நான் தவித்தேன்... துடித்தேன்.... சொந்தங்கள் கதறினர்! ஏராளம்... ஏராளம்! ராமதாஸ் சொல்லும் பழைய கதை...

 
Published : Apr 30, 2018, 02:15 PM ISTUpdated : Sep 19, 2018, 02:18 AM IST
நான் தவித்தேன்... துடித்தேன்.... சொந்தங்கள் கதறினர்!  ஏராளம்... ஏராளம்!  ராமதாஸ் சொல்லும் பழைய கதை...

சுருக்கம்

ramadoss facebook status about his past

கேட்டது நீதி... கிடைத்தது சிறை: கந்தக பூமியில் வெந்து மீண்ட நாட்கள்
1. நீதிக்கு கிடைத்த அநீதி என்னும் தலைப்பில் பாமக தலைவர் ராமதாஸ் கடந்த காலங்களில் தான் அனுபவித்த சம்பவங்களை பதிவிட்டு வருகிறார்.

அதில், ஒரு கட்சியின் தலைவராக இருப்பவர் அவரது தொண்டர்களின் சுக, துக்கங்களில் பங்கேற்பவராக இருக்க வேண்டும். அப்போது தான் அந்தக் கட்சி கட்டுக்கோப்பாக, எதிரிகளால் வீழ்த்த முடியாததாக விளங்கும். பாட்டாளி மக்கள் கட்சியைப் பொறுத்தவரை நிறுவனர், தலைவர், பொதுச் செயலாளர் என நிர்வாக வசதிக்காக பல்வேறு பதவிகள் இருந்தாலும் கூட நடைமுறையில் பாட்டாளிகள் அனைவரும் சொந்தங்கள் தான். எனக்கு ஏதேனும் ஒன்றென்றால் பாட்டாளிகள் துடித்துப் போய் விடுவார்கள். நானும் அப்படித் தான் பாட்டாளிகளுக்கு எந்த பாதிப்பு என்றாலும் என்னால் தாங்கிக் கொள்ள முடியாது.

மரக்காணம் கலவரத்தில் விவேக், செல்வராஜ் ஆகிய இரு சொந்தங்கள் சமூக விரோதிகளால் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டது என்னை மிகவும் காயப்படுத்தியது. அதிலும் இறந்த இருவரும் அவர்களின் குடும்பங்களுக்கு மிகவும் முக்கியமானவர்கள். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த தேவனாஞ்சேரியை சேர்ந்த விவேக் அப்போது தான் இளமைப்பருவத்தில் அடி எடுத்து வைத்திருந்தான். அவனுக்கு எதிர்காலம் குறித்த ஆயிரம் கனவுகள் இருந்திருக்கும். அதேபோல் தான் அரியலூர் மென்மங்கலத்தைச் சேர்ந்த செல்வராஜும் அவரது குடும்பத்திற்கு மிகவும் முக்கியமானவர் ஆவார். அவர் தான் அவரது குடும்பத்திற்கு வாழ்வாதாரம் ஈட்டித் தருபவராக இருந்தார்.

25.04.2013 அன்று மாமல்லபுரத்தில் நடைபெற்ற சித்திரை முழுநிலவு நாளில் பங்கேற்பதற்காக மற்ற சொந்தங்களுடன் வந்த அவர்கள் இருவரையும் மரக்காணம் என்ற இடத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மறித்து தகராறு செய்ததுடன் அவர்களை விரட்டிச் சென்று கொடூரமாக கொலை செய்தனர். சொந்தங்களைக் காண வந்த இரு சொந்தங்கள் உயிரற்ற உடலாக எடுத்துச் செல்லப்படும் கொடுமையின் வலி அதை அனுபவித்துப் பார்த்தவர்களுக்குத் தான் தெரியும். அந்த வலி எனக்கும் ஏற்பட்டது.

அதைவிட பெரிய வலி என்னவென்றால், மரக்காணத்தில் நடந்த வன்முறைகளை தடுக்கத் தவறிய காவல்துறை, அந்தக் கலவரத்துக்கு பாட்டாளி மக்கள் கட்சியினர் தான் காரணம் என்று பொய் வழக்குப் பதிவு செய்தது. இந்த அநீதிகளைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தான் மரக்காணத்தில் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த விவேக், செல்வராஜ் ஆகியோர் விடுதலை சிறுத்தைகள் கும்பலால் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டது குறித்து விசாரணைக்கு ஆணையிட வேண்டும், பாட்டாளி மக்கள் கட்சியினர் மீதான பொய்வழக்குகளை திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்தி 2013&ஆம் ஆண்டு ஏப்ரல் 30-ஆம் தேதி விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு எனது தலைமையில் போராட்டம் நடத்தப்படும் என்று ஏப்ரல் 28-ஆம் தேதியே நான் அறிவித்திருந்தேன்.

