ஆளுநருக்கு ராமதாஸின் அடுக்கடுக்கான அதிரடி கேள்விகள்

First Published Apr 8, 2018, 2:05 PM IST
Highlights
ramadoss questioned governor in vice chancellor issue


அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நியமனம் தொடர்பாக ஆளுநருக்கு ஆறு கேள்விகள் எழுப்பியுள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ்.

இதுதொடர்பாக ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனம் விதிகளின்படி நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடைபெற்றதாகவும், இந்த விஷயத்தை அரசியலாக்க வேண்டாம் என்று ஆளுநர் மாளிகை கோரியுள்ளது. அதுமட்டுமின்றி இந்த விஷயத்தில் தேவையின்றி சேற்றை வாரி இறைக்க வேண்டாம் என்றும் ஆளுநர் மாளிகை கேட்டுக் கொண்டிருக்கிறது. துணைவேந்தர் நியமனத்தில் தமிழக கல்வியாளர்கள் அவமதிக்கப்பட்டதைத் தட்டிக்கேட்பவர்கள் மீது இப்படி ஒரு குற்றச்சாட்டைக கூறுவது ஆளுநர் மாளிகைக்கு அழகல்ல.

* அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தராக நியமிக்கப்பட்ட சூரப்பாவை விட, அந்தப் பதவியை வகிக்க தகுதியுள்ள ஏராளமான கல்வியாளர்கள் தமிழகத்தில் உள்ளனர். அவர்களுக்கு வாய்ப்பளிக்காமல் எங்கோ பணியாற்றிய, கல்வியிலும், நிர்வாகத்திலும் சொல்லிக்கொள்ளும்படி எதையும் சாதிக்காத சூரப்பாவுக்கு துணை வேந்தர் பதவி கொடுத்தது ஏன்? என்பதுதான் பாமகவின் வினா. இந்த வினாவுக்கு ஆளுநர் மாளிகை அளித்த வினாவில் எந்த விளக்கமும் இல்லை.

துணைவேந்தர் நியமனம் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடைபெற்றதாக ஆளுநர் மாளிகை கூறியிருக்கிறது. இது அப்பட்டமான பொய்யாகும். முழுக்க, முழுக்க இரும்புத்திரைக்கு பின்னால் நடைபெற்ற ஒரு நடைமுறையை வெளிப்படையாக நடைமுறை என்று கூறுவது தவறு. செய்த தவறை மறைக்க ஆளுநர் மாளிகை மலிவான விளக்கங்களைத் தரக்கூடாது.

* அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு மொத்தம் 170 பேராசிரியர்கள் விண்ணப்பித்தனர். அவர்களின் விண்ணப்பங்கள் 3 கட்ட ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, 30 பேரும் அடுத்தக்கட்டமாக 9 பேரும், மூன்றாம் கட்டமாக 3 பேரும் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களில் சூரப்பா துணைவேந்தராக நியமிக்கப்பட்டதாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. அப்படியானால், 170 பேரின் எண்ணிக்கை எந்த தகுதிகளின் அடிப்படையில் 3 ஆக குறைக்கப்பட்டது என்பதை ஆளுநர் மாளிகை விளக்காதது ஏன்? இந்த விஷயத்தில் வெளிப்படைத்தன்மை தேவையில்லை என ஆளுநர் மாளிகை கருதுகிறதா?

* திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், சேலம் பெரியார் பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு துணைவேந்தர்கள் நியமிக்கப்பட்டபோது, அப்பதவிக்காக விண்ணப்பித்த அனைவரின் பெயர்களும் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டன. குறைந்தபட்சம் இத்தகைய நடைமுறையை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் தேர்வுக்குழு கடைபிடிக்காதது ஏன்? சூரப்பா தொடக்கத்திலேயே இப்பதவிக்கு விண்ணப்பித்தாரா? அல்லது இடையில் அவரது பெயர் திணிக்கப்பட்டதா என்பதை எப்படி உறுதி செய்வது?

