
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களை ரஜினிகாந்த் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியபோது, ரஜினியை யார் என கேட்டு இளைஞர் ஒருவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின்போது நடந்த வன்முறையில், போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த பலர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள், ஆட்சியாளர்கள், அரசியல் தலைவர்கள் மீதான மீதான அதிருப்தியை அவ்வப்போது வெளிப்படுத்தி வருகின்றனர். துப்பாக்கிச்சூட்டில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமைச்சர் கடம்பூர் ராஜூவை கேள்விக் கணைகளால் துளைத்தெடுத்தனர். அதன்பிறகு துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் நேரில் சந்தித்தபோதும் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
இந்நிலையில், அரசியல் கட்சி தொடங்க உள்ள ரஜினிகாந்த், இன்று தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது, இளைஞர் ஒருவரிடம் ரஜினி நலம் விசாரித்தபோது, நீங்கள் யார்? என கேட்டு அந்த இளைஞர் அதிருப்தியை வெளிப்படுத்தினார். இந்த கேள்வியை சற்றும் எதிர்பார்த்திராத ரஜினி, சிரித்துக்கொண்டே இளைஞரிடம் நலம் விசாரித்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்.
இன்று காலை தூத்துக்குடிக்கு புறப்படும் முன்னர் சென்னை போயஸ் கார்டனில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், ஒரு நடிகர் என்ற வகையில், தன்னை பார்த்ததும் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மக்கள் மகிழ்ச்சியடைவர் என தெரிவித்து விட்டு தூத்துக்குடிக்கு சென்றார். இந்நிலையில், இளைஞர் ஒருவர், நீங்கள் யார் என ரஜினியிடம் கேட்டது, அவருக்கு சற்று அதிருப்தியை அளித்திருக்கும்.
ரஜினி நடித்த ராஜா சின்ன ரோஜா திரைப்படத்தில், ”சூப்பர் ஸ்டாரு யாருனு கேட்டா.. சின்ன குழந்தையும் சொல்லும்” என்ற பாடல் இடம்பெற்றிருக்கும். ரஜினியை தெரியாதவர்களே இருக்க முடியாது என்பதை உணர்த்தும் வகையில் அந்த வரி அமைந்திருக்கும். சின்ன குழந்தைக்கு கூட ரஜினியை தெரியும் என்றார்கள்; ஆனால் விவரம் அறிந்த வயதுக்காரருக்கே ரஜினியை தெரியாமல் போயிற்றே...?