வாடிக்கையாளர்களிடம் கொள்ளையடிக்க வங்கிகள் திட்டம்!! ராமதாஸ் எச்சரிக்கை

 
Published : Apr 27, 2018, 12:58 PM ISTUpdated : Sep 19, 2018, 02:17 AM IST
வாடிக்கையாளர்களிடம் கொள்ளையடிக்க வங்கிகள் திட்டம்!! ராமதாஸ் எச்சரிக்கை

சுருக்கம்

ramadoss condemns banks charging plan

வங்கிகள் வழங்கும் காசோலைகள், பற்று அட்டைகள் மற்றும் அவை சார்ந்த சேவைகள் அனைத்தையும் இலவச சேவைகளாகக் கருதாமல்  வாடிக்கையாளர்களின் உரிமைகளாக கருத வேண்டும். இதற்காக வரி வசூலிக்கும் முடிவை மத்திய அரசும், கட்டணம் வசூலிக்கும் முடிவை வங்கிகளும் கைவிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் அனைத்து வணிக வங்கிகளிலும் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு வழங்கப்படும் காசோலை புத்தகங்கள், பற்று அட்டைகள், அவற்றைக் கொண்டு செய்யப்படும் பரிமாற்றங்கள் ஆகியவற்றுக்கு தனியாக கட்டணம் வசூலிக்க வங்கிகள் திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தத் திட்டத்தை வங்கிகள் செயல்படுத்தினால் அது வணிக வங்கிகளின் வீழ்ச்சிக்கு அடித்தளமாக அமையும்.

பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகள் இப்போது இலவசமாக வழங்கி வரும் இச்சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்கும்படி கட்டாயப்படுத்துவதே மத்திய அரசுதான் என்பது குறிப்பிடத்தக்கது. வங்கிகளில் சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு காசோலை புத்தகம் இலவசமாக வழங்கப்படுகிறது.

பற்று அட்டைகளுக்கு ஆண்டுக் கட்டணமாக ரூ.100 வரை வசூலிக்கப்படும் போதிலும், சேமிப்புக் கணக்கு உள்ள வங்கிகளின் தானியங்கி பணம் வழங்கும் மையங்களில் மாதத்திற்கு 5 முறையும், பிற வங்கிகளின் பணம் வழங்கும் நடுவங்களில் மாதத்திற்கு 3 முறையும் இலவசமாக பணம் எடுக்கவும், செலுத்தவும் முடியும். ஆனால், இந்த சேவைகள் அனைத்துக்கும் கட்டணம் வசூலிக்க வங்கிகள் முடிவு செய்துள்ளன.

பொதுத்துறை மற்றும் வணிக வங்கிகள் இதுவரை கட்டணமின்றி வழங்கி வந்த இந்த சேவைகளுக்கு, கடந்த ஐந்தாண்டுகளுக்கு பின்தேதியிட்டு சேவை வரி செலுத்த வேண்டும் என்று பொருட்கள் மற்றும் சேவை வரி நுண்ணறிவுப்பிரிவின் தலைமை இயக்குனர் ஆணையிட்டிருப்பதாகவும், அதைத் தொடர்ந்தே இந்த முடிவுக்கு வங்கிகள் வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

காசோலைகள், பற்று அட்டைகள் மற்றும் அவை சார்ந்த சேவைகளுக்கு சேவை வரி வசூலிக்கும் அரசின் முடிவும், அதைக் காரணம் காட்டி  அச்சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்கும் வங்கிகளின் முடிவும் தவறானவை; ஏற்க முடியாதவையாகும்.

காசோலைகளும், பற்று அட்டை சார்ந்த சேவைகளும் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கப் படுவதாகக் கூறுவதே பெரும் அபத்தமாகும். பொதுத்துறை வங்கிகளாக இருந்தாலும், தனியார்துறை வங்கிகளாக இருந்தாலும் அவற்றின் மூலதனம் என்பது அந்த வங்கிகளின் ஒட்டுமொத்த வரவு - செலவில் 10% கூட இருக்காது.

