7 தமிழர் விடுதலை... முட்டுக்கட்டை போடும் பாஜக! பிரமுகர் பேச்சால் பெரும் சர்ச்சை!

By vinoth kumarFirst Published Sep 7, 2018, 10:01 AM IST
Highlights

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 தமிழர்கள் விடுதலை குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் தமிழக அரசுக்கு உண்டு என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தும் கூட பாஜகவினர் சொத்தை வாதங்களை முன்வைத்து மூர்க்கமாக முட்டுக்கட்டை போட்டு வருகிறது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 தமிழர்கள் விடுதலை குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் தமிழக அரசுக்கு உண்டு என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தும் கூட பாஜகவினர் சொத்தை வாதங்களை முன்வைத்து மூர்க்கமாக முட்டுக்கட்டை போட்டு வருகிறது.  ராஜீவ் கொலை வழக்கில் 27 ஆண்டுகாலம் சிறை வாசம் அனுபவித்து வரும் 7 பேரை விடுதலை செய்யலாம் என்பது தமிழக அரசின் கொள்கை முடிவு. ஆனால் மத்திய அரசு இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கு விசாரணை 4 ஆண்டுகாலமாக நடைபெற்று வந்தது.

இதேபோல் ஆளுநரிடம் தாம் கொடுத்த 7 பேரின் கருணை மனு மீது முடிவெடுக்க கோரி உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் ஒரு மனுத் தாக்கல் செய்தார். இம்மனுவும் உச்சநீதிமன்ற விசாரணையில் நிலுவையில் இருந்து வந்தது. இவ்வழக்குகளை நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், நவீன் சின்கா, கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் நேற்று விசாரித்து தீர்ப்பளித்தது. அதில், பேரறிவாளன் கொடுத்த கருணை மனு மீது ஆளுநர் முடிவெடுக்க வேண்டும்; 7 பேரை விடுதலை செய்யும் அதிகாரம் தமிழக அரசுக்கு உண்டு என தீர்ப்பளிக்கப்பட்டது. 7 தமிழர்கள் மீதான வழக்கை சிபிஐ விசாரித்ததால் தாங்களே முடிவெடுக்க முடியும் என்பது மத்திய அரசின் நிலைப்பாடாக இருந்தது. ஆனால் அரசியல் சாசனத்தின் 161-வது பிரிவின் கீழ் தண்டனை கைதிகளை மாநில அரசு விடுதலை செய்ய முடியும் என்பதை உச்சநீதிமன்றம் உறுதி செய்திருக்கிறது. 

அரசியல் சாசனத்தின் 161 வது பிரிவு இதுதான்: The Governor of a State shall have the power to grant pardons, reprieves, respites or remissions of punishment or to suspend, remit or commute the sentence of any person convicted of any offence against any law relating to a matter to which the executive power of the State extends. 

இந்த பிரிவின் கீழ் மாநில அமைச்சரவை கூடி 7 பேரை விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரைக்கலாம். இந்த பரிந்துரையை முதல் முறை ஆளுநர் திருப்பி அனுப்ப முடியும். ஆனால் 2-வது முறை மாநில அமைச்சரவை அனுப்பினால் ஆளுநர் ஒப்புதல் தெரிவித்தாக வேண்டும் என்பதுதான் நடைமுறை என்கின்றனர் சட்ட வல்லுநர்கள். இந்திய அரசியல் சாசனத்தின் 72-வது பிரிவானது தண்டனை கைதிகள் விடுதலை தொடர்பாக ஜனாதிபதிக்கு அதிகாரம் வழங்குகிறது. மத்திய அமைச்சரவை கூடி தண்டனை கைதிகள் விடுதலை அல்லது தண்டனை குறைப்பு குறித்து பரிந்துரைத்தால் ஜனாதிபதி ஒப்புதல் தெரிவித்தாக வேண்டும். அதேபோல் மாநிலங்களுக்கான உரிமைகள் அடிப்படையில் ஆளுநர் முடிவெடுக்க அரசியல் சாசனத்தின் 161-வது பிரிவு வழிவகை செய்கிறது. 

தற்போதைய நிலையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புப் படி மாநில அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என்பது தெளிவாக இருக்கிறது. ஆனால் மத்தியில் ஆளும் பாஜகவினர் குரலோ இதற்கு முட்டுக்கட்டை போடும் வகையில் இருக்கிறது. அதாவது அரசியல் சாசனத்தின் 161-வது பிரிவு தொடர்பான வழக்குகளில் appropriate govt என்கிற ஒரு அம்சம் இருக்கிறது. அதாவது மாநில அமைச்சரவை கூடி பரிந்துரைத்தாலும் ஆளுநர் “appropriate govt”-ம் கேட்டுதான் முடிவெடுக்க வேண்டும். அந்த appropriate govt என்பது மத்திய அரசுதான் என வாதிட்டு வருகிறது. ஆனால் அரசியல் சாசனத்தின் 161-வது பிரிவு தெள்ளத் தெளிவாகவே மாநில அரசின் முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டாக வேண்டும் என இருக்கிறது. பாஜகவினர் வாதப்படி பார்த்தால் அரசியல் சாசனம் மாநில அரசுகளுக்கு வழங்கியுள்ள அதிகாரத்தை பறிப்பதாகவே இருக்கிறது.

அதுவும் பாஜகவின் வழக்கறிஞர் குமரகுரு தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் 161-வது பிரிவின் கீழ் ஆளுநருக்கு பரிந்துரைத்தாலும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சிபிசி) 432-ன் கீழ் மத்திய அரசின் ஒப்புதல் பெற்றாக வேண்டும் என்கிற அபத்த வாதத்தை வைக்கிறார். குற்றவியல் நடைமுறைச் சட்டத்தைவிட மேலானது அரசியல் சாசனம், பாஜகவைப் பொறுத்தவரையில் 7 தமிழர் விடுதலையைத் தடுத்தாக வேண்டும் என்பதால் சொத்தை வாதங்களை முன்வைத்து சட்ட மொழிகளில் விளையாட்டு காட்டி வருகிறது. 

இவர்கள் இன்னொன்றையும் மறந்துவிட்டு பேசுகிறார்கள்... மறைந்த முதல்வர் ஜெயலலிதா, 1994-ம் ஆண்டு ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தார். அச்சட்டம் என்ன தெரியுமா? தமிழக சிறைகளில் 20 ஆண்டுகளுக்கு மேல் எந்த தண்டனை கைதியும் இருக்கக் கூடாது என்பதுதான். இந்த சட்டத்தின் கீழ்தான் நளினியை விடுதலை செய்வது தொடர்பாக மாநில அரசு முடிவெடுக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதுவும் அரசியல் சாசனத்தின் 161-வது பிரிவின் கீழ் முடிவெடுக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. ஆனால் மூல வழக்கு உச்சநீதிமன்றத்தின் நிலுவையில் இருந்ததால் நளினியின் விடுதலை தாமதமாகியது என்கிற நிதர்சனத்தையும் மறந்துவிடுகிறார்கள்!

click me!