குருவுக்கும், எனக்கும் இடையிலான உறவு... ராமதாஸின் உருக்கமான ஃபிளாஷ் பேக்

By sathish kFirst Published Sep 16, 2019, 6:21 PM IST
Highlights

குருவுக்கும், எனக்கும் இடையிலான உறவு அரசியல் கட்சி நிறுவனருக்கும், தொண்டருக்கும் இடையிலானதாக ஒருபோதும் இருந்ததில்லை; மாறாக பாசமுள்ள தந்தைக்கும் விசுவாசமுள்ள மகனுக்கும் இடையிலான உன்னதமான உறவாகவே இருந்தது

மாவீரன் குருவின் பெருமைகளை வெறும் வார்த்தைகளால் வர்ணித்துவிட முடியாது. அதற்கான தெம்பும், மனநிலையும் எனக்கு இல்லை. நான் கண்ணீரில் நனைந்து கொண்டிருக்கிறேன். எனது வாழ்வில் இன்று வரை சந்திக்காத, தாங்க முடியாத மிகப்பெரிய துயரத்தை நான் இப்போது சந்தித்திருக்கிறேன் என முத்துவிழா மலரில் வெளியான கட்டுரையில் காடுவெட்டி  உண்டான உறவு பற்றி உருக்கமாக கூறியுள்ளார்.

அரசியலில் நம்பிக்கைக்குரிய தளபதிகள் கிடைப்பது மிகவும் அரிது. எல்லா அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் நம்பிக்கைக்குரிய தளபதிகள் கிடைத்துவிடுவதில்லை. ஆனால், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அய்யாவுக்கு அரசியலில் நம்பிக்கைக்குரிய தளபதி ஒருவர் கிடைத்தார். அவர்தான் மாவீரன் என்றழைக்கப்பட்ட ஜெ.குரு ஆவார்.

இப்போதைய அரியலூர் மாவட்டம் ஜெயங்கொட்டை அடுத்த படைநிலை காடுவெட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெ.குரு. அவர் தொடக்கக்தில் திமுகவில் கிளைச் செயலாளராக பணியாற்றினார். பின்னர் மருத்துவர் அய்யாவின் சமூகநீதிப் பணிகளைக் கண்டு வியந்த அவர், திமுகவிலிருந்து விலகி வன்னியர் சங்கத்தில் இணைந்து தீவிரமாக பாடுபடத் தொடங்கினார். அப்போதே தமது அர்ப்பணிப்புள்ள செயல்களால் மருத்துவர் அய்யாவை கவர்ந்தார். பின்னர் பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்டபோது, ஒன்றியச் செயலாளர், மாவட்டச் செயலாளர் என படிப்படியாக வளர்ந்தார். ஒரு கட்டத்தில் வன்னியர் சங்கத்தின் தலைவராக ஜெ.குருவை, மருத்துவர் அய்யா அவர்கள் நியமித்தார். மருத்துவர் அய்யா என்ன கட்டளையிட்டாலும் அதை செய்து முடிக்கும் தளபதியாக மாவீரன் ஜெ.குரு திகழ்ந்தார் என்றால் அது மிகையாகாது.

சமூக நீதியையும் சமத்துவத்தையும் நிலைநிறுத்த வேண்டும் என்ற மருத்துவர் அய்யாவின் நிலைப்பாட்டிற்கு ஜெ.குரு பெருந்துணையாக இருந்தார். ஜெயங்கொண்டம் பகுதியில் நடைமுறையில் இருந்த இரட்டை குவளை முறையை ஒழிக்கவேண்டும் என்று மருத்துவர் அய்யா கட்டளையிட்ட போது, அதை அவர் செய்து முடித்தார். அவர் வாழ்ந்த பகுதிகளில் தீண்டாமை இருந்ததில்லை. காடுவெட்டியைச் சேர்ந்த அனைத்துத் தரப்பு மக்களுக்கும் அவர் காவலனாக இருந்தார்.

