்ய வேண்டியிருக்கும். இதற்காக ஒவ்வொரு பல்கலைக்கழகமும் அதிகபட்சமாக ரூ.3,000 கோடி வரை செலவிட வேண்டியிருக்கும் என உத்தேசமாக மதிப்பிடப்பட்டுள்ளது.

உயர்புகழ் நிறுவனங்களாக அறிவிக்கப்படவுள்ள 10 அரசு கல்வி நிறுவனங்களில் சென்னை ஐ.ஐ.டி உள்ளிட்ட 8 நிறுவனங்கள் மத்தியப் பல்கலைக்கழகங்கள் என்பதால் அவற்றுக்கான செலவை மத்திய அரசே ஏற்றுக்கொள்ளும். ஆனால், அண்ணா பல்கலைக்கழகம், ஜாதவ்பூர் பல்கலைக்கழகம் ஆகிய மாநில பல்கலைக்கழகங்களுக்கு ஆகும் செலவில் பெரும்பகுதியை மாநில அரசுகளே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு கூறியிருப்பது தான் பெரும் முட்டுக்கட்டையை ஏற்படுத்தியிருக்கிறது. பல்கலைக்கழகங்களை தரம் உயர்த்துவதற்காக ஆகும் செலவில் 50% அல்லது ரூ.1000 கோடியில் எது குறைவோ அதை மட்டும் தான் மத்திய அரசு வழங்கும். அண்ணா பல்கலைக்கழகத்தை மேம்படுத்த ரூ.2750 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டிருப்பதால், மத்திய அரசு வழங்கும் ரூ.1000 கோடி தவிர மீதமுள்ள ரூ.1750 கோடியை 5 ஆண்டுகளில் அண்ணா பல்கலை திரட்ட வேண்டும். இது சாத்தியமல்ல.

அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒரு காலத்தில் பெருமளவில் உபரி நிதி இருந்தது என்றாலும், காலப் போக்கில் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட விரிவாக்கப் பணிகளாலும், மாணவர்களுக்கு மிகக் குறைந்த கட்டணத்தில் கல்வி வழங்கப்படுவதாலும் உபரி நிதி செலவாகி விட்டது. பல்கலைக்கழகத்தின் வழக்கமான செலவுகளுக்கே நிதி இல்லாததால் தான் அண்மையில் பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி கல்விக்கட்டணத்தை அண்ணா பல்கலைக்கழகம் உயர்த்தியது. இத்தகைய சூழலில் அண்ணா பல்கலைக்கழகம் ஆண்டுக்கு ரூ.350 கோடி செலவிடுவது கற்பனையில் கூட நடக்காத காரியம்.

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு தேவைப்படும் ரூ.1750 கோடியை தமிழக அரசு வழங்குவதற்கான வாய்ப்புகளும் மிகவும் குறைவு. ஜி.எஸ்.டி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு மாநில அரசுகளின் வரிவிதிப்பு அதிகாரம் கிட்டத்தட்ட பறிக்கப்பட்டு விட்டது. தமிழகம் போன்ற மாநிலங்களுக்கு வரி அல்லாத வருவாய் ஆதாரங்களும் பெரிதாக இல்லாத நிலையில் தமிழக அரசால் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு இவ்வளவு பெரிய தொகையை வழங்க முடியாது. அதேநேரத்தில் ரூ.1750 கோடியை அடுத்த 5 ஆண்டுகளில் செலவிடுவதற்கான உத்தரவாதத்தை தமிழக அரசும், அண்ணா பல்கலைக்கழகமும் அளிக்காவிட்டால் இந்த தகுதி மராட்டியத்திலுள்ள சாவித்ரிபாய் புலே பல்கலைக்கழகம் அல்லது அலிகார் இஸ்லாமியப் பல்கலைக்கழகத்திற்கு மாற்றி வழங்கப்படும் என்று தமிழக அரசுக்கு மத்திய அரசு நெருக்கடி கொடுத்து வருகிறது. மத்திய அரசின் இந்த செயல் எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத சமூக அநீதியாகும்.

உயர்புகழ் கல்வி நிறுவனங்களுக்காக விண்ணப்பங்கள் பெறப்பட்ட போது, தேர்ந்தெடுக்கப்படும் கல்வி நிறுவனங்களுக்கு மத்திய அரசின் சார்பில் நிதியுதவி வழங்கப்படும் என்று தான் கூறப்பட்டதே தவிர, பல்கலைக்கழகங்கள் பெரும் தொகையை செலவிட வேண்டியிருக்கும் என்று எந்த நிபந்தனையும் விதிக்கப்படவில்லை. அவ்வாறு இருக்கும் போது மாநில பல்கலைக்கழகங்களின் நிதி நிலை குறித்து அறிந்திருந்தும் அவை ரூ.2000 கோடி வரை செலவழிக்க வேண்டும் என்று மத்திய அரசு கூறுவது நியாயமற்றது. அதுமட்டுமின்றி இத்தகுதிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 8 மத்திய கல்வி நிறுவனங்களில் 3 நிறுவனங்களுக்கு இத்தகுதி வழங்கப்பட்டு விட்டது. சென்னை ஐ.ஐ.டி உள்ளிட்ட மீதமுள்ள 5 கல்வி நிறுவனங்களுக்கு மத்திய அரசே முழு நிதியையும் வழங்கவுள்ளது. சென்னை அடையாறில் சாலையின் ஒருபுறத்தில் அமைந்துள்ள சென்னை ஐ.ஐ.டிக்கு முழு நிதியை வழங்கவுள்ள மத்திய அரசு, மறுபுறம் அமைந்துள்ள அண்ணா பல்கலைக்கழகத்திற்கு முழு நிதியை வழங்க மறுப்பது எந்த வகையில் நியாயம்?

உயர்புகழ் கல்வி நிறுவனங்களை உருவாக்குவதன் நோக்கமே உலகின் முன்னணி கல்வி நிறுவனங்கள் பட்டியலில் இந்திய கல்வி நிறுவனங்களை இடம்பெறச் செய்வது தான். இந்த நோக்கம் நிறைவேறினால் அது ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் தான் பெருமை சேர்க்குமே தவிர, மாநிலங்களுக்கு தனித்த பெருமை சேர்க்காது. அதுமட்டுமின்றி உயர்புகழ் கல்வி நிறுவனங்களை உருவாக்குவது மத்திய அரசின் கனவுத் திட்டம் ஆகும். இதற்காக மாநில அரசுகள் நிதி வழங்க வேண்டும் என நிபந்தனை விதிப்பது சரியல்ல.

எனவே, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தை உயர்புகழ் கல்வி நிறுவனமாக அறிவித்து மாற்றுவதற்கு முழு நிதியையும் மத்திய அரசே வழங்க வேண்டும் என்று தமிழக மக்கள் சார்பில் வலியுறுத்துகிறேன் எனக் கூறியுள்ளார்.

click me!