மோடி சொல்வதெல்லாம் பொய் ! ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலில் ராஜிவ் சுற்றுலா செல்லவில்லை … அடித்துச் சொல்லும் முன்னாள் கடற்படைத் தலைவர் !!

By Selvanayagam PFirst Published May 9, 2019, 9:28 PM IST
Highlights

ராஜிவ் காந்தி போர் கப்பலில் சுற்றுலா சென்றார் என மோடி சுமத்திய குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்துள்ள முன்னாள் கடற்படைத் தலைவர் வினோத் பஸ்ரிசா, ராஜிவ் காந்தியும், சோனியாவும் இரண்டு நாள் அரசு முறைப் பயணமாகத்தின் விக்ராந்த்  கப்பலில் பயணித்ததாக  தெரிவித்துள்ளார்.
 

நேற்று ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி போர்க்கப்பலில் சுற்றுலா சென்ற குடும்பத்தை பற்றி நீங்கள் எங்காவது கேள்விப்பட்டதுண்டா? இதுகுறித்து அதிர்ச்சியடைய வேண்டாம். ஏனென்றால், இது நம்முடைய நாட்டிலேயே நடந்துள்ளது. இந்நாட்டின் பெருமையான ஐ.என்.எஸ் விராட் போர்க்கப்பலை காங்கிரஸ் குடும்பம் அவர்களது சொந்த டாக்ஸி போல பயன்படுத்தியுள்ளனர்.

அச்சமயத்தில் ஐ.என்.எஸ் விராட் கடல்சார் எல்லைப் பகுதிகளை பாதுகாத்துக்கொண்டிருந்தது. ஆனால் சுற்றுலா சென்றிருந்த காந்தி குடும்பத்தை அழைத்து வருவதற்காக அக்கப்பல் அனுப்பப்பட்டது. இதனால் நாட்டின் பாதுகாப்பு ஆபத்தில் தள்ளப்பட்டுள்ளதா இல்லையா? என்று கேள்வியெழுப்பினார். 

இந்நிலையில், மோடியின் குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானது  என ஓய்வுபெற்ற கடற்படை தலைவர் வினோத் பஸ்ரிசா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேட்டி அளித்த அவர் , முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியும், அவரது மனைவி சோனியா காந்தியும் இரண்டு நாள் அரசு பயணமாக ஐ.என்.எஸ் விராட் போர்க்கப்பலில் பயணித்தனர். அனைத்து விதிமுறைகளும் கடைப்பிடிக்கப்பட்டது. வெளிநாட்டவர்களோ, விருந்தினர்களோ யாரும் கப்பலில் இல்ல்லை. யாரும் விடுமுறை சுற்றுலாவிற்கும் செல்லவில்லை. ராஜிவ் காந்தி மட்டும் தனது குடும்பத்துடன் இருந்தார்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், முன்னாள் கடற்படைத் தலைவர் எல்.ராமதாஸ் பேசுகையில், காந்தி குடும்பத்தின் சொந்த பயன்பாட்டிற்கோ, வெளிநாட்டவர்களின் பயன்பாட்டிற்கோ எந்தப் போர்க்கப்பலும் பயன்படுத்தப்படவில்லை. 

அந்நாளில் ராஜிவ் காந்தி திருவனந்தபுரத்தில் நடைபெற்ற பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அங்கிருந்து தீவுகள் மேம்பாட்டு ஆணையத்தின் கூட்டத்திற்கு தலைமை தாங்குவதற்காக போர்க்கப்பலில் லட்சத்தீவுகளுக்கு பயணித்தார். தீவுகள் மேம்பாட்டு ஆணையத்தின் கூட்டம் அந்தமானிலும், லட்சத்தீவுகளிலும் மாறிமாறி நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.

click me!