ரஜினிகாந்த் அவசர ஆலோசனை... விரைவில் கட்சி பெயர், தேதி, கொடி அறிவிப்பு!

By vinoth kumarFirst Published Oct 22, 2018, 1:59 PM IST
Highlights

ஜெயலலிதா, கருணாநிதி எனும் தமிழகத்தை ஆட்டிப்படைத்துவந்த இருபெரும் ஆளுமைகளின் மறைவிற்குப்பிறகு தனது இறுதியான முடிவை எடுத்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

ஜெயலலிதா, கருணாநிதி எனும் தமிழகத்தை ஆட்டிப்படைத்துவந்த இருபெரும் ஆளுமைகளின் மறைவிற்குப்பிறகு தனது இறுதியான முடிவை எடுத்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். 

கட்சி தொடங்குவதற்கான பூர்வாங்கவேலைகள் 90 சதவிகிதம் முடிந்துவிட்டது என வாக்குமூலமே அளித்துவிட்டார். இந்த நிலையில்தான் முதன்முறையாக இன்று தனது அமைப்பின் முக்கிய நிர்வாகிகளோடு, திட்டமிடப்படாத அவசர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

ரஜினிகாந்துக்கு சொந்தமான கோடம்பாக்கம் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இந்த ஆலோசனை நடைபெற்றுவருகிறது. இதற்கு முன்னதாக புதிய நீதிக்கட்சியின் தலைவரும் தற்போது ரஜினிகாந்தின் வலதுகரமாகவும் மாறி உள்ள ஏ.சி.சண்முகம் சென்னை போயஸ்கார்டன் இல்லத்தில் சுமார் 4 மணி நேரம் மாரத்தான் ஆலோசனையில் ஈடுபட்டார். 

இந்த ஆலோசனையின்போது, புதிய கட்சிக்கான ஃபண்டு ஃப்ளோ அதாவது கட்சிக்கான தொடர்நிதியை எப்படிப்பெருக்குவது, எம்.ஜி.ஆர் மன்றத்தைச்சேர்ந்த ஏற்கனவே ரஜினிகாந்த் பக்கம் சாய்ந்துவிட்ட பெரும் பண முதலைகளான சைதை துரைசாமி,  ஐசரிவேலனின் மகன் ஐசரி கணேசன், ஜேப்பியாரின் மகள், வேலூர் வி.ஐ.டி. விசுவநாதன், எஸ்.ஆர்.ராதா, கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பெரும்புள்ளிகளை ஒருங்கிணைப்பது பற்றிய முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார்களாம்.  

துணைமுதல்வர் கனவில் மிதந்துவரும் ஏ.சி.சண்முகம் ரஜினி கட்சிக்காக எவ்வளவு செலவையும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறாராம்.  இந்த நிலையில் ரஜினியின் இந்த அவசர ஆலோசனை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. வெளியில் குழப்பவாதியாக பார்க்கப்படும் ரஜினிகாந்த் உண்மையில் ஒவ்வொரு அடியையும் பார்த்துப்பார்த்துதான் வைத்துவருகிறார். உதாரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தைப் பொறுத்தவரை, பெரும்பான்மை சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு நபராகத் தேடிப்பிடித்து, அதே நேரத்தில் பெரும்பசையுள்ள பார்ட்டியான ஜெயகிருஷ்ணனை நியமித்துள்ளார். 

இது ஒரு சாம்பிள்தான். இதேபோல்தான் தமிழகம் முழுவதும் பசையுள்ள ஆட்களாகத் தேடிப்பிடித்து பொறுப்புகளுக்கு நியமித்துவருகிறார் ரஜினி. அந்த முக்கியமான மாவட்ட மற்றும் மாநில பொறுப்புகளில் உள்ள நிர்வாகிகளை அழைத்துத்தான் இன்று அவசர ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறார் ரஜினி. இந்த ஆலோசனையை அடுத்து மிக விரைவிலேயே ரஜினி தன் கட்சியின் கொடி, பெயர், கட்சி துவங்கும் தேதியை  அறிவிப்பார் என நம்பலாம்.

click me!