மாநிலங்களவை தேர்தல்..! கே.பி.முனுசாமியால் அதிமுகவில் நீடிக்கும் குழப்பம்..!

By Selva KathirFirst Published Jul 3, 2019, 10:46 AM IST
Highlights

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட கே.பி.முனுசாமி தீவிரமாக முயன்று வருவதால் வேட்பாளர் பட்டியலை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட கே.பி.முனுசாமி தீவிரமாக முயன்று வருவதால் வேட்பாளர் பட்டியலை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மொத்தம் உள்ள 3 எம்.பி. பதவிகளில் ஒன்றை பாமகவிற்கு விட்டுக் கொடுப்பது என்கிற முடிவில் அதிமுக உறுதியாக உள்ளது. இதனால் மற்ற இரண்டு எம்பி பதவிகளுக்கு அதிமுகவில் குடுமி பிடி சண்டை நடைபெற்று வருகிறது. எம்பியாகிவிட்டால் மத்திய அமைச்சர் ஆகும் வாய்ப்பு இருப்பதால் தம்பிதுரை மிகத் தீவிரமாக வேட்பாளராகும் முயற்சில் ஈடுபட்டு வருகிறார். எடப்பாடி பழனிசாமியுடன் தினமும் பேசி தனது வாய்ப்பை உறுதி செய்ய அவர் முயற்சி செய்து வருகிறார். 

இதே போல் ஓபிஎஸ் தரப்பில் கே.பி.முனுசாமி தன்னை ராஜ்யசபா எம்பியாக்க வேண்டும் என்று திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறார். முதலில் இதில் ஆர்வம் காட்டாமல் இருந்து வந்த ஓபிஎஸ் முனுசாமி டெல்லி சென்றால் தனது மகன் ரவீந்திரநாத்துக்கு உறுதுணையாக இருப்பார் என்று நம்புவதாக சொல்கிறார்கள். ஒருவேளை தனது மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கவில்லை என்றால் தனது ஆதரவாளர் என்கிற வகையில் முனுசாமிக்கு வாங்கிவிடலாம் என்று கணக்கு போடுகிறார். 

இதே போல் அனைத்துலக எம்ஜிஆர் மன்ற தலைவர் தமிழ் மகன் உசேனும் ராஜ்யசபா எம்பி கனவில் மிதந்து கொண்டிருக்கிறார். நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட ஒரு முஸ்லீமுக்கு கூட வாய்ப்பு கொடுக்கவில்லை. எனவே மாநிலங்களவை தேர்தலில் கட்டாயம் முஸ்லீமான தனக்கு கொடுக்க வேண்டும் என்று அவர் வெளிப்படையாகவே தலைமையை வலியுறுத்தி வருகிறார். போதாக்குறைக்கு அனைத்து மாவட்ட அனைத்துலக எம்ஜிஆர் மன்றம் சார்பில் இதற்காக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

இப்படி மூன்று பேர் 2 பதவிக்கு அடித்துக் கொண்டிருக்கும் நிலையில் யாரை வேட்பாளராக்குவது என்பதில் அதிமுகவில் குழப்பம் நீடிக்கிறது. தமிழ் மகன் உசேனையும் தம்பிதுரையையும் டெல்லிக்கு அனுப்பலாம் என்று எடப்பாடி தரப்பு முயற்சிக்க தம்பிதுரைக்கு பதிலாக முனுசாமியை அனுப்ப வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பு மல்லுகட்டுவதாக கூறுகிறார்கள். 

ஆனால் நாடாளுமன்ற தேர்தலில் கொடுத்த வாய்ப்பை பயன்படுத்தி முனுசாமி ஜெயிக்காத நிலையில் அவருக்கு எப்படி மறுபடியும் வாய்பு கொடுப்பது என்று எடப்பாடி தரப்பு கேள்வி எழுப்ப, தம்பிதுரை மட்டும் என்ன கரூரில் ஜெயித்துவிட்டாரா என்று ஓபிஎஸ் தரப்பு பதில் கேள்வி எழுப்பி வருகிறது. இதனால் முனுசாமி மற்றும் தம்பிதுரைக்கு பதிலாக கொங்கு மண்டலத்தை சேர்ந்த ஒரு கவுண்டரை எம்பியாக்க எடப்பாடி மனம் மாறியுள்ளதாகவும் பேசுகிறார்கள்.

click me!