சொந்த காசை வைத்து தான் பஸ்ஸில் போராட்டத்துக்கு போவேன், காரு கூட இல்ல... ராமதாஸ் சொல்லும் பிளாஷ் பேக்...

By sathish kFirst Published Jun 24, 2019, 12:57 PM IST
Highlights

வாரத்தில் 5 நாட்கள் திண்டிவனம் மருத்துவமனையில் பணியாற்றி கிடைக்கும் வருவாயைக் கொண்டு தான் சனிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமையும் பல்வேறு ஊர்களுக்குச் சென்று சங்கப் பணிகளை கவனிப்பேன். இதற்கான அனைத்து செலவுகளையும் நான் உழைத்து ஈட்டிய சொந்தக் காசில் இருந்து செய்வேன் என பழைய நினைவுகளை பகிர்ந்துள்ளார்.

 ‘சங்க’ கால நினைவுகள் பேருந்தில் 4 மணி நேர தவம், சொந்தங்களைக் காண்பதே வரம்! என்ற
தலைப்பிட்டு அவர் வன்னிய சங்கம் தொடங்கும்போது நடந்த சில சோக நிகழ்வுகளை பதிவிட்டுள்ளார். அதில்,  தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டங்களை நடத்திக் கொண்டிருந்த காலம் அது. போராட்டத்திற்கான ஏற்பாடுகள் மற்றும் மக்கள் சந்திப்புகள் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தான் நடைபெறும். வாரத்தில் 5 நாட்கள் திண்டிவனம் மருத்துவமனையில் பணியாற்றி கிடைக்கும் வருவாயைக் கொண்டு தான் சனிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமையும் பல்வேறு ஊர்களுக்குச் சென்று சங்கப் பணிகளை கவனிப்பேன். இதற்கான அனைத்து செலவுகளையும் நான் உழைத்து ஈட்டிய சொந்தக் காசில் இருந்து செய்வேன்.

அப்போதெல்லாம் இயக்கப் பணிகளுக்காக என்னிடம் மகிழுந்து இல்லை. அதனால் சென்னையோ, சேலமோ எங்கு சென்றாலும் திருவள்ளுவர் விரைவுப் பேருந்தில் தான் பயணம். பயணச்சீட்டு முன்பதிவு செய்ய வாய்ப்பில்லை என்பதால் வரும் பேருந்தில் ஏறித் தான் பயணிக்க வேண்டும். நாம் ஏறும் நேரத்தில் அமருவதற்கு இருக்கை கிடைத்தால் அது நமக்கான நல்வாய்ப்பு. ஆனால், பெரும்பாலான நேரங்களில் அமர இடம் இருக்காது என்பதால், நின்று கொண்டு தான் பயணம் செய்ய வேண்டியிருக்கும்.

திண்டிவனத்திலிருந்து சேலத்திற்கு செல்ல பேருந்தில் ஏறினால், ‘‘அமர இடம் இல்லை. ஆத்தூரில் தான் இருக்கை கிடைக்கும்’’ என்பார் நடத்துனர். அடுத்த பேருந்து வர ஒரு மணி நேரம் கூட ஆகலாம் என்பதாலும், அதிலும் இருக்கை கிடைக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்பதாலும் நிற்க இடம் கிடைத்தாலே போதும் என்று நினைத்து பேருந்தில் ஏறிக்கொள்வது வழக்கம்.

திண்டிவனத்திலிருந்து சேலத்திற்கு மொத்தம் 215 கிலோமீட்டர்கள். அதில் ஆத்தூர் வரை 159 கி.மீ. மொத்த பயண நேரம் 5 மணி நேரம் என்றால் அதில் மூன்றரை மணி நேரம் நின்று கொண்டே தான் பயணிப்பேன். கால்களில் கடுமையான வலி இருக்கும். இது அனைத்தும் சேலத்திற்கு சென்று வன்னியர் சங்க நிர்வாகிகளை பார்க்கும் வரையில் தான். அவர்களைப் பார்த்து, உரையாடத் தொடங்கியவுடன் வலி மறைந்து மனம் பரவசமடையத் தொடங்கிவிடும். சேலத்திற்கு செல்லும் போது மட்டுமல்ல.... சென்னைக்கு சென்றாலும், பிற ஊர்களுக்கு சென்றாலும் இதே நிலை தான்.

ஆனாலும், அதற்காக நான் கவலைப்பட்டதில்லை. சங்க நிர்வாகிகளையும் சொந்தங்களையும் சந்திப்பது ஒரு வரம். அந்த வரத்தை பெறுவதற்காக செய்த தவம் தான் பேருந்தில் நின்று கொண்டு பயணம் செய்தது என்று நான் நினைத்துக் கொள்வேன் எனக் கூறியுள்ளார்.

click me!