மீதமுள்ள பணம் முழுவதும் வாடிக்கையாளர்களின் பணம் தான். அவர்கள் சேமிப்புக் கணக்கில் வைத்துள்ள தொகைக்கு சராசரியாக 4% மட்டுமே வட்டி கொடுக்கும் வங்கிகள், அத்தொகையை கடனாகக் கொடுத்து அதிகபட்சமாக 16% வரை வட்டி வசூலிக்கின்றன.

வங்கிகள் ஒவ்வொரு ஆண்டும்  ஈட்டும் பல்லாயிரக்கணக்கான கோடி லாபத்திற்கு வாடிக்கையாளர்களின் சேமிப்பு தான் அடிப்படையாகும். அதற்கான சலுகையாகத் தான் வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு காசோலைகளை இலவசமாக வழங்குகின்றன. இது வாடிக்கையாளர்களிடமிருந்து கிடைக்கும் லாபத்தில் ஒரு விழுக்காடு கூட இருக்காது.

தானியங்கி பணம் வழங்கும் எந்திரங்களில் பற்று அட்டைகள் மூலம் பணம் எடுப்பதும், செலுத்துவதும்  கூட வங்கிக் கிளைகளில் கூட்ட நெரிசலைக் குறைப்பதற்காக செய்யப்பட்ட ஏற்பாடு தானே தவிர, வாடிக்கையாளர்களுக்கு காட்டப்படும் சலுகை அல்ல. தானியங்கி பணம் வழங்கும் மையங்கள் அனைத்தும் மூடப்பட்டால் வாடிக்கையாளர்களை விட வங்கிகள் தான் மிகக்கடுமையாக பாதிக்கப்படும்.

இதுதான் உண்மை நிலை. ஆனால், இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் காசோலைகளும், பற்று அட்டைகளும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் இலவச சேவைகள் என அரசு நினைப்பது தவறு. அவற்றுக்காக சேவைக்கட்டணம் செலுத்த வேண்டும் என்று வங்கிகளுக்கு அழுத்தம் கொடுப்பது அதைவிட தவறு.இது வங்கிகளை வாழவைக்கும் வாடிக்கையாளர்களை கொள்ளையடிப்பதற்கு ஒப்பான செயலாகும்.

பொருட்கள் மற்றும் சேவை வரி இயக்குனரகம் கோருவதைப் போன்று வங்கிகள் பின்தேதியிட்டு  சேவை வரி செலுத்துவதாக இருந்தால் குறைந்தபட்சம் ரூ.6000 கோடி செலுத்த வேண்டியிருக்கும். இந்த தொகை முழுவதும் வாடிக்கையாளர்களின் தலையில் தான் செலுத்தப்படும். வாடிக்கையாளர்களுக்கு  இது பெரும் சுமையாக அமையும். இதற்கு அஞ்சி வாடிக்கையாளர்கள் வங்கி முறையிலிருந்து வெளியேற நினைத்தால் அது வங்கிகளுக்கு பெரும் இழப்பாக அமையும்.

எனவே, வங்கிகள் வழங்கும் காசோலைகள், பற்று அட்டைகள் மற்றும் அவை சார்ந்த சேவைகள் அனைத்தையும் இலவச சேவைகளாகக் கருதாமல்  வாடிக்கையாளர்களின் உரிமைகளாக கருத வேண்டும். இதற்காக வரி வசூலிக்கும் முடிவை மத்திய அரசும், கட்டணம் வசூலிக்கும் முடிவை வங்கிகளும் கைவிட வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
 

PREV
click me!

Recommended Stories

ஓட்டுக்காக மாணவர்களுக்கு லேப்டாப்..! முதல்வர் ஸ்டாலினின் தேர்தல் நாடகம்..! அடித்து ஆடும் இபிஎஸ்!
லாட்டரி மார்ட்டின் மகளை ஏமாற்றி திருமணம் செய்தவர் ஆதவ் ஆர்ஜூனா..! விஜய் EX மேலாளர் பகீர் குற்றச்சாட்டு..!