தடையை மீறிப் போராட்டம்!

இந்தப் போராட்டத்திற்கு விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரும் அனுமதி அளித்திருந்தார். பின்னர், இப்போராட்டத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலிருந்து, தொடர்வண்டி நிலையம் அருகில் மாற்றிக் கொள்ளும்படி பா.ம.க. நிர்வாகிகளிடம் காவல்துறையினர் கேட்டுக் கொண்டனர். அதன்படி போராட்டமும் தொடர்வண்டி நிலையத்திற்கு அருகில் மாற்றப்பட்டது. போராட்டத்திற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், எங்களின் போராட்டத்திற்கு ஒரு நாள் முன்பாக சட்டப்பேரவையில் மரக்காணம் வன்முறை தொடர்பாக கொண்டு வரப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் மீதான விவாதத்திற்குப் பதில் அளித்து பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா, பாட்டாளி மக்கள் கட்சி மீதும், என் மீதும் ஆத்திரத்தை உமிழ்ந்தார்; அடிப்படை ஆதாரம் இல்லாத அவதூறு குற்றச்சாற்றுகளைக் கூறினார். இதன்மூலம் ஜெயலலிதாவின் மனநிலையைப் புரிந்து கொண்ட விழுப்புரம் மாவட்டக் காவல்துறையினர், அதற்கு அடுத்த நாள் நடைபெறவிருந்த போராட்டத்திற்கான அனுமதியை முந்தைய நாள் நள்ளிரவில் எந்தக் காரணமும் கூறாமல் இரத்து செய்தனர். போராட்டத்திற்கு ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டுவிட்ட நிலையில், சரியான காரணம் இல்லாமல் அனுமதியை காவல்துறையினர் ரத்து செய்தது உள்நோக்கம் கொண்டதாகும். அதனால் தடையை மீறி 30-ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தேன்.

எச்சரிக்கையையும் மீறி...
போராட்டம் நடைபெறவிருந்த 30-ஆம் தேதி அதிகாலையிலிருந்தே எனக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் தொலைபேசி அழைப்புகள். அனைவரும் கூறியது ஒரே விஷயம் தான். ‘‘மாமல்லபுரம் மாநாட்டில் அதிமுகவையும், ஜெயலலிதாவையும் மிகக் கடுமையாக விமர்சித்ததால் மேலிடம் உங்கள் மீது கோபமாக இருக்கிறது. தடையை மீறி போராட்டம் நடத்தினால் உங்களை கைது செய்வார்கள். அதனால் இன்று போராட்டம் நடத்துவதை தவிர்த்து விடுங்கள்’’ என்பது தான் அவர்கள் கூறிய செய்தி ஆகும். இவ்வாறு என்னை எச்சரித்தவர்களில் பலர் காவல்துறை உயரதிகாரிகள் ஆவர்.

ஆனால், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தடையை மீறி போராட்டம் நடத்தினேன். உடனடியாக காவல்துறை அதிகாரிகள் என்னை கைது செய்தனர். போராட்டம் நடைபெறவிருந்த இடத்தில் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் கூடியிருந்த நிலையில் அவர்களிடையே சில வார்த்தைகள் பேசுவதற்கு கூட காவல்துறை அனுமதிக்கவில்லை. அந்த அளவுக்கு காவல்துறையினர் மூர்க்கம் காட்டினர். அதுமட்டுமின்றி, என்னுடன் போராட்டத்தில் பங்கேற்ற பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட ஆயிரக்கணக்கான தொண்டர்களையும் காவல்துறை கைது செய்தது.

கைதான ஒரே குழு நாங்களே!

இங்கு ஒரு விஷயத்தை உங்களுக்கு கூறியாக வேண்டும். கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்காக தடையை மீறி போராட்டம் நடத்துவது வழக்கமான ஒன்று தான். தடையை மீறி போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யும் காவல்துறையினர் அடுத்த சில மணி நேரங்களிலோ அல்லது அன்று மாலையிலோ விடுதலை செய்து விடுவது வழக்கம். ஆனால், பழிவாங்கும் நோக்கம் காரணமாக என்னையும், என்னுடன் கைது செய்யப்பட்டவர்களையும் சிறையில் அடைத்தது ஜெயலலிதா அரசு. 2011-ஆம் ஆண்டுக்கு பிறகு இன்று வரை தடையை மீறி போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்டு உடனடியாக விடுதலை செய்யாமல் சிறையிலடைக்கப்பட்ட ஒரே குழுவினர் நானும், எனது தொண்டர்களும் தான்.