* இறுதிச் சுற்றில் நேர்காணல் நடத்திய தேவராஜ், பொன்னுசாமி, சூரப்பா ஆகியோரில் சூரப்பாவுக்கு நிர்வாக அனுபவம் இருந்ததால் அவரை ஆளுநர் தேர்ந்தெடுத்ததாக ஆளுநர் மாளிகை கூறியிருக்கிறது. சூரப்பா ஒரு நிறுவனத்தை மட்டுமே நிர்வகித்தார். ஆனால், தேவராஜ் பல்கலைக்கழக மானியக் குழுவின் துணைத் தலைவராக நாடு முழுவதும் உள்ள 842 பல்கலைக்கழகங்களை 5 ஆண்டுகள் நிர்வகித்தார். அவற்றில் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலை.களும் அடக்கம். 842 நிறுவனங்களை நிர்வகிப்பதை விட, ஒரு நிறுவனத்தை நிர்வகிப்பது தான் நிர்வாக அனுபவம் என்று எந்த அடிப்படையில் ஆளுநர் முடிவு செய்தார்?

* பஞ்சாப் மாநிலம் ரோப்பர் ஐ.ஐ.டியின் இயக்குனராக இருந்தபோது சூரப்பா செய்த நிர்வாகக் குளறுபடிகளை முன்பே குறிப்பிட்டிருந்தேன். அவற்றையெல்லாம் சூரப்பாவின் நிர்வாக சாதனைகளாக ஆளுநர் கருதுகிறாரா?

* துணைவேந்தர் பதவிக்கான நேர்காணல் கடந்த 5-ம் தேதி நடைபெற்ற நிலையில், 4-ம் தேதியே சூரப்பாவை துணைவேந்தராக நியமிக்க ஆணை தயாராகி விட்டதாக செய்திகள் வெளியானது எப்படி?

தமிழகத்தில் உள்ள கல்வியாளர்களை நிர்வாகத் திறமையற்றவர்கள்; ஊழல்வாதிகள் என்று முத்திரைக் குத்தி அவமானப்படுத்தி, ஒட்டுமொத்த உயர்கல்வியையும் மற்ற மாநிலத்தவர்களிடம் ஒப்படைக்க பெரும் சதி நடைபெறுகிறது. அதை எதிர்த்துப் போராட வேண்டிய ஆட்சியாளர்கள் வேண்டுமானால் பொறுத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால், இதையெல்லாம் தமிழ்நாட்டு மக்கள் சகித்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.

ஆளுநர் என்பவர் மாநில அரசு நிர்வாகத்தின் தலைவர் ஆவார். அவரது செயல்பாடுகள் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும். ஆனால், ஆளுநர் மாளிகை சார்பில் நேற்று வெளியிடப்பட்ட விளக்க அறிக்கையில் பல இடங்களில் உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, சிலரைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக அவர்களைப் பற்றிய பிம்பங்களைக் கட்டமைக்கும் பணியில் ஆளுநர் மாளிகை ஈடுபடுகிறது.

தமிழகத்தின் நிர்வாகத்தை கவனிக்க வேண்டிய ஆளுநர் மாளிகை சிலரின் மக்கள் தொடர்பு மையமாக மாற்றப்பட்டு வருவது மிகவும் கவலையளிக்கிறது. இது ஆளுநர் மாளிகை மீதான மரியாதையை குறைத்து விடும். இதை சுட்டிக்காட்டினால் அரசியல் செய்வதாகவும், சேற்றை வாரி இறைப்பதாகவும் கூறுவது ஆளுநர் மாளிகை செய்யக்கூடிய செயலல்ல. ஆளுநர் மாளிகை ஆட்சி செய்யலாம்... அரசியல் செய்யக்கூடாது.

எனவே, அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக கர்நாடகத்தைச் சேர்ந்த சூரப்பாவை நியமித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ஆளுநர் மாளிகை ரத்து செய்ய வேண்டும். அவருக்கு பதிலாக தமிழகத்தைச் சேர்ந்த தகுதியும், திறமையும் கொண்ட ஒருவரை புதிய துணைவேந்தராக ஆளுநர் நியமிக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
 

click me!