மருத்துவர் அய்யாவின் அறிவுரையை ஏற்று அரியலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 7 அம்பேத்கர் சிலைகளை மருத்துவர் அய்யா அவர்களின் திருக்கரங்களால் திறக்க வைத்தவர் ஜெ.குரு. ஜெயங்கொண்டம் பகுதியில் நெய்வேலி பழுப்புநிலக்கரி நிறுவனத்தின் சார்பில் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்காக அப்பகுதியில் வாழும் மக்களின் நிலங்களை அடிமாட்டு விலைக்கு கையகப்படுத்த தமிழக அரசு முயன்றபோது, மருத்துவர் அய்யாவின் ஆணைப்படி அதை எதிர்த்து பெரும் போராட்டம் நடத்தியவர் மாவீரன் குரு. மருத்துவர் அய்யாவும் பல்வேறு போராட்டங்களுக்கு தலைமை ஏற்றார். அதன் பயனாக, ஜெயங்கொண்டம் பகுதியில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு அதிக விலை கிடைத்திருக்கிறது.

மாவீரன் ஜெ.குரு மீது மருத்துவர் அய்யா அளவுகடந்த அன்பும், நம்பிக்கையும் வைத்திருந்தார். 2008ஆம் ஆண்டில் மாவீரன் ஜெ.குரு மீது அவதூறு பழிகளை சுமத்திய திமுக அரசு, அதற்காக அவரை கைது செய்தது. அதைக் கண்டித்து திமுகவுடனான உறவை பா.ம.க. முறித்துக்கொள்வதாக மருத்துவர் அய்யா அறிவித்தார். மாவீரன் குரு இருமுறை சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். வன்னியர் சங்கத்திலும், கட்சியிலும் அவருக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து மருத்துவர் அய்யா கௌரவித்தார்.

மாவீரன் ஜெ.குருவும், மருத்துவர் அய்யா மீது அளவுகடந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தார். தம்மை உருவாக்கியவர் மருத்துவர் அய்யாதான் என்று பல்வேறு தருணங்களில் அவர் அறிவித்திருக்கிறார். மருத்துவர் அய்யா என்ன கட்டளையிட்டாலும் அதை செய்து முடிப்பதை தமது கடமையாக அவர் கருதினார். அவரது அரசியல் நிலைப்பாடு குறித்து பல்வேறு தருணங்களில் எதிர்க்கட்சிகள் வதந்திகளையும், அவதூறுகளையும் பரப்பியபோது, “மரணம் ஒன்றுதான் மருத்துவர் அய்யாவிடமிருந்து என்னை பிரிக்கும்” என்று அறிவித்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

நுரையீரல் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட மாவீரன் குருவைக் காப்பாற்ற மருத்துவர் அய்யாவும், மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்களும் தீவிரமாக முயன்றனர். சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவம் அளிப்பதற்காக வெளிநாடுகளிலும், வெளிமாநிலங்களிலும் உள்ள புகழ்பெற்ற மருத்துவ வல்லுநர்களின் ஆலோசனைகளை மருத்துவர் அன்புமணி இராமதாசு பெற்றார். வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்று நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யவும் அவர் நடவடிக்கை எடுத்தார். ஆனால், அந்த முயற்சிகள் வெற்றிபெறவில்லை. சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் 46 நாட்கள் மருத்துவம் பெற்ற குரு, மருத்துவம் பயனளிக்காமல் கடந்த 2018ஆம் ஆண்டு மே 25ஆம் தேதி காலமானார்.