கைது செய்யப்பட்ட என்னையும், மற்றவர்களையும் காற்றோட்டம் இல்லாத திருமண அரங்கம் ஒன்றில் 12 மணி நேரத்திற்கும் மேலாக காவல்துறையினர் அடைத்து வைத்திருந்தனர். பின்னர் நான் உட்பட கைதான அனைவரையும் 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி ஆணையிட்ட போதும், அதை மதித்து உடனடியாக சிறைக்கு கொண்டு செல்லாமல், விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பல மணி நேரம் காத்திருக்க வைத்தனர். நள்ளிரவு வரை நரக வேதனை தொடர்ந்தது.

ஆட்டுவித்தவர் அங்கே.... ஆடியவர்கள் இங்கே

இதற்கெல்லாம் காரணம் விழுப்புரம் மாவட்டக் காவல்துறை என்று கூற மாட்டேன். அவர்கள் வெறும் அம்பு தான். அம்புகளை ஏவிய வேடன் அப்போதைய காவல்துறை தலைமை இயக்குனர் கே.இராமானுஜம் என்பவர். அவரை இயக்கியவர் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா. அதற்கும் காரணங்கள் இருந்தன.

2011 ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்த ஜெயலலிதாவை பேரவையிலும், பேரவைக்கு வெளியிலும் எதிர்த்துக் கேள்வி கேட்க ஆளில்லை. தமிழகத்தின் அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சியாக தேமுதிக இருந்தது. அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் பேரவைக்கு செல்வதே அரிதான நிகழ்வாகி விட்டது.

அதேபோல் திமுக தலைவர் கலைஞரும் தமக்கு இருக்கை வசதி செய்து தரப்படவில்லை என்று அவை நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை. ஆனாலும், ஜெயலலிதாவின் ஊழல்களையும், மக்கள் விரோத செயல்பாடுகளையும் மிகக்கடுமையாக விமர்சித்து வந்த ஒரே கட்சி பாட்டாளி மக்கள் கட்சி தான். இதனால் பா.ம.க. மீதும், என் மீதும் ஜெயலலிதாவுக்கு தாங்க முடியாத அளவுக்கு கோபம் இருந்தது. வாய்ப்பு கிடக்கும் போது பழிவாங்க காத்துக் கிடந்தார். அதற்காக இந்த வாய்ப்பை அவர் பயன்படுத்திக் கொண்டார்.

தடையை மீறி போராட்டம் நடத்தியதற்காக என்னை கைது செய்தாலும் கூட மாலையில் விடுதலை செய்திருக்கலாம். சிறையில் அடைப்பது என்று தீர்மானித்திருந்தால் உடனடியாக நீதிமன்றத்தில் நேர் நிறுத்தி சிறைக்கு கொண்டு சென்றிருக்கலாம். நேர்மையான அரசு இப்படித் தான் செய்யும். ஆனால், ஜெயலலிதாவுக்கும், நேர்மைக்கும் தான் தொடர்பு இல்லையாயிற்றே. அதனால் தான் அவர் எனக்கு எதிராக பழிவாங்கல் படலங்களை நிறைவேற்றினார். அவருக்கு கருவியாக இருந்து பழிவாங்கலை செயல்படுத்தியவர் இராமானுஜம். அதற்காக இராமானுஜத்துக்கு கிடைத்த பணி நீட்டிப்புகள், பதவி உயர்வுகள், புதிய பதவிகள் ஏராளம்... ஏராளம்.
இராமானுஜம் கூறியவாறு காவல்துறை அதிகாரிகள் செயல்படவில்லை என்றால் அவர்களும் பழி வாங்கப்படுவார்கள். அதற்கு அஞ்சி தான் அவர்கள் அவ்வாறு நடந்து கொண்டார்கள். எனினும், கொளுத்தும் வெயிலில் அடிப்படை வசதிகள் கூட இல்லாத அரங்கத்தில் பல மணி நேரம் அடைத்து வைத்ததும், சிறையில் அடைக்க நீதிபதி ஆணையிட்ட பிறகும் வாகனத்தில் பல மணி நேரம் காத்துக் கிடக்க வைத்திருந்ததும் மன்னிக்க முடியாத மனித உரிமை மீறல்கள் தான்.

ஆனால், இவையெல்லாம் ஒரு கொடுமையே இல்லை என்று கூறும் அளவுக்கு இவற்றை விட பல மடங்கு கொடுமைகள் திருச்சி சிறையில் அரங்கேற்றப்பட்டன.

நான் தவித்தேன்... துடித்தேன்.... சொந்தங்கள் கதறினர்!

நாளை எழுதுகிறேன்.... இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

தேர்தல் செலவுக்கு மண் திருடும் மாஃபியாக்கள்..! ஸ்வீட்பாக்ஸில் கொழிக்கும் அதிகாரிகள்..!
TVK தான் பெஸ்ட் சாய்ஸ்.. கூட்டாக விஜய் பக்கம் சாய்ந்த பன்னீர்செல்வம் மா.செ.கள்