மாவீரன் ஜெ.குரு மறைந்த செய்தி தொலைபேசி மூலம் மருத்துவர் அய்யாவுக்கு தெரிவிக்கப்பட்ட போது, அதைக் கேட்டதும் அவர் மயங்கி விழுந்தார். மாவீரன் மீது அவர் எந்த அளவுக்கு பாசம் வைத்திருந்தார் என்பதற்கு அதுதான் சிறந்த உதாரணம் ஆகும். மாவீரனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து மருத்துவர் அய்யா வெளியிட்ட செய்தியில், “எனது வாழ்வில் எத்தனையோ இழப்புகளை நான் எதிர்கொண்டு இருக்கிறேன். அவை அத்தனையையும் தாண்டிய பெருஞ்சோகம் மாவீரன் குருவின் மறைவு தான். எனக்கும், மாவீரன் குருவுக்கும் இடையிலான உறவுக்கு வயது 35 ஆண்டுகளுக்கும் அதிகமாகும். சமூக நீதிப் போராட்டத்தில் எனக்கு துணை நின்ற தளபதிகளில் முக்கியமானவர் மாவீரன் குரு. அவரிடம் ஒரு பணியை ஒப்படைத்தால் அதை செய்து விட்டு தான் அடுத்த பணிக்கு செல்வார்.

எனக்கு அறிமுகமான நாளில் இருந்து கடைசி மூச்சு விடும் நாள் வரை எனது நம்பிக்கைக்குரிய தளபதியாக திகழ்ந்தவர் மாவீரன் குரு. அதேபோல் மாவீரன் குரு மீது நான் கொண்டிருந்த அன்பும், அக்கறையும் ஒருநாளும் குறைந்ததில்லை. குருவுக்கும், எனக்கும் இடையிலான உறவு அரசியல் கட்சி நிறுவனருக்கும், தொண்டருக்கும் இடையிலானதாக ஒருபோதும் இருந்ததில்லை; மாறாக பாசமுள்ள தந்தைக்கும் விசுவாசமுள்ள மகனுக்கும் இடையிலான உன்னதமான உறவாகவே இருந்தது. மாவீரன் குருவின் செயல்பாடுகள் குறித்து எனக்கு எப்போதுமே பெருமிதம் உண்டு.

மாவீரன் குருவின் பெருமைகளை வெறும் வார்த்தைகளால் வர்ணித்துவிட முடியாது. அதற்கான தெம்பும், மனநிலையும் எனக்கு இல்லை. நான் கண்ணீரில் நனைந்து கொண்டிருக்கிறேன். எனது வாழ்வில் இன்று வரை சந்திக்காத, தாங்க முடியாத மிகப்பெரிய துயரத்தை நான் இப்போது சந்தித்திருக்கிறேன். மிகப்பெரிய அதிர்ச்சி, வேதனை, துயரம் ஆகியவற்றால் தாக்கப்பட்டு, என்னை நானே தேற்றிக் கொள்ளவும் சமாதானப்படுத்திக் கொள்ளவும் முடியாமல் தவிக்கும் போது மற்றவர்களுக்கு எப்படி ஆறுதல் கூறுவது என்பது தெரியவில்லை” என்று கூறியிருந்தார்.

மாவீரனின் நினைவைப் போற்றும் வகையில், தமிழகம் முழுவதும் இரங்கல் கூட்டங்களை மருத்துவர் அய்யா நடத்தினார். திண்டிவனத்தை அடுத்த கோனேரிக்குப்பத்தில் சட்டக்கல்லூரி வளாகத்திற்கு ஜெ. குருவின் பெயரை மருத்துவர் அய்யா சூட்டினார். அந்த வளாகத்தில் ஜெ.குருவின் திருவுருவச் சிலையையும் மருத்துவர் அய்யா திறந்து வைத்தார். ஜெ.குருவின் சொந்த ஊரான காடுவெட்டியில் அவருக்கு மிகப் பெரிய அளவில் மணிமண்டபத்தை மருத்துவர் அய்யா அவர்கள் அமைத்திருக்கிறார். வெகுவிரைவில் அந்த மணிமண்டபம் திறக்கப்படவுள்ளது.